

ஒரு சூபி ஞானி தனது மரணத்துக்குப் பிறகு படிக்கச் சொல்லி ஒரு கடிதம் எழுதி மூடப்பட்ட பெட்டியைக் கொடுத்தார். விஷயங்கள் கையை மீறிப்போனால் மட்டுமே பெட்டியைத் திறக்கவேண்டுமென்று கூறினார். அவர் கூறியபடியே, சமாளிக்க முடியாதவாறு பிரச்சினைகள் எழுந்தன. இந்நிலையில் அவர் கொடுத்துவிட்டுப் போன பெட்டி திறக்கப்பட்டு கடிதமும் படிக்கப்பட்டது.
அந்தக் கடிதம் இப்படி எழுதப்பட்டிருந்தது. “எல்லாம் சரியாகப் போகிறது. நீங்கள் நிச்சயமாக ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பீர்களென்று எனக்குத் தெரியும்.”
பிகோ ஆன்மிக குருவாக ஆசைப்பட்டார். ஆனால், அவரால் மாணவர்களை ஈர்க்க முடியவில்லை. உள்ளூரிலிருந்த சூபி ஞானியான செய்க் அப்துல்லா மீது அவருக்கு பொறாமை ஏற்பட்டது. அதனால் அவரிடம் சென்று ஒரு குறும்பைச் செய்து செய்க் அப்துல்லாவை அவமானப்படுத்த ஆசைப்பட்டார்.
செய்க் அப்துல்லா தன்னைப் பார்க்க வந்திருந்தவர்களிடம் பேசிக்கொண்டிருந்த இடத்துக்கு பிகோ கையில் ஒரு சிறு பறவையை வைத்துக்கொண்டு சென்றார். கைக்குள்ளிருக்கும் அந்தப் பறவை உயிருடன் இருக்கிறதா? இறந்துவிட்டதா? என்று கேட்பதுதான் அவரது நோக்கம்.
செய்க் அப்துல்லா, பறவை இறந்துவிட்டதென்று சொன்னால் பிகோ கையை விரித்து பறவையை பறந்துபோக விடுவார். பறவை உயிருடன் இருப்பதாக அப்துல்லா கூறினால், கையிலேயே பறவையை நசுக்கிக் கொல்வது பிகோவின் திட்டமாக இருந்தது. எந்தப் பதிலைச் சொன்னாலும் செய்க் அப்துல்லா தன்னிடமிருந்து தப்பிக்க இயலாது என்று நினைத்தார் பிகோ.
“ஞானவானின் இருக்கையில் அமர்ந்திருப்பவரே. நீங்கள் உண்மையிலேயே அறிவுடையவராக இருந்தால் சொல்லுங்கள். என் கையில் இருக்கும் பறவை உயிருடன் இருக்கிறதா? இல்லையா?”
செய்க் அப்துல்லா, பிகோவை அன்புடன் பார்த்துவிட்டுப் பதிலளித்தார்.
“பிரியத்துக்குரிய பிகோ, உனது கேள்விக்கான பதில், உன்னைப் பொறுத்திருக்கிறது!”