

‘பிரச்சினை மிகப் பெரியது. இதற்குத் தீர்வு காண சாமானியன் ஆகிய நான் என்ன செய்ய முடியும்? நடக்க வேண்டியது எத்தனையோ இருக்கிறது. நான் சாதாரண மனிதன். என்னால் என்ன பெரிதாகச் செய்துவிட முடியும்?' என்று நாம் சில வேளைகளில் நினைக்கிறோம்.
இதற்கு இயேசுவின் வாழ்வில் பதில் இருக்கிறது. அவர் பேசுவதைக் கேட்க பெருந்திரளாக வந்திருந்த மக்களைப் பார்த்து, இயேசு தன் சீடர்களில் ஒருவரிடம் “இவர்களுக்கு எங்கிருந்து நாம் உணவு வாங்கலாம்?” என்று கேட்டார். “பெரும் தொகையைச் செலவிட நாம் தயாராக இருந்தால் கூட, ஆளுக்கு ஒரு சிறு துண்டு அப்பம்கூட வாங்க இயலாது” என்றார் அந்தச் சீடர். அப்போது இன்னொரு சீடர், “இந்தக் கூட்டத்தில் ஒரு சிறுவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் ஆண்கள் மட்டுமே ஐயாயிரம் பேர் இருக்கும் இந்தக் கூட்டத்துக்கு இது எப்படிப் போதும்?” என்று கேட்டார்.
தன்னிடமிருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொடுப்பதற்கு அச்சிறுவன் தயாராக இருந்தான். இயேசுவுக்கு அது போதுமானதாக இருந்தது. அங்கிருந்த மக்கள் அனைவரும் வரிசையாக அமர்ந்ததும், அவர் அந்த அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவற்றை அனைவருக்கும் கொடுக்கச் சொன்னார்.
உணவை வீணாக்க வேண்டாம்
அங்கிருந்த அத்தனை பேரும் வயிறார உண்ட பின்னும் நிறைய மீதமிருந்தது. உணவை வீணாக்கும் பெரும் தவறைச் செய்யாமல் எஞ்சியிருந்த உணவை கூடைகளில் சேர்த்து வைக்குமாறு இயேசு கூறினார். தன்னிடம் இருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் மனமுவந்து இயேசுவிடம் சிறுவன் தந்தான். ஆனால் அவற்றைக் கொண்டு இயேசு அங்கிருந்த அத்தனை மனிதருக்கும் உணவு தந்தார்.
நாம் செய்வது சிறிய செயலாக இருந்தாலும், நாம் தருவது சிறிய பொருளாக இருந்தாலும், மனமுவந்து நாம் அதனைத் தந்தால் அதை வைத்துக்கொண்டு இறைவன் அற்புதங்கள் நிகழ்த்திக் காட்டுவார். நாம் தரும் சிலவற்றைக்கொண்டு இறைவன் எண்ணற்ற மனிதருக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்.
நேயோமி ஷிகாப் என்ற அமெரிக்கப் பெண் ஓர் விமான நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். பாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர்கள் இவரது பெற்றோர். விமானம் நான்கு மணி நேரம் தாமதம் என்று தெரிந்ததும், விமான நிலையத்தில் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்த அவர் ஒலிபெருக்கியில் வந்த இந்த அறிவிப்பைக் கேட்டார். ‘அரபு மொழி தெரிந்தவர் யாராவது இருந்தால் அவர்களை உடனே இந்த வாசலுக்கு வருமாறு பணிவன்புடன் அழைக்கிறோம்’ என்றது அறிவிப்பு.
அங்கு விரைந்த நேயோமி அந்த வாசலுக்கு அருகே தரையில் அமர்ந்தவண்ணம் அழுது கொண்டிருந்த ஒரு வயதான பெண்ணைப் பார்த்தார். இவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் தனக்கு அரபு மொழி தெரியும் என்றும் அவர்களின் அறிவிப்பைக் கேட்டு வந்ததையும் சொன்னார். அவர்கள் கீழே தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்த பெண்ணைக் காட்டி, விமானம் புறப்பட இன்னும் நான்கு மணி நேரம் ஆகும் என்றுதான் அவரிடம் சொன்னோம். அவருக்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. எங்களுக்குத் தெரியாத ஒரு மொழியில் கத்தி அழுதுகொண்டே தரையில் அமர்ந்துவிட்டார். ஆங்கிலம் அவருக்குத் தெரியவில்லை.
தயவுசெய்து அவரிடம் பேசுங்கள். ஏன் அழுகிறார் என்று கேளுங்கள்” என்றார்கள். நேயோமி தரையில் அமர்ந்து அந்த மூதாட்டியின் தோளை அணைத்துக்கொண்டு, அரபு மொழியில், “என்ன ஆயிற்று? ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்க, அந்த மூதாட்டி உடனே அழுவதை நிறுத்தினார். ஆங்கிலம் தெரியாததால் அன்று விமானம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அவர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார். அவர் சேர வேண்டிய நகரில் தன் மகன் தனக்காகக் காத்திருப்பதாகவும், நாளை அங்கே தனக்கு முக்கியமானதொரு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது என்றும் அப்பெண் சொன்னார். விமானம் தாமதமாகப் பயணிக்கிறதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்பதை நேயோமி சொன்னதும் அப்பெண் புன்னகைத்தார்.
அழுத மூதாட்டி சிரித்தார்
அவரது மகனிடம் பேசி, அவரது தாயோடு பேச வைத்தார். தன் தந்தையையும் அழைத்து அரபு மொழியில் அப்பெண்ணோடு பேசச் சொன்னார். அழுத மூதாட்டி சிரிக்கத் தொடங்கினார். தன் கைப்பையில் வைத்திருந்த தின்பண்டங்களை எடுத்து அனைவருக்கும் பரிமாறினார். நேயோமி எதுவும் பெரிதாகச் செய்துவிடவில்லை. ஆனால் அவர் செய்த சின்ன அன்புச் செயல்கள் ஒரு பெண்ணின் மனத்தை வருத்தி அழச் செய்த கவலையை, பயத்தை முழுவதுமாய் விரட்டிவிட்டன.
கனிவோடு, பரிவோடு நாம் செய்யும் சின்னஞ்சிறு செயல்களுக்கு உள்ள வலிமையை எடுத்துக்காட்டும் சம்பவம் இது.
யூதர்களோ, யூதரல்லாதவரோ, யாரொருவர் தன் உதவி கேட்டு வந்தாலும் இயேசு அவர்களுக்குக் கனிவோடு உதவினார். உடல்நலமோ, பாவ மன்னிப்போ அவர்கள் தேடியதை மறுக்காமல் கனிவோடு அவர்களுக்கு வழங்கினார்.
இயேசுவுக்கு தங்களால் செய்ய முடிந்தது மிகச் சிறிய உதவியே என்றாலும், உடனே அவர் கேட்ட உதவியை உளமுவந்து செய்த சிலர் இருந்தனர்.
பாஸ்கா எனும் பெருவிழாவை தன் சீடர்களோடு கொண்டாட விரும்பிய இயேசு, தனக்கென்று வீடு ஏதும் இல்லாததால், தகுந்த ஒரு இடத்தைத் தந்து உதவுமாறு ஒருவரிடம் தன் சீடரை அனுப்பி கேட்கச் சொன்னார். மறுவார்த்தை எதுவுமின்றி அம்மனிதர் தன் வீட்டில் அதற்காக இடம் ஒதுக்கி, எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார். அவர் சிலுவை சுமந்து சென்ற கல்வாரிப் பாதையில் அவரது சிலுவையைச் சுமக்க உதவினார் சீமோன்.
இவரையும், தன்னிடம் இருந்த உணவை இயேசுவிடம் தந்த சிறுவனையும், அவர் பாஸ்கா விருந்துண்ண இடம் தந்த மனிதரையும், சரியாக உபசரிக்கப்படாத இயேசுவின் காலடியில் அமர்ந்து தன் கண்ணீரால் அவரின் பாதங்களை நனைத்து, தன் கூந்தலால் துடைத்து அன்பு காட்டிய பெண்ணையும் உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, பைபிளை வாசிக்கும் அனைத்துச் சமயத்தைச் சேர்ந்த சகோதரர்களும் காலங்காலமாய் நினைவுகூர்கின்றனர். அவர்கள் செய்த சிறிய உதவிக்கு இது எவ்வளவு உயர்ந்த, உன்னதமான வெகுமதி!
முடிந்ததைச் செய்யுங்கள்
எனவே ‘நான் என்ன செய்துவிட முடியும்?’ என்று கேட்காமல், கடவுளுக்காக, சக மனிதருக்காக நம்மால் செய்ய முடிந்ததைச் செய்தால் அதனைக்கொண்டு இறைவன் அதிசயங்களை, அற்புதங்களை நிகழ்த்துவார். சமத்துவம், நீதி, சகோதரத்துவம், அமைதி, சமய நல்லிணக்கம், ஒற்றுமை போன்ற உயர்வுகள் நம் உலகில் உண்மையாகிட நாம் செய்யும் சின்னஞ்சிறிய பங்களிப்புகள்கூட காலமெல்லாம் நினைவுகூரப்படும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com