

ஆந்திராவைச் சேர்ந்த குண்டூர் மாவட்டத்தின் குக்கிராமம் ஒன்றில் சீதாபதி, ரங்கம்மா தம்பதியருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன.
மீண்டும் கருவுற்ற ரங்கம்மாவை வெறித்து நோக்கினார் சீதாபதி. அன்றிரவு அவர் கனவில் பேரழகுமிக்க ஓர் அழகிய பெண் தன் வீட்டுக் கூடத்தில் வீற்றிருக்கக் கண்டார். அப்புறம் பிறந்த குழந்தைக்கு அநுசூயா தேவி என்று பெயரிட்டனர். அநுசூயா இந்து சமய புராணக் கதைகளில் கற்புக்கரசியாக வர்ணிக்கப்படுபவள்.
மாதுளை மரத்தின் கீழ் ஞானம்
அநுசூயா இரண்டு வயதாக இருந்தபோது மாதுளை மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது இறை ஆற்றல் அவளை ஆட்கொண்டது. உடல் முறுக்கிக்கொண்டு உள்முகமாக உட்கார்ந்துவிட்டது குழந்தை. மூச்சின் ஓட்டமும் நின்று விட்டது. பார்த்தோர் குழந்தைக்கு வலிப்பு நோய் கண்டதாக வருத்தமுற்றனர். சீதாபதிக்கு, இது குழந்தையல்ல, ஆன்மிகப் புதையலென்று புரிந்துபோயிற்று.
பதின்மூன்று வயதில் பால்ய விவாகம் நடத்தப்பட்டது. கணவர் பிரம்மாண்டம் நாகேஸ்வர ராவ், ஜில்லாலமுடி கிராமத்தின் கிராம அதிகாரியாகப் பணியாற்றினார். பால்யத்திலேயே ஆத்மஞானம் பெற்றாலும் பால்ய விவாகம் செய்துகொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்டு குழந்தைகளும் பெற்றுக்கொள்ள, எப்படிச் சாத்தியமாயிற்று என்று பின்னாளில் இவரிடம் கேட்கப்பட்டபோது கணவரையும் கடவுளின் சொரூபமாகப் பார்த்தேன் என்று கூறிப் புன்னகைத்தார்.
தனது மகள் ஹேமாவதிக்கு தீட்சை கொடுத்து ‘ஹேமா புதிதாய்ப் பிறந்தாள். நான் ஹேமாவைக் கொன்றுவிட்டேன். அவளைத் தெய்விகப் பெண்ணாக்கி விட்டேன்’ என்று அறிவித்தார். ஹேமா பிறவியிலேயே நோயாளி. பூஞ்சையான மெல்லிய உடல். மனமோ உலகத்தில் துயரப்படுவோரை எல்லாம் அரவணைக்கத் துடித்தது.
பிறர் துயரம் காணப்பொறுக்காத ஹேமா, அம்மாவிடம் வந்து, அம்மா மறுபடி உன் கருவுக்குள் என்னை விழுங்கி விடேன் என்று ஏங்கி அழுவது உண்டு.
அன்னபூரணாலயம்
அம்மா தோட்டத்துக்குள் நுழையும்போது காற்றே வீசாவிட்டாலும் தாவரங்கள் சிலிர்த்ததுபோல் இலைகளையும் கிளைகளையும் அசைக்குமாம். பூக்கள் ஆடுமாம். அம்மா அவற்றிடம் ஏதேதோ உரையாடுவாராம். அப்போது அவர் தோள்மீது பாம்புகள் ஊர்ந்து செல்லும். பறவைகள் வந்து அமரும்.
குடும்பத்தில் இருந்தபடி தனது கடமைகளைக் குறைவில்லாமல் செய்வது, காட்டிலே முனிவர்கள் செய்யும் கடுந்தவத்துக்குச் சற்றும் குறைந்தது அல்ல என்று மெய்ப்பித்துக் காட்டவே அம்மா அவதரித்தார். வீட்டுக்கு வருவோர்க்கெல்லாம் உணவு படைத்து மகிழ்ந்த அம்மா, ஜில்லாலமடி கிராமத்துக்குப் பசி என்று வந்தோருக்கு உணவு படைக்க அன்னபூர்ணாலயம் நிறுவினார். 1960-ல் ‘எல்லோருக்குமான வீடு’ என்ற பிரம்மாண்டமான வசிப்பிடத்தைக் கட்டி அங்கு வருவோர் போவோர் யார் வேண்டுமானாலும் சாதி மத, இன வேறுபாடின்றி தங்கலாம் என்று அறிவித்தார்.
“என் வேலை உனக்கு ஏதாவது சொல்வது அல்ல; உன்னை செய்யவைப்பது” என்பார் அம்மா. அவரைப் பற்றிக் கேட்போரிடம் அவர் சுருக்கமாக ஒரே வாக்கியத்தில் இப்படி பதில் அளித்தார். “என் கதை மிகச் சிறியது. என் வாழ்வோ எல்லையற்றது”.
அவரைத் தேடி வந்த பக்தர்களிடம் அவர் ஒருநாள் அறிவித்தார். “யாரும் இங்கே தங்க வாருங்கள் என்று நான் அழைக்கவுமில்லை. யாரும் இங்கிருந்து போய்விடுமாறு நான் சொல்லவுமில்லை”.
பூரண சரணாகதித் தத்துவத்தை அவர் எல்லோருக்கும் புரியும்படி சொன்னார்.
“ஒரு பூவின் வாழ்நாள் மிகச் சிறியது. ஆனால் அது பூரணமாக தன்னைப் பிறருக்கு ஒப்படைத்து விடுகிறது.”
நீ உலகமாக இருப்பாய்
பிற மதத்தைச் சேர்ந்த ஒருவர் அன்னையிடம் நெருங்கத் தயங்கினார். அன்னை அவர் தலையைக் கோதி, “குழந்தாய்! அன்பு ஒரு பிரவாகம். அதில் குதிக்க விரும்புபவர்கள், யார் வேண்டுமானாலும் குதிக்கலாம். அவர்களை அது அப்படியே ஏற்றுக் கொண்டுவிடும்”.
தன்னம்பிக்கை இழந்த மனிதன் ஒருவனிடம் அவர் சொன்னார். “இந்த உலகத்துக்கு, நீ ஒரே ஒரு மனிதனாக இருக்கலாம். ஆனால், யாரோ ஒரு மனிதனுக்கு நீ உலகமாக இருப்பாய்.”
இயற்கையைக் காப்பாற்ற நாம் ஏதாவது செய்தாக வேண்டும் என்று அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.
“சூரிய சந்திரர்களும் இந்த உலகமும் நட்சத்திரங்களும், நமக்குப் பணி செய்யக் காத்திருக்கின்றன. அவற்றின் தன்னலமற்ற பணிக்குப் பதிலாக மனிதன் ஏதாவது செய்ய வேண்டாமா?”
1985-ம் ஆண்டு அம்மா மறைந்தார். அவர் வாழ்ந்த இடத்தில் அநுசூயாஸ்வராலயம் கட்டப்பட்டது. அவரது முழு உருவச் சிலை அமர்ந்த நிலையில் அங்கு நிறுவப்பட்டிருக்கிறது. குடும்பத்தில் இருந்தபடி ஆன்மிகத் தேடலில் ஈடுபட முடியும் என்று உணர்த்தும் எளிய குடும்பப் பெண்மணியின் ரூபத்தில் அது இருக்கிறது.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com