

காவிரியின் இரண்டு கரைகளையும் தொட்டுக்கொண்டு நகரும் நதிநீர் நனைத்த இடங்களில் பயிர்கள் மட்டுமின்றி பக்தியும் செழித்தது. அத்தகைய திருத்தலங்களில் ஒன்றுதான் கும்பகோணம்.
ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆந்திராவிலிருந்து புறப்பட்டு தவப்பயணம் மேற்கொண்ட ஸ்ரீவிஜயீந்திர தீர்த்தர் கும்பகோணத்தில் வந்து தங்கினார். வேறெங்கும் செல்லாது தமது திருமடத்தை அமைத்துக்கொண்டார். மந்திராலயத்தில் குடிகொண்டிருக்கும் மகான் ராக வேந்திரர் இவரது குருபரம்பரையைச் சேர்ந்தவர் தான். 97 ஆண்டுகள் உடலில் வாழ்ந்து மறைந்தாலும் அவரது துவைத சித்தாந்தக் கருத்துக்களின் உயிர்ச்சுடர் இன்னும் மங்கவில்லை.
விஜயீந்திர தீர்த்தர் ஞான பண்டிதர், ஜீவன் முக்தர். கலைகளில் வல்லவர். வாதத் திறமையில் ஈடு இணையற்றவர். இவர் இயற்றிய 104 கிரந்தங்கள் துவைத சித்தாந்தக் கருத்துக்களின் ஞானசுரங்கம் ஆகும். குடும்பத்தவர்களால் ஆந்திராவில் உள்ள மத்வ மடத்திற்கு தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டவர் விஜயீந்திரர். பிறகு மத்வ மடத்தின் தலைவராக அமர்ந்த பின்னர் காஞ்சி, கோலார், தும்கூர், திருமலை, மந்திராலயம், நஞ்சன்கூடு, ஸ்ரீ ரங்கம், மதுரை, தஞ்சாவூர் எனப் பல இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை சென்றார்.
அக்காலத்தில் கும்பகோணத்தில் ஆதிகும்பேசுவரர் கோயில், சாரங்கபாணி திருக்கோவில், சக்ரபாணி கோவில், ராமசாமி கோவில் போன்ற பல்வேறு கோவில்களின் நிர்வாகப் பொறுப்பை லிங்கராஜேந்திர பண்டிதர் என்பவர் ஏற்று நடத்திவந்தார். இவருக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட செல்வாக்கின் காரணமாக மமதை உண்டாயிற்று. எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுவதும் தனக்கு நிகர் யாருமில்லை என்று தருக்கித் திரிவதுமாக இருந்துவந்தார்.
இவரை அடக்குவார் யாருமில்லையே என்று ஊர்மக்கள் மனம் வருந்தினர். இச்சமயத்தில் அடக்கமும் அறிவும் மிகுந்த விஜயீந்திர தீர்த்தர் தஞ்சையில் தங்கியிருப்பதை அறிந்த பக்தர்கள் அவரைக் கும்பகோணம் வரவேண்டுமென்றும், அங்கே கோயில் நிர்வாகத்தில், அகம்பாவத்துடன் நடந்துகொள்ளும் லிங்க ராஜேந்திர பண்டிதரை அடக்க வேண்டு மென்றும் வேண்டிக் கொண்டனர். இருவருக்குமிடையே தத்துவ விவாதம் நடத்த முடிவெடுக்கப் பட்டது.
ஆதி கும்பேசுவரர் கோயிலில் போட்டி ஏற்பாடாயிற்று. மக்கள் போட்டியைக் காணத் திரண்டனர். விஜயீந்திரர் வெற்றி பெற்றால் லிங்க ராஜேந்திரர் வசமிருக்கும் கோயில் நிர்வாகம், விஜயீந்திரா் வசம் கொடுக்கப்பட வேண்டும். லிங்க ராஜேந்திரர் வென்றால் விஜயீந்திரர் தமது மடத்தைத் துறந்து லிங்க ராஜேந்திரரிடம் சேவகம் புரிய வேண்டும்.
ஒன்பது நாட்கள் போட்டி
வாதங்கள் தொடங்கின. தர்க்கத்தின் வாள்கள் மோதி மின்னின. விவாதம் நீண்டது. விஜயீந்திரரை வெற்றிகொள்ள லிங்க ராஜேந்திர பண்டிதரால் முடியவே இல்லை. ஒன்பது நாட்கள் நடந்த போட்டியைக் காண தஞ்சை மன்னர் சேவப்ப நாயக்கரும் தமது அரசவை அறிஞர்களுடன் வந்திருந்தார். ஒன்பதாம் நாள் லிங்க ராஜேந்திரர் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். கும்பகோணம் கோயில்களின் நிர்வாகம் அனைத்தும் விஜயீந்திர தீர்த்தர் வசம் வந்த கதை இதுதான்.
விளக்கை எரிவித்த ராகம்
புகழ்பெற்ற கவிஞரும் பாடகருமான தான்சேன், தீபக் ராகத்தைப் பாடினால் தீப விளக்கு தானே சுடர்விடும் என்பார்கள். அவரது சீடர் ஒருவர் கும்பகோணம் வந்தபோது, விடுத்த சவாலை ஏற்று விஜயீந்திர தீர்த்தர் குத்துவிளக்கின் பஞ்சமுகத்திரிகளைத் தாமே பற்றிக் கொண்டு எரியச்செய்தார். தான்சேனால் மட்டுமே சாதிக்க முடிந்த இசை அதிசயத்தை தன்னாலும் சாதிக்க முடியும் என்று சாதித்துக் காட்டினார் விஜயீந்திர தீர்த்தர்.
கும்பகோணம் காவிரியாற்றின் தென்கரையில் சோலையப்பன் தெருவில் விஜயீந்திரரின் பிருந்தாவனம் இருக்கிறது. ஆனி மாதத்தில் விஜயீந்திரர் ஆராதனை உற்சவம் கும்பகோணத்தில் இன்றளவும் கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.
காவிரிக் கரையில் ஞானதீபங்கள் இப்படித்தான் ஆங்காங்கே இன்னமும் எரிந்துகொண்டிருக்கின்றன.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com