

கடவுளரும், இதிகாச, புராண வரலாற்றுக் கதாபாத்திரங்களும், அரச, துறவு வாழ்க்கையும் ஆலயத்தில் உள்ள பிரதான சிற்பங்களில் அதிகம் இடம்பெறும். கோயிலின் சுற்றுப்புறங்களை அலங்கரிக்கும் சிற்பங்களில் பெரும்பாலும் எளிய மக்களின் வாழ்க்கை, அன்றாடம் வெளிப்படும். திருக்கோயிலைச் சுற்றி வருபவர்கள் பெரும்பாலும் அருகில் உள்ள பெரிய சிற்பங்களை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள்.
ஆனால் தூண்கள், சுற்றுச் சுவர்களை அலங்கரிக்கும் சிறிய அளவிலான சிற்பங்களை நின்று ரசிப்பதில்லை. இந்தச் சிற்பத்தை பதினேழாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட வைகுண்டம் கள்ளப்பிரான் கோயிலில் காணலாம். உயரம் ஒன்றரை அடி இருக்கலாம். குறவர் குடிகளின் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் சிற்பம் இது. இந்தக் குறத்தியை பாருங்கள். வலது கை அருகே ஒரு பிள்ளை, இடதுதோளின் மீது ஒரு பெண் மகவு, மடியிலே தூளி போன்று கட்டிய துணியில் இளம் சிசு ஒன்றும் இருப்பதைக் காணலாம்.
இடது கையில் முழங்கையால் பின்னிய கூடையை தாங்கிக்கொண்டு, தோள் மீது உள்ள குழந்தை சாப்பிடுவதற்கு ஏதுவாக கிண்ணத்தை ஏந்திய நிலையில், வலது கையால் ஒரு பிள்ளையின் தலைமேல் கைவைத்து ஓடிவிடாமல் பிடித்தபடி அழைத்துச் செல்கிறாள். அவனும் கையிலே கிண்ணத்தை ஏந்தியபடி தின்பண்டம் உண்கிறான். இப்போதுதான் கடைவீதிக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவருவது போல் தெரிகிறது. கையில் வைத்துள்ள கூடையின் பின்னல் அமைப்பு அற்புதமாகக் காட்டப்பட்டுள்ளது. கழுத்தில் பாசிமணி, பவளமணி முதலியவற்றை அணிந்திருக்கிறாள். கைகளில் காப்பு, வளை முதலியன காணப்படுகின்றன..
அளக பாரத்தை கொண்டையில் சொருகி இருப்பது இயல்பாக உள்ளது. நடந்து செல்லும்போது காற்றில் பறக்கும் ஆடைகளும், அவற்றில் காணப்படும் மெல்லிய கோடுகளும் கல்லில் வடித்த சிற்பம் என்று தெரியாதபடி உள்ளன.
சிற்பக்கலை பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் காலத்திலேயே சிறப்புற்றதாக இருப்பினும், நாயக்க மன்னர்கள் காலத்தில்தான், எளிய மக்களின் வாழ்க்கை, கோயில் சிற்பங்களில் பிரதிபலிக்கத் தொடங்கியது.