

அரிதான சில வேளைகளிலேயே இயேசு தன்னை வெளிப் படுத்திக்கொண்டார். அதையும் நேரடியாகவோ, உருவகங்கள் மூலம் மறைமுகமாகவோதான் காட்டினார். ஒருமுறை அவர் சொன்னார்: “நானே நல்ல ஆயன். ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ள நல்ல ஆயன் நானே” என்றார்.
ஆயர்கள் என்று தங்களை அழைத்துக்கொண்டோரில் பலவகையினர் இருந்தனர் என்பது மக்களுக்குப் புரிந்திருந்தது. சிலர் வாழ்வாதாரத்துக்காக மேய்த்தவர்கள். இந்த வேலைக்குக் கிடைத்த கூலியில்தான் அவர்கள் கவனம் இருந்ததே தவிர, ஆடுகளின் மீது அவர்களுக்கு அக்கறையில்லை. ஆடுகளுக்கு ஓர் ஆபத்து என்றால், ஆடுகளைப் பாதுகாப்பதில் துளியும் அக்கறையின்றி, தங்களைக் காத்துக் கொள்ள ஆடுகளை விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். எனவே இயேசு சொன்னார்: “கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு, ஆடுகளை விட்டுவிட்டு ஓடிப்போவார். ஓநாய், ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.”
ஆயர்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தோரில் இவர்களைவிட ஆபத்தான சிலர் இருந்தனர். தீய மனம் கொண்ட இவர்களின் இலக்கோ கூலி அல்ல; ஆடுகளே இவர்களின் இலக்கு. ஆடுகளைத் திருடி விற்பது அல்லது அவற்றைக் கொன்று, உண்டு ஏப்பம் விடுவது மட்டுமே இவர்களின் குறிக்கோள். எனவேதான் “திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்கும் அன்றி வேறு எதற்கும் திருடர் வருவதில்லை” என்றார் இயேசு.
அன்பும் அக்கறையும்
இந்த இரு வகையினரைப் போலன்றி ‘ஆடுகளின்மீது உண்மை யான அக்கறைகொண்டு அவற்றைக் காக்கும் நல்ல ஆயன் நான்’ என்றார் இயேசு. ஆடுகளுக்காகத் தன் உயிரையே தரும் அளவுக்கு ஆடுகளின்மீது ஆழ்ந்த அன்பும் அக்கறையும் கொண்ட ஆயன் நான் என்றுதான் அவர் சொல்ல விழைந்தார்.
சரியான வழியை அறிந்தவரும் அந்த வழி என்னவென்று காட்டுபவரும் அந்த வழியில் தானே முன்செல்ப வருமே உண்மையில் நல்ல ஆயன்.
ஆயன் இறைவன் என்றால் ஆடுகளோ மானிடரான நாம்தான். இறைவன் நம்மைப் பாதுகாத்து வழிநடத்துபவர்; நமக்காகத் தம் உயிரைத் தரும் அளவுக்கு நம் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர்; நமக்கு முன்னே நடந்து நாளை நாம் எதிர்கொள்ளவிருப்பதை எல்லாம் இன்றே சந்தித்து நமக்கு வழிகாட்டும் நல்லவர்; சிந்தை இழந்து அவரது மந்தையைவிட்டு விலகி, துன்பங்களின் முட்புதரில் நாம் சிக்கிக்கொண்டால் மறவாமல் நம்மைத் தேடிவருபவர்.
“இறைவனே எனது ஆயன். எனவே குறையொன்றும் எனக்கில்லை” என்று தொடங்கும் நெகிழ்ச்சியான பாடல் ஒன்று பைபிளில் உள்ளது (திருப்பாடல் 23). நல்ல ஆயனாகிய இறைவனின் கனிந்த பேரன்பைப் பெற்று மகிழும் நாம், நம்மைச் சார்ந்திருக்கும் ஆடுகளை எப்படி நடத்துகிறோம் என்பதுதான் இயேசுவின் சொற்கள் வாயிலாக நாம் எழுப்பிக்கொள்ள வேண்டிய கேள்வி.
பெற்றோர், ஆசிரியர்கள், முதலாளிகள், அதிகாரிகள், தலைவர்கள், நீதிபதிகள் எல்லோரும் ஆயர்கள்தான். ஆடுகளின்மீது கொண்ட அக்கறையால் அவர்களைப் பாதுகாக்க அனைத்தும் செய்யும் நல்ல ஆயர்கள் எத்தனை பேர்?
'சிங் சிங்' என்பது ஒரு சிறையின் பெயர். அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட சிறை இதுதான். கைதிகளாக அங்கிருந்தோர் மிக ஆபத்தான குற்றவாளிகள் என்பதால் இந்தச் சிறைக்கு பொறுப்பேற்க அதிகாரிகள் மிகவும் தயங்கினர். 1921-ம் ஆண்டு இச்சிறைக்குப் பொறுப்பேற்றார் லூயிஸ் லாஸ் என்கிற அதிகாரி. அவர் பொறுப்பேற்றபோது அவரது மனைவி கேத்தரினிடம் பேசியவர்கள் அவரோ அவர்களின் குழந்தைகளோ சிறைக்குள் அடி எடுத்து வைப்பது ஆபத்து என்று எச்சரித்தனர்.
“சிறையில் இருக்கும் கைதிகளைப் பாதுகாப்பது எங்கள் இருவரின் கடமை. எங்களைப் பாதுகாப்பது கைதிகளின் கடமை. எனவே எனக்குக் கவலை சிறிதும் இல்லை” என்றார் கேத்தரின். கைதிகளின் குறைகளைப் பொறுமையாகக் கேட்டு ஆவன செய்தார். பார்க்கும் திறன் இழந்த கைதி ஒருவருக்கு ப்ரெய்ல் முறை மூலம் படிக்கக் கற்றுத் தந்தார். பார்வை இருந்தாலும் பேசவும் கேட்கவும் முடியாத கைதி ஒருவன் சொல்ல நினைத்ததைப் புரிந்துகொள்ள சைகை மொழியைக் கற்றுக்கொண்டார். கைதிகளுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு வந்து தந்தார்.
அவரது கணவர் சிறைக்குப் பொறுப்பேற்ற நாளிலிருந்து 16 ஆண்டுகளில் சிறைக்கைதிகளை தமது பிள்ளைகள்போல் நடத்திய கேத்தரின், 1937ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் நாள் ஒரு விபத்தில் இறந்தார். கேத்தரின் அம்மையாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கைதிகள் கேட்க, சிறைத் துறையிலிருந்து அனுமதி வழங்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கைதிகள் வரிசையில் ஏறத்தாழ ஒரு மைல் தூரம் நடந்துபோய், வழி மாறிய அந்த ஆடுகளுக்குத் தாயாக இருந்து அன்பு காட்டிய அந்தப் பெண்ணுக்கு தங்கள் கண்ணீரைக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு சிறைக்குத் திரும்பினர். கண்காணிக்க யாருமே இல்லாத சூழலிலும் ஒரு கைதிகூட அங்கேயிருந்து தப்ப முயலவில்லை.
நம் பொறுப்பில் இருப்போரை, நம்மை நம்பி நம்மைச் சார்ந்திருப்போரை எந்நாளும் காத்து வழிநடத்தும் நல்ல ஆயர்களாக நாம் இருக்க வேண்டும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com