

திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் நிகழ்வாகும். ஆங்கில மாதம் ஜூன், ஜூலைக்கு இடைப்பட்டட காலத்திலும், தமிழ் மாதம் ஆனி உத்திர நட்சத்திரத்திலும், இந்த ஆனித் திருமஞ்சன விழா நடத்தப்படுகிறது.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஆனித் திருமஞ்சன விழா மிகவும் பிரபலமானதாகும். நடராஜப் பெருமான் வருடத்தில் ஆனி - மார்கழி மாதத்தில் மட்டுமே வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த ஆனி உத்திரமே, ஆடல் வல்லானுக்கான விழாவாக ஆனித் திருமஞ்சனம் என்ற பெயரில் விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த ஆனி மாதம் பல சிறப்புகளை தன்னுள் அடக்கியுள்ளது.
அக்னி நட்சத்திரம் வைகாசியில் முடிந்தாலும், ஆனியில் கோடை வெப்பம் மிகுந்து காணப்படுவதால், இந்த வெப்ப அலையில் தாக்கத்திலிருந்து நடராஜப் பெருமானைக் குளிர்விப்பிதற்காக, ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது. பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், நெய், சந்தனம், இளநீர் என இன்னும் பல 16 வகை குளிர்ந்த பொருட்களைக் கொண்டு ஆனித் திருமஞ்சனம் செய்கின்றனர்.
நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் பொழுதாகும். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம், காலைப் பகுதி மாசி மாதம், உச்சிக் காலம் சித்திரை மாதம், மாலைப் பகுதி ஆனி மாதம், இரவுப் பகுதி ஆவணி மாதம், அர்த்த சாமம் புரட்டாசி மாதம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. சந்தியா காலங்களான ஆனி - மார்கழியே இறை வழிபாட்டுக்கு உகந்த மாதங்களாகக் கொள்ளப்படுகின்றன.
சிதம்பரத்தில் நடராஜப் பெருமான் ஆடும் ஆனந்தத் தாண்டவம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களையும் உணர்த்துகிறது. வலது கையில் உள்ள உடுக்கை படைத்தலையும், உயர்த்திய வலது கரம் காத்தலையும், இடது கரம் அழித்தலையும், ஊன்றிய பாதம் மறைத்தலையும், மற்றொரு தூக்கிய நிலையில் உள்ள கால் அருளலையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 18-ம் தேதி ஆனி உத்திர நட்சத்திரம் வருகிறது.
இந்த ஆனி உத்திர நாளில்தான் சிவபெருமான், நமக்கெல்லாம் திருவாசகத்தைத் தந்த மாணிக்கவாசகருக்கு குருந்தை மரத்தடியில் உபதேசம் செய்தார். இந்த ஆனித் திருமஞ்சன நாளின் வைகறைப் பொழுதில் உபதேசக் காட்சி விழா நடத்தப்படுகிறது. ஆவுடையார் கோயிலில், இந்த ஆனித் திருமஞ்சன விழா முக்கியத் திருவிழாவாகக் கொண்டாடப் படுகிறது. மாணிக்கவாசகர் இந்த நன்னாளில் வெள்ளித் தேரில் மாட வீதி உலா வந்து அருள்பாலிக்கிறார்.
இந்த ஆனி மாதத்தில் திருவரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலிருந்து வஸ்திரங்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அரசியல் நிச்சயமற்ற ஒரு காலகட்டத்தில் திரு பிள்ளைலோகாச்சாரியார் தலைமையில் பலர், திருவரங்கத்திலிருந்து நம்பெருமாள், தேவி - பூதேவி திருவுருவங்கள், திருப்பதி கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சுமார் இருபது வருடங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இதன் நினைவாகத் தான் இந்த வைபவம் ஆனி மாதத்தில் நடைபெறுகிறது.
நடராஜப் பெருமான் ஆனித் திருமஞ்சன தரிசனம் கண்டால் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாகவும், தம்பதிகளுக்கு சுகமான வாழ்வு கிடைப்பதாகவும், கன்னியருக்கு நல்ல இடத்தில் திருமணம் அமைவதாகவும் நம்பப்படுகிறது.