

ஆளவந்தாரின் மாணவர் பெரிய நம்பிகள் ஆவார். அவர்தான் ராமாநுஜரின் ஆச்சாரியனும். ராமாநுஜருக்கு வித்யா ஜென்மம் அளித்த குரு அவர்.
தாழ்ந்த குலத்தில் பிறந்ததாகச் சொல்லப்படும் மாறனேர் நம்பி என்பவர், வாய்க்காலில் உள்ள நீரை எடுத்து அதில் மண்ணை அள்ளிப்போட்டுக் குடிப்பதை;ப் பார்த்து அவரிடம் ஆளவந்தார் ஏன் என்று கேட்டார். “மண் சுவருக்கு மண் இடுகிறேன்" என்று பதில் அளித்தார் மாறனேர் நம்பி. ஆளவந்தார் அவரது பக்குவத்தைக் கண்டு அவரைத் தனது மாணவனாக ஏற்றுக்கொண்டார்.
நாளடைவில் ஆளவந்தாருக்கு ராஜபிளவை என்ற நோய்வந்தது. அதையும் கடவுளின் பரிசாக அவர் ஏற்றுக்கொண்டார். இந்தச் சூழ்நிலையில் மாறனேர் நம்பியைச் சோதிக்க நினைத்த பகவான், ஆளவந்தாரிடம் அவரது நோயை மாணவன் ஒருவனுக்குக் கொடு என்று கூறினார். ஆளவந்தாரோ அதை மறுத்தார்.
பகவான் அதை மீண்டும் வலியுறுத்த, ஆளவந்தார் சம்மதித்தார். தனது சிஷ்யர்களை அழைத்து, யார் எனது ராஜபிளவையை வாங்கிக் கொள்கிறீர்கள் என்று கேட்டார். அப்படி வாங்கினால் மோட்சம் உண்டு என்று தெரிந்த பின்னரும் எவரும் சம்மதிக்கவில்லை. அப்போது மாறனேர் நம்பி, அடியேனுக்கு அந்த வியாதியை அனுக்கிரகித்தால், குருவே தன்னுடன் இருப்பதாக அதைப் பிரசாதமாக வைத்துக்கொள்வேன் என்று கேட்டார்.
மாறனேர் நம்பி தனது உடம்பையே பகவானின் கொடையாகப் பார்த்தார். கொஞ்சம் கொஞ்சமாக நோய் அவரை உருக்கியது. மாறனேர் நம்பிக்கு நோய் இன்னும் முற்றிப்போக பெரிய நம்பிகள் தினசரி அவர் வாழும் குடிசைக்குச் சென்று அவரது உடம்பைத் துடைத்து காயத்துக்கு மருந்துபோட்டு அன்னத்தை ஊட்டி வந்தார். தனக்குச் சேவை செய்த பெரிய நம்பிகளே அந்திமக் காரியங்களையும் செய்ய வேண்டுமென்று மாறனேர் நம்பி வேண்டுகோள் விடுத்தார்.
மாறனேர் நம்பியின் ஆசையை பெரிய நம்பிகள் மகனைப் போல நிறைவேற்றினார். ஊராரின் புகாரை அடுத்து ராமாநுஜர், தனது குருவிடம் ஏன் இதைச் செய்கிறீர்கள் என்று கேட்டார். பகவான் ராமன் ஜடாயுவுக்குச் செய்த காரியங்களை உதாரணமாகக் கூறி, அவனைவிட நான் உயர்ந்தவன் இல்லை என்று கூறி ராமாநுஜரின் வாயை அடக்கினார்.
வைணவ சித்தாந்தங்கள் எல்லாம் கடலோசையைப் போன்று வெறுமனே கேட்பது தானோ என்றும் மாறநோ்நம்பி சுத்தமான வைணவ பக்தன் என்பதையும் ராமாநுஜருக்கு நினைவூட்டவும் செய்தார்.
ஆழ்வார்கள் தொண்டருக்கு தொண்டனாக இருப்பதையே சிறப்பானதாக கருதினா்.
இப்படி குலம், கோத்திரம், வயது எதையும் நோக்காமல் பாகவத விசேஷங் களை உணர்ந்து காரியமாற்றிய பெரிய நம்பியைப் போல நான் உணராமல் இருக்கிறேனே என்று தன்னுடைய ஆதங்கத்தைத் தெரிவிக்கிறாள் திருக்கோளூர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com