

ராமாநுஜர் தனக்குப் பின்னால் கைகாட்டிய ஆச்சார்யர்களில் ஒருவர் பெரிய திருமலை நம்பிகள். ராமாநுஜரின் தாய்மாமனும் ஆவார். இவர், திருமலையில் வேங்கடவனுக்குத் தீா்த்த கைங்கரியம் செய்தார்.
பெரிய திருமலை நம்பிகள் ஒருநாள் பெருமாள் திருமஞ்சனத்துக்கு பாபநாசத்திலிருந்து தீர்த்தம் எடுத்துவந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வேடுவன் தனக்குத் தாகமாக இருப்பதாகச் சொல்லித் தண்ணீர் கேட்டார். பெருமாள் திருமஞ்சனத்துக்காகத் தண்ணீர் எடுத்துப் போவதைச் சொன்ன திருமலை நம்பிகள், காலதாமதம் ஆகிவிடும் என்று கொடுக்க மறுத்தார். தொடர்ந்து நடந்துபோனபோது, பானை லேசாக ஆவதை உணர்ந்தார். வேடுவன் அந்தப் பானையில் அம்புவிட்டு ஒழுகும் தண்ணீரைக் குடிப்பதையும் பார்த்தார். பெரிய திருமலை நம்பிகள் கோபத்துடன் பெருமாளுக்கான திருமஞ்சனத் தண்ணீரைக் குடிப்பதற்கு வெட்கமாக இல்லை என்று கேட்டார். எனக்கான தண்ணீரை நான் குடிக்காமல் வேறு யார் குடிப்பது என்று வேடன் விநயத்துடன் கேட்டார். பின்னர் ஸ்ரீநிவாசனாகக் காட்சி கொடுத்தார்.
தினசரி இவ்வளவு தூரம் நடந்து திருமஞ்சனத்துக்கு நீர் எடுக்க வேண்டாமென்று கூறி, அம்பால் நிலத்தைத் துளைத்து அங்கேயே ஊற்றை உருவாக்கி, “தாத, இங்கிருந்தே தீர்த்தம் கொண்டுவாரும் என்று அருளினார். அந்த இடமே இன்றும் ஆகாச கங்கை என்று புகழ்பெற்று விளங்குகிறது. கடவுளே ‘தாத’ என்று மரியாதையுடன் அழைத்ததால் தாதாச்சார்யர் என்று அவர் பெயர் பின்னர் வழங்கியது.
நம்மாழ்வாரால் ‘திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே’ என்று பாடப்பட்ட திருவேங்கடத்தின் அடிவாரத்தை வந்தடைந்த ராமாநுஜருக்கு மலை மேல் ஏறக் கூசியது. கால் பாதத்தால் நடக்க விரும்பாத ராமாநுஜர் தனது முழங்கால் கொண்டே மலையில் ஏறினார். பெரிய திருமலை நம்பிகள் ராமாநுஜரை வரவேற்க சன்னியாசி மரியாதையாக பூரணகும்பம், மாலை, பெருமாள் பிரசாதத்துடன் காத்திருந்தார்.
கடவுளால் மரியாதையுடன் அழைக்கப்பட்ட பெரிய திருமலை நம்பிகள் தம்மை வரவேற்க வருவதைப் பார்த்து சங்கடப்பட்டார் ராமாநுஜர். என்னை வரவேற்க ஒரு சிறியவனை அனுப்பலாகாதோ என்று கேட்டார். அடியேன் திருமலை பூராவும் தேடினேன், அடியேனைக் காட்டிலும் ஒரு சிறியவனைக் காணப் பெற்றிலேன் என்றார் பெரிய திருமலை நம்பிகள்.
மேலும் திருமலை திருப்பதியில் தீர்த்த கைங்கரியத்தைச் செய்துவிட்டு, மலை மீதிருந்து இறங்கிவந்து ராமாநுஜருக்கு ராமாயணத்தைச் சொன்னவர் பெரிய திருமலை நம்பிகள். பெரிய திருமலை நம்பிகளைப் போலே தான் வைணவ லட்சணம் பொருந்தியவளாக அடியாள் இல்லையே என்று ராமாநுஜரிடமே தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com