Last Updated : 03 Jun, 2021 03:12 AM

 

Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

இயேசுவின் உருவகக் கதைகள் 41: சாட்டை எடுத்தது எதற்காக?

கருணையும் கனிவும் மிக்கவ ராகத்தான் இயேசுவை அனைவரும் பார்த்தனர். நோயுற்றோர், பாவிகள் என்று பழிக்கப்பட்டோர், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டோர் அனைவரையும் எல்லையற்ற இரக்கத்தோடு அணுகிய இயேசுகூட சில சமயங்களில் ரௌத்திரம் கொண்டிருக்கிறார். கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, ஆட்களை அடித்து விரட்டியிருக்கிறார். இயேசுவை கோபம் கொள்ளச் செய்த இந்த அரிய நிகழ்ச்சியும் பைபிளில் இருக்கிறது.

எருசலேம் ஆலயத்தில்தான் இயேசு ரௌத்திரம் கொண்டார். பல காலமாக யூதர்களுக்கு ஆலயம் என்று ஏதுமில்லை. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத மக்களை மீட்டு வந்த மோசேவுக்கு கடவுள் தந்த பத்துக் கட்டளைகள் பொறிக்கப்பட்டிருந்த இரு கற்பலகைகளைக் கொண்ட பேழை ஒன்று அங்கே இருந்தது. மரத்தினால் செய்து பொன்னால் இழைக்கப்பட்ட அந்தப் பேழையை அவர்கள் செல்லும் இடம் எல்லாம் சுமந்து சென்றார்கள். அது எங்கு இருந்ததோ அதுவே அவர்களின் வழிபாட்டுத் தலமாக அமைந்தது.

தகர்ப்பதும் கட்டி எழுப்புவதும்

இயேசுவின் பிறப்புக்கு ஏறத்தாழ 950 ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற மன்னர் சாலமோன் முதன்முறையாக அழகுமிகு ஆலயம் ஒன்றைக் கட்டி எழுப்பினார். கி.மு. 587-ல் படையெடுத்து வந்த பாபிலோனிய அரசன் நெபக்கத்நசர் இந்த ஆலயத்தை இடித்துத் தகர்த்தான். அவன் சிறைப்பிடித்துச் சென்ற யூதர்கள் ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை பெற்றுத் திரும்பிய பிறகு மீண்டும் ஆலயத்தைக் கட்டி எழுப்பினார்கள். இப்படி பகைவர்கள் ஆலயத்தைத் தகர்ப்பதும் சிறிது காலம் கழித்து யூதர்கள் அதனை மீண்டும் கட்டி எழுப்புவதும் தொடர்ந்து நடந்தது.

ரோமப் பேரரசின் தயவைப் பெற்று யூதர்களின் அரசனாக இருந்த பெரிய ஏரோது, இயேசுவின் பிறப்புக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் கட்டத் தொடங்கி, பல்லாண்டுகள் கழித்து கட்டி முடித்த ஆலயம் அது.

ஆண்டில் மூன்று திருவிழாக்களின் போது ஒவ்வொரு யூதரும் எருசலேம் ஆலயத்திற்கு வர வேண்டும் என்பது யூதச் சட்டம். இந்த மூன்று விழாக்கள் தவிர மற்ற நாட்களிலும் எருசலேம் ஆலயத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது யூத மக்களின் பேராவலாக இருந்தது. அங்கு செல்வதற்கான அழைப்பே அவர்கள் மனத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதை வெளிப்படுத்தும் ஒரு பாடல் பைபிளில் உள்ளது (திருப்பாடல் 122).

“ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம் என்ற அழைப்பை நான் கேட்ட போது அகமகிழ்ந்தேன். எருசலேமே, இதோ நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கிறோம். உன் கோட்டைக்குள் அமைதி நிலவுவதாக! உன் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! உன்னுள் சமாதானம் நிலவுவதாக! நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால் உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்” என்கிறது அப்பாடல்.

எனவே இயேசுவும் மிகுந்த ஆர்வத்தோடுதான் எருசலேம் ஆலயத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆலயத்திற்கு வருபவர்கள் அங்கே எத்தகைய சூழல் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள்? ஆலயம் வழிபாட்டுக்கும் பிரார்த்தனைக்குமான இடம். எனவே மனமொன்றி, இறைவனை நினைந்து அவரோடு உரையாடவும் அவர் நமக்குச் சொல்வதைக் கேட்கவும் உதவும் அமைதியான சூழலைத்தானே இயேசு எதிர்பார்த்திருப்பார்? ஆனால் அங்கு அவர் கண்டது இதற்கு நேர் எதிராக இருந்தது.

தந்தையின் இடத்தை சந்தையாக்காதீர்

ஆலயத்தின் வெளி முற்றத்தில் ஆடு, மாடு போன்ற விலங்குகள், புறாக்கள் விற்கப்பட்டன. வருவோர் எல்லாம் இவற்றை வாங்கி ஆலயத்தில் பலி கொடுத்தனர். திருவிழாவுக்காக ஆலயம் வரும்போதுதான் அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை செலுத்த வேண்டிய ஆலய வரியைச் செலுத்தினர். வெவ்வேறு இடங்களில் உபயோகத்தில் இருந்த நாணயங்களை மாற்றி, ஆலயம் ஏற்றுக்கொண்ட ஒரே நாணயமான தீர் நாட்டு ஷெக்கல் நாணயத்தை வாங்கி வரி செலுத்தினர். எனவே விலங்குகள், பறவைகளின் கழிவுகள் ஏற்படுத்திய துர்நாற்றமும் அவை எழுப்பிய சத்தமும் நாணயங்களின் ஓசையும் அவற்றை மாற்றுவோரின் கூச்சலும் நிறைந்து, ஆலயத்துக்கு அவசியமான சூழலை அழித்துவிட்டன. இந்தச் சூழலில் மனமொன்றி இறைவனிடம் வேண்டுதல் செய்வது எப்படி?

சரி, இயேசுவுக்கு முன்னர், இது எவரின் மனதையும் உறுத்தவில்லையா? அப்படி உறுத்தியிருந்தாலும் அவர்களால் எதுவும் செய்ய இயலாத நிலையே அப்போது இருந்தது. இந்த வியாபாரம், நாணயமாற்று முழுவதும் தலைமைக் குருவின்கீழ் வந்தன. வருமானத்தில் ஒரு பகுதி அவருக்கும் அவரைச் சார்ந்தோருக்கும் போயிருக்க வேண்டும்.

எனவே தான் அவர்கள் இந்த விபரீதத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்துவிட்டனர். பணத்தாசை அவர்களின் பார்வையை மறைத்து விட்டது. இதனால்தான் பெரும் கோபம் கொண்ட இயேசு கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி வியாபாரிகளையும் நாணயம் மாற்றுபவர்களையும் அடித்துத் துரத்தி கோவிலை விட்டு வெளியேற்றினார். “என் தந்தையின் இல்லத்தை சந்தை ஆக்காதீர்கள்” என்று அவர் முழங்கினார்.

பணத்துக்காகவும் மற்ற தன்னல நோக்கங்களுக்காகவும் மத நம்பிக்கை களை, மதச்சடங்குகளை, வழிபாட்டு இடங்களைப் பயன்படுத்துவோர் யாராக இருந்தாலும் அவர்கள் கடவுளுக்கு கோபத்தையே உண்டாக்குவர்.

நம் உள்ளமும் இறைவனுக்கான ஆலயம் தானே? ஆலயத்திலோ, நம் உள்ளத்திலோ பணத்தாசை புகுந்து விட்டால், நாம் நம் அகக் கண்ணை இழந்து, இறைவனுக்குச் சிறிதும் பிடிக்காத காரியங்களை செய்யத் தொடங்கி விடுவோம் என்று எச்சரிக்கிறது, இரக்கமே உருவான இயேசு சாட்டை எடுத்த இந்த நிகழ்ச்சி.

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x