

மனித உடலில் காணப்படும் மச்சம், ரேகை, தழும்பு ஆகியவை தெரியக்கூடிய வகையில் ஒன்பது அடி உயரத்தில் தத்ரூபமாக நிற்கும் நடராஜர் செப்புச் சிலைக்காக உலகப் புகழ்பெற்ற திருத்தலம் இது.
திருவிடைமருதூருக்கு பத்து கிலோமீட்டர் தொலைவில் கோனேரிராஜபுரம் என்று இப்போது அழைக்கப்படும் ஊரில் உமாமகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த ஊரின் பழைய பெயர் திருநல்லம். பூமாதேவி இத்தலத்துக்கு வருகைதந்து இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. செங்கல்லால் கட்டப்பட்டிருந்த இந்தக் கோயிலை கற்றளிக் கோயிலாக ஆக்கியவர் கண்டராதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவி ஆவார். இவர் ராஜராஜ சோழனின் பாட்டி.
ஆலயத்தின் வெளியே சக்தி தீர்த்தம் அமைந்திருக்கிறது. முகப்பு வாயில் வழியாகச் சென்றால் பெரிய முன்மண்டபமும் மண்டபத்தின் உள்ளே கொடிமரமும் காணப்படுகின்றன மண்டபத்தின் உள்புறத்தில் அறுபத்தி மூவர், சிவலிங்கம், பன்னிரெண்டு ராசிகள், மகரிஷிகளின் உருவங்கள் அனைத்து ஓவியங்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. கருவறையில் உமாமகேசுவரர் சந்நிதி மேற்கு பார்த்து அமைந்துள்ளது. அம்பாள் அங்கவளநாயகியின் சந்நிதி கிழக்கு பார்த்து அமைந்துள்ளது. மூலவர் கருவறையைச் சுற்றி விநாயகர், தட்சிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோத்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
புரூரவ மன்னனின் தொழுநோயைத் தீர்த்த வைத்தியநாதர் சந்நிதி இங்கே அமைந்துள்ளது. மூலவர் சந்நிதியில் சதுர ஆவுடையார் மீது உயர்ந்த பாணத்துடன் உமாமகேசுவரர் லிங்க உருவில் காட்சிதருகிறார்.
மூலவர் உமாமகேசுவரர் மற்றும் அங்கவள நாயகியின் சந்நிதியைத் தவிர கல்யாணசுந்தரர் கல்யாண கோலத்துடனும், மகாவிஷ்ணு பார்வதியை தாரைவார்த்துக் கொடுக்கும் காட்சியுடனும் எழுந்தருளியுள்ளார்.
காவிரி நதியின் தெற்கில் உள்ள சோழ நாட்டின் தேவார ஸ்தலங்களில் 34-வது தலமாக இந்த இடம் கருதப்படுகிறது. பூர்வ புண்ணியம் இருந்தால்தான் இக்கோயிலைத் தரிசிக்க முடியும் என்பது அப்பர் பெருமானின் அருள்வாக்கு.
இந்தக் கோயிலின் பண்டைய வரலாற்றைப் பார்க்கும்போது, ராமநவமியை ஒட்டிய நிகழ்ச்சிகள் கடந்த 150 ஆண்டுகளில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆலயத்தில் ராமனுக்கும், சீதாபிராட்டியாருக்கும், லட்சுமணனுக்கும், அனுமனுக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் உள்ள ஆவணங்களின்படி, 133 ஆண்டுகளாக ஸ்ரீ ராமநவமி, பத்து நாட்கள் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருவது தெரிகிறது. பாகவதர்கள் கல்யாண அஷ்டபதியைப் பாடி சீதா ராமர் திருக்கல்யாணத்துடன் முடிக்கிறார்கள்.
சைவத்துக்கும் வைணவத்துக்கும் இடையிலான ஒட்டுறவைக் கூறுவதாக அமைந்துள்ளது இந்தக் கோயில்.