

சூரி நாகம்மா ஆந்திர தேசத்தைச் சேர்ந்தவர். பள்ளிக்கூடமே இல்லாத குக்கிராமத்தில் பிறந்தவர். நான்கு வயதில் தந்தையை இழந்தார். பத்து வயதில் தாயை இழந்தார். பதினொரு வயது நிறையும் முன்னரே பால்ய விவாகம் செய்து வைக்கப்பட்டது. பன்னிரெண்டு வயதில் விதவைக் கோலம். மலரத் தொடங்கும் முன்னரே ஒரு மொக்கு இவ்வாறு நசுக்கப்பட்டது. ஆயினும் அது மலரத் துடித்தது. வீட்டிலிருந்த பெரியவர்கள் துணையுடன் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார்.
தூக்கத்தில் வந்த கனவுகளில் தொலைதூரத்தில் ஒரு மகான், பாறை மேல் வீற்றிருந்தபடி மெளனமாகத் தன்னை கருணை யுடன் பார்க்கும் காட்சி அடிக்கடி வரலாயிற்று. நாகம்மாவின் தமையனார் தனது தங்கையை ஒருமுறை திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்றார். பகவான் ரமணர் அமர்ந்திருந்த அறையில் நுழைந்தார் நாகம்மா. எங்கும் அமைதி நிலவியது. அங்கே இத்தனை நாள் தான் கனவில் கண்ட மகானே வீற்றிருப்பதைக் கண்டு சிலிர்த்தார் நாகம்மா. பெண்கள் பகுதிக்குச் சென்று கடைசியாக அமர்ந்து தலையைக் குனிந்து கொண்டார். மனத்தில் எங்கிருந்தோ ஒரு சாந்தி குடிகொண்டது. ஆனாலும் பகவானின் பார்வையின் கூர்மையைத் தாங்க முடியாமல் மறுபடியும் தலைகுனிந்தார் நாகம்மா.
பத்து நாள்கள் கழிந்தன. கவிதைகள் புனைவதில் இயற்கையாகவே நாகம்மாவிடம் ஆர்வம் அதிகம் இருந்தது. பகவானைப் பார்த்ததும் அந்த ஆர்வம் பொங்கிப் பிரவகித்தது. ‘சரணாகதி’ என்ற தலைப்பில் சில பாடல்கள் இயற்றி அதை பகவான் முன்னே வைத்தார். அதைப் படித்துப் பார்த்து முறுவலித்த பகவான் ரமணர் தன் அருகில் நின்றிருந்த மாதவ சுவாமியிடம் “இதோ பாரும்! இவள்தான் சூரி நாகம்மா! சரணாகதி பற்றி இவள் இயற்றிய செய்யுள்களை நமது புஸ்தகத்தில் ஒட்டி வையும்” என்றார். நாகம்மாளுக்கு மிகுந்த சந்தோஷமுண்டாயிற்று. தாம் சரியான இடத்துக்குத்தான் வந்து சேர்ந்திருக்கிறோம் என்று அவரது உள்மனம் கூறியது. ஆசிரமத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் தீர்மானமும் அவர் மனத்தில் உதித்தது. ராமனின் கால்தூசுபட்டு அகலிகையின் அஞ்ஞான கல்விறைப்பு அவளைவிட்டு நீங்கியது போல் பகவான் அருட்பார்வை நாகம்மாளின் மன இருட்டைப் போக்கியது.
இந்தக் குரங்கை ஏற்றுக் கொள்ளுங்கள்
மற்றோர் சமயம் நாகம்மாள் எழுதிச் சமர்ப்பித்த செய்யுளைப் படித்து சிரித்தேவிட்டார் ரமணர். “பகவானின் மலை மீதிருந்து கீழிறங்கி வந்தபிறகு குரங்குகளின் சேவை உங்களுக்குக் கிடைப்ப தில்லை. என் மனக்குரங்கை உங்களுக்கு சேவை செய்ய ஏற்றுக்கொள்ளுங்கள். இது அலைகிறது. இந்தக் குரங்கை கட்டிப்போட்டுப் புனிதப்படுத்தி உங்கள் குற்றேவல்களுக்குப் பயன்ப படுத்திக் கொள்ளுங்கள்.”
ஆதிசங்கரர் சிவானந்த லஹரியில் இதே மாதிரி ஒரு சுலோகம் இயற்றியிருப்பதை ரமணர் சுட்டிக்காட்டினார். ஓ! சங்கரா! நீயே ஒரு பிட்சு என் மனக்குரங்கை அழைத்துப்போய் வித்தைகாட்டி பிச்சை எடுத்தால் நிறைய பேர் பிச்சை போடுவார்கள்.
லேகலு என்கிற கடிதங்கள்
ஆசிரமத்தில் நாள்தோறும் நடந்த சம்பவங்களையும் பகவானின் உபதேச உரையாடல்களையும் தன் சகோதரருக்குக் கடிதங்களாக எழுதத் தொடங்கினார் நாகம்மா. பகவான் ரமணரின் முன்னிலையில் நிகழ்ந்த சம்பவங்களையும் அவரது உரையாடல்களையும் தத்ரூபமாக நம் கண் முன்னர் அவரது கடிதங்கள் நிலைநிறுத்துகின்றன. ஆக மொத்தம் 273 கடிதங்கள் தெலுங்கில் ‘லேகலு’ என்ற பெயரில் ஐந்து பெரும் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. பக்திச் சுவையும் இலக்கியச் சுவையும் இவரது நடையில் போட்டி போடுகின்றன. பகவானை நேரில் பார்த்திராத பக்தர்களின் மனக்குறையை இக்கடிதங்கள் தீர்த்துவைக்கின்றன.
ஆசிரமத்துக்கு வருகை தந்த ஆன்மிகப் பெரியோர்கள், அரசியல் தலைவர்கள், ஏழைகள், மயில், பாம்பு, அணில்கள், குரங்குகள், பசு முதலான விலங்கினங்கள் பற்றிய குறிப்புகளோடு ரமணர் பற்றிய அரிய தகவல்களையும் கடிதங்களாக எழுதிவைத்தார். அமானுஷ்ய யோக அனுபவங்கள் பற்றியெல்லாம் பக்தியில் கனிந்த பார்வையோடு பதிவு செய்தார் சூரி நாகம்மா. பகவானின் பேச்சு அப்படியே ஒலிப்பதிவுக் கருவியில் பதிவு செய்யப்பட்டதுபோல் நம் காதுகளில் ஒலிக்கிறது.
பகவான் ஒரு சமயம் இலுப்பை மரத்தின் கீழ் தியானத்தில் இருந்தபோது இருபது வயதான ரத்னம்மா என்ற தேவதாசி கோவிலில் நடனமாட வந்து போகும்போது ரமணரைப் பார்த்தார். ரமணர் மீது பக்தியும், தன் தொழிலின் மீது வெறுப்பும் அவருக்கு உண்டாகியது. தன் தாயிடம் அந்த சுவாமிக்கு சோறு போடாமல் நான் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடித்தாள். தேவதாசி வீட்டிலிருந்து நாள்தோறும் உணவு வருகிறது. ரத்னம்மா தன் நடனத்தை விட்டாள். தன் மகளுக்கு விவாகம் செய்தும் வைத்தாள்.
எங்கே எனது பென்சில்?
ஒரு பெரிய பணக்காரர் விலை உயர்ந்த பென்சில்களைக் கொண்டு வந்து பகவானிடம் சமர்ப்பித்தார். பகவான் அந்தப் பென்சில்களைச் சோதித்து எழுதிப்பார்த்து அவற்றின் நேர்த்தியை சிலாகித்தாராம். பிறகு தன் பக்கத்திலிருந்த கிருஷ்ண ஸ்வாமியிடம் இதைப் பத்திரமாக வையும் ஐயா. நம்ம சொந்தப் பென்சில் எங்கே இருக்கிறதோ அதைக் கொண்டுவாரும் என்றார். பிறகு பகவான் தான் பயன்படுத்திய பழைய பென்சிலையே தேடிக் கண்டுபிடிக்கச் செய்து வாங்கிக்கொண்டார். இது போலவே விலை உயர்ந்த கப்புகளையும், சாஸர்களையும் வேண்டாம் என்பார். தமக்குரிய கொட்டாங்கச்சி கப்புகளே அவருக்குப் பிடித்தமானது. வெள்ளிப்பூண் போட்ட கைத்தடி பரிசளிக்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்தார். ஓய் ஏதோ ஒரு குச்சியை செதுக்கினால் உடனே கைத்தடி வருகிறது. இந்தக் கட்டைக்கு அந்தக் கட்டை துணை என்றாராம்.
பகவான் தன்னிடம் பக்தர்கள் கொண்டு தரும் பழைய கிழிந்த புத்தகங்களை தம் கரங்களால் ஒட்டி புதிய புத்தகமாக ஆக்கிவிடுவார். இன்னும் சிலர் தாம் சிறிதும் பெரிதுமான காகிதங்களில் எழுதியிருப்பதைப் பகவான் சரிபார்த்து அருள அனுப்புவார்கள். அவற்றை சீராகக் கத்தரித்து நோட்டுப் புத்தகமாகத் தைத்து பைண்டு செய்து அட்டையில் ஒரு வெள்ளைக் காகிதம் ஒட்டி முத்துப் போன்ற தமது எழுத்துக்களால் பெயரை எழுதி அதன் கீழ் சிவப்பு மையினால் கோடுபோட்டு வைப்பார். ஒரு தடவை கிருஷ்ண தேவராயர் எழுதிய ஆமுக்த மால்யத என்கிற தெலுங்கு கிரந்தத்தை மிக அழகாக அதன் கிழிந்த பக்கங்களை ஒட்டிப் புதுசாகச் செய்துவிட்டார்.
பகவான் ரமணரின் இறுதிக் கணங்கள் குறித்த சூரி நாகம்மாளின் பதிவு உருக்கமானது.
பகவான் ரமணரின் இறுதி நெருங்கி விட்டது. மூடிய கண்கள் மூடியபடியே இருந்தன. கடைசி வரிசையில் நின்றபடி சூரி நாகம்மா, “பிரபோ! ஒரே ஒரு முறை தங்களின் பார்வையை என்மீது செலுத்த மாட்டீர்களா?” என்று மனமுருகி வேண்டினார். பகவானின் கண்கள் மெல்லத் திறந்தன. அவர் பார்வை நேராக நாகம்மா மீது படிந்தது. அவ்வளவுதான். மெய்யடியார் ஒருவரின் வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு நிரந்தரமாக மூடிக்கொண்டன அந்தக் கண்கள்.
(தேடல் தொடரும்) கட்டுரையாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com