

கும்பகோணம் அருகில் திருநரையூர் என்னும் திவ்யதேசம் உள்ளது. திருமங்கையாழ்வாருக்கு பஞ்ச சம்ஸ்காரம் நடைபெற்ற இடம் இது. சங்கு சக்கர முத்திரை பதித்தல், திருமண் காப்பிடுதல், தாஸ்ய நாமம் சூட்டுதல், மந்திர தீட்சை அளித்தல், யக்ஞம் ஆகியவைதான் பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும். திருநரையூர் திவ்ய தேசத்தைத் தனது பெயரிலேயே கொண்டவராக பிள்ளை திருநரையூர் அரையர் இருந்தார்.
இவர் ஒரு நாள் தொட்டியம் திருநாராயணபுரம் வேத நாராயண பெருமாளைச் சேவிப்பதற்காகக் குடும்பத்துடன் சென்றார். அங்கு திருக்கோயில் புதுப்பிக்கும் பணி நடந்துகொண்டிருந்தது. கோயில் கும்பாபிஷேகம் வரை ஓலைத் தட்டியால் மறைத்து உட்புறமாக ஊழியர்கள் சுண்ணம் அடிப்பது, சிலைச் சீரமைப்பு போன்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அந்தச் சமயத்தில் யாரோ கோயிலுக்குத் தீமூட்டிவிட்டனர். காற்று வீசியடித்ததன் காரணமாக நெருப்பு கோயிலெங்கும் பரவியது. ஊழியர்களும் சேவார்த்திகளும் நெருப்பைப் பார்த்து பயந்து ஓடிவிட்டனர். அந்த நிலையில் அங்கு வந்த பிள்ளை திருநரையூரார் பதறிப் போனார். அச்சோ..! இறைவன் மீது தீ சுட்டு விடுமே ! என ஓடிச் சென்று இறைவனின் மீது தன் உடலைக் கொண்டு தீப்படாமல் மறைத்துக் கொண்டார்.
தீ கோயிலை எரித்துக் கொண்டிருந்தது. திருநரையூரார், இறைவனின் மென்மையான மேனி தாங்காதே என, தன்மீது தீயை வாங்கி தன் உடலை எரித்துக் கொண்டார். அவரது மனைவி, பிள்ளைகளும் திருமேனியைச் சேர்த்துக் கட்டிக்கொண்டனர். அர்ச்சிக்கும் உருவத்தில் தெய்வத்தைக் கண்டதாலேயே அவர்கள் பகவானைத் தீயிலிருந்து பாதுகாக்க நினைத்தனர்.
பிள்ளை திருநரையூர் அரையரின் பக்தியைக் கொண்டாடிய பிள்ளை லோகாசாரியார் எழுதிய வசன பூஷணத்தில் ‘உபேயத்துக்கு இளைய பெருமாளையும் பெரிய உடையாரையும் பிள்ளை திருநரையூர் அரையரையும் சிந்தயந்தியையும் போலேயிருக்க வேணும்’ என அருளியுள்ளார். மேலும் மற்றுமொரு இடத்தில் பெரிய உடையாரும் பிள்ளை திருநரையூர் அரையரும் உடம்பை விலக்கினார்கள் என்று அருளிச் செய்துள்ளார்.
கடவுளுக்குப் பயன்படாத இந்த சரீரம் எதற்கு என்று அடியாள் நினைக்கவில்லையே என்று ராமானுஜரிடம் தன்னையே நொந்துகொண்டாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com