

முல்லா நஸ்ரூதின் சாலையோர உணவகத்தில் அமர்ந்திருந்தார். மிக மலிவான உணவை வரவழைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த உணவகத்துக்குள் கம்பீரமாக ஒரு மனிதர் நுழைவதைப் பார்த்தார். வெல்வெட் தலைப்பாகை, ரசனையாக பூத்தையல் போடப்பட்ட சால்வை, பட்டுச் சட்டை, கால்சட்டை, தங்க நிறத்தில் இடுப்புப் பட்டையுடன் இருந்தார்.
அந்த ஆடம்பர மனிதரைக் கைகாட்டி, யாரென்று விசாரித்தார் முல்லா நஸ்ரூதின். மன்னர் சுல்தான் அலியிடம் பணியாற்றுபவர் என்று உணவக உரிமையாளர் பதிலளித்தார்.
முல்லா நஸ்ரூதின் வெட்கத்துடன் தலைகுனிந்தார். பின்னர் வானகத்தை நோக்கிக் கண்களை உயர்த்தி, “ரட்சகரே, சுல்தான் அலியின் பணியாளர் வாழும் வாழ்க்கைக்கும் உமது ஊழியன் வாழும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்திருப்பீர்கள்தானே. உங்களின் ஊழியராக இருப்பவர்கள் இவ்வளவு விலை கொடுக்க வேண்டுமா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.”என்றார்.
எனது புறாக்கள்
முல்லா நஸ்ரூதின் தனது சகோதரர்கள் குறித்து சுகாதார அமைச்சகத்தில் புகார் தர சென்றிருந்தார்.
“எனக்கு ஆறு சகோதரர்கள். நாங்கள் ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் வாழ்ந்துவருகிறோம். அவர்களிடம் ஏராளமான செல்லப்பிராணிகள் உள்ளன. ஒரு சகோதரன் 12 குரங்குகளை வளர்க்கிறான். இன்னொரு சகோதரனோ 12 நாய்களை வைத்திருக்கிறான். அறையில் காற்றே இல்லை. மிகப் பயங்கரமான சூழல். ஏதாவது நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்று கேட்டார் முல்லா.
அறையில் ஜன்னல் உண்டா என்று கேட்டார் சுகாதாரத் துறை ஆணையாளர். ஆமாம் என்று பதில் அளித்தார் முல்லா.
ஜன்னலைத் திறந்தால் காற்று வரும்தானே என்று அறிவுரை சொன்னார் ஆணையாளர்.
முல்லா நஸ்ரூதின் பதறிவிட்டார். எனது புறாக்கள் எல்லாம் பறந்துபோய்விடுமே என்று கோபமாகக் கேட்டார்.