

ஸ்ரீவைணவத்தில் ஆளவந்தார் பல வைணவ ஆச்சாரியர்களை உருவாக்கியவர். அவரின் சீடரான இராமாநுசருக்கு 5 ஆச்சாரியர்களை ஏற்படுத்திக் கொடுக்கிறார்.
1. பெரிய திருமலைநம்பி,
2. திருக்கோஷ்டியூர் நம்பி,
3. திருமாலையாண்டான்,
4. பெரியநம்பிகள்,
5. திருவரங்கப் பெருமாளரையர்,
இந்த ஐவரும் ஸ்ரீராமாநுசருக்கு ஸ்ரீவைணவ சித்தாந்தங்களைக் கற்பித்தனர். கடல் போன்ற இராமாநுசரிடத்தில் ஐந்தாறுகள் போன்ற இவ்வாச்சாரியா்கள் சங்கமித்தார்கள். அதில் திருமாலையாண்டான் நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு வியாக்கியானம் செய்தார். சாமவேதத்தின் சாரமான பாசுரங்கள் திருவாய்மொழி. அனைத்து திவ்ய தேச எம்பெருமானார்களின் வடிவழகு, குணநலன்கள், அடியார்க்கிரங்கும், தயாபரனான இறைவனைப் போற்றிப் புகழ்ந்து எழுதப்பட்டது இப்பாசுரம்.
உயா்வு அற உயா்நலம் உடையவன் எவன்? அவன்,
மயா்வு அற மதிநலம் அருளினன் எவன்? அவன்,
அயா்வு அறும் அமரா்கள் அதிபதி எவன்? அவன்,
துயா் அறு சுடா் அடி தொழுது எழு என்மனனே!
எனத் தொடங்கும் நம்மாழ்வாரின் பாசுரத்தின் விளக்கங்கள் அளவிட முடியாதவை. எவ்வளவு கற்ற பண்டிதனாக இருந்தாலும் ஓர் ஆச்சாரியன் கற்பித்தால்தான் அதற்கு ஏற்றம். நித்ய பூஜை அநுஷ்டானங்களையெல்லாம் முடித்துக்கொண்டு இராமாநுசுர் திருமாலையாண்டான் இல்லம் வருவார், பாசுரம் கற்க பெரியவாச்சான்பிள்ளை எழுதிய உரையின் சாரத்தை திருமாலையாண்டான் சொல்லக் கேட்பார். வேதமாகிய பெருங்கடலே தன்னிடம் வேதம் பயில வந்துள்ளதே என மகிழ்ந்த திருமாலையாண்டான் இராமாநுசரையே சுற்றிச்சுற்றி வருவாராம்.
இப்படி இராமாநுசரையே இம்மைக்கு மருந்தாக எண்ணி நான் துதிக்கவில்லையே என மனசலிப்படைந்தாள் நம் திருக்கோளுா் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com