

தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைந்து அமுதம் எடுக்க முற்பட்டபோது மந்தர மலை தள்ளாடியது. அப்போது திருமால் கூர்ம அவதாரம் எடுத்து மலையைத் தூக்கித் தாங்கினார். முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டதால் அனைவரும் பயந்து ஓடியபோது, திருமால் கூர்ம அவதார வடிவில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார்.
அந்த சிவலிங்கத்துக்கு ‘கச்சபேஸ்வரர்’, ‘கச்சாலீஸ்வரர்' என்ற பெயர்கள் ஏற்பட்டன. கச்சபம், கூர்மம் என்றால் ஆமை என்று பெயர். ஆமை உடலோடு திருமால் சிவலிங்கத்தைப் பூஜை செய்யும் கோலத்தில் காணப்படும் இந்தச் சிற்பம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் ராஜகோபுரத்துக்கு முன்புள்ள பதினாறு கால் மண்டபத் தூண் ஒன்றில் உள்ளது. தலையில் அழகிய கிரீடம், காதுகளில் குண்டலங்கள், மேல் கரங்களில் சங்கு சக்கரம் தாங்கிய வண்ணம், கீழ் கரங்களில் குடத்தின்மூலம் அபிஷேகம் செய்வதுபோல் உள்ளார்.
இடையில் அழகிய அணிமணிகளும் திகழ்கின்றன. ராஜகோபுரமும் அதற்கு முன்புறம் எட்டு கால் மண்டபம் மற்றும் பதினாறு கால் மண்டபம் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டவை. ஆனால் இத்திருக்கோயில் பல்லவர்கள் காலத்துக்கு முன்பே சிறப்புற்றிருந்ததாக இங்குள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது. காஞ்சிபுரம் நகரில் கச்சபேஸ்வரர் என்ற பெயரில் தனிக்கோயிலும் உள்ளது. மேலும் சென்னை நகரில் பிராட்வே பகுதியில் கச்சாலீஸ்வரர் என்ற பெயரில் ஒரு திருக்கோயிலும், சிங்கப்பெருமாள் கோயில் அருகில் திருக்கச்சூர் என்ற ஊரில் ஸ்ரீ கச்சபேஸ்வரர் என்ற பெயரில் ஒரு திருக்கோயிலும் உள்ளன. ஸ்ரீகூர்மம், கூர்ம அவதாரத்தின் பெயரிலேயே, கருவறையில் ஆமை வடிவிலேயே இறைவன் அருள் பாலிக்கும் அற்புத திருத்தலம் ஆகும். ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீ காகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ கூர்மம்.