

செய்க் நசிருதீன் சிராக் தனது மாணவர்களிடம் ஆன்மிக ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதைப் பற்றி விவரித்தார். இதயத்துக்கு கொடுக்கப்படும் உரிய பயிற்சியில் தான் ஆன்மிக ஒழுங்கு உருப்பெறுகிறது என்றார் செய்க்.
இதயத்தின் குவிமையமான கிப்லா இறைவனே. உடலை ஆளும் அமிர்தான் இதயம். இதயத்தின் குவிமையம் விலகிவிட்டால் அங்கிருந்து உடம்பும் விலகிவிடுகிறது.
புனித விளக்கொளி முதலில் ஆன்மாவின் மீதுதான் இறங்குகிறது. அதை அன்வர் என்று அழைக்கிறோம். ஆன்மாவிலிருந்து அது உடம்புக்குப் பரப்பப்படுகிறது. இதயத்தின் ஊழியனாக உடல் இருக்கிறது.
தூய்மையான செயலின் விளைவே ஆன்மிக நிலை என்று சொல்லப்படும் ஹல் ஆகும். ஹல் நிலையானதல்ல; மாறிக்கொண்டேயிருப்பது. ஆனால், அது நிலைப்பட்டு நிற்கும்போது மக்கம் என்று சொல்லப்படும் நிலையமாக ஆகிறது.
ஒரு அராபிய நாடோடி சொன்னது
ஒரு அராபிய நாடோடியிடம் கடவுளை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா என்று கேட்கப்பட்டது.
அவன் பதிலளித்தான். “நான் பார்க்காத எதையும் நான் வழிபட்டதேயில்லை. நான் அவனை எனது கண்பார்வையின் வழியாகத் தரிசிக்கவில்லை. விசுவாசத்தின் மெய்ப்பாதைகள் வழியாக நான் அவனைத் தரிசிக்கிறேன்.”
எனது பக்தி
குரானை விளக்குவதில் தலை சிறந்தவராக ஞானி ஒஸ்மான் ஹர்பாபடி விளங்கினார். அவர் கஜ்னி என்ற ஊரில் வசித்துவந்தார். பீட்ரூட் மற்றும் முள்ளங்கியைச் சேர்த்துச் செய்த உணவுப் பொருளை தினம்தோறும் விற்பதை அவர் தொழிலாகக் கொண்டிருந்தார்.
அவரிடம் வாடிக்கையாளர் ஒருவர் வந்து போலி நாணயத்தை அளித்தாலும் ஞானி ஒஸ்மான் தனது பொருளைக் கொடுக்க மறுக்கமாட்டார். நல்ல நாணயத்துக்கும் போலி நாணயத்துக்கும் அவர் வித்தியாசம் பார்க்கத் தெரியாதவர் என்ற பெயர் ஊரெங்கும் பரவியது. இந்நிலையில் மக்களில் நிறைய பேர் போலி நாணயங்களைக் கொடுத்து அவரிடம் உணவுப்பொருட்களை வாங்கிச் செல்வதும் நடந்தது.
ஞானி ஒஸ்மானை மரணம் நெருங்கியது. தனது இறுதி நாட்களில் அவர் வானை நோக்கிப் பிரார்த்திக்கத் தொடங்கினார்.
“அல்லாவே, மக்கள் என்னிடம் நிறைய போலி நாணயங்களைக் கொடுத்து பொருள் வாங்கிச் சென்றது உங்களுக்குத் தெரியும். நான் அவற்றை உண்மையானதாகவே ஏற்றுக்கொண்டேன். நான் யாரையும் திருப்பி அனுப்பியதில்லை. அதேபோன்றதுதான் என்னுடைய பக்தியும் மதிப்பற்றது. நீங்கள் என்னைக் கருணையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்." என்றார்.