Last Updated : 15 Apr, 2021 03:10 AM

 

Published : 15 Apr 2021 03:10 AM
Last Updated : 15 Apr 2021 03:10 AM

மெய் வழிப் பாதை: அம்பேத்கரின் கனவு நூல்

வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இந்த உலகத்தில் என் இடம் என்ன? நாம் அனுபவிக்கும் துயரங்களுக்குக் காரணம் என்ன? இதி லிருந்து விடுதலையடைவதற்கான மார்க்கம் என்ன? இந்தக் கேள்விகளின் அடிப்படையில் வெவ்வேறு மார்க்கங்கள், வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணிகள், வெவ்வேறு கலாசாரங்களிலிருந்து மனிதர்கள் தேடி, அலைந்து தாங்கள் கண்ட உண்மைகளை எழுதியிருக்கிறார்கள். அப்படி எழுதப்பட்ட புத்தகங்களை சமயம், இனம், தேசம், பழையது, புதியது என்ற வித்தியாசமில்லாமல் அறிமுகப்படுத்தும் தொடர் இது.

இருபதாம் நூற்றாண்டில் இந்தியா கண்ட பேரறிஞர்களில் ஒருவரும் நமது அரசியல் சாசனத்தை உருவாக்கிய தலைமைச் சிற்பியுமான பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் தன் வாழ்நாளின் கடைசியில் எழுதிய 'புத்தரும் அவர் தம்மமும்' நூல் இங்கே அறிமுகப்படுத்தப்படுகிறது.

டிசம்பர் ஐந்தாம் தேதி இரவு. பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் புதுடெல்லியில் அலிப்பூர் சாலையில் உள்ள வாடகை வீட்டில் ரேடியோகிராமைக் கேட்டபடி அதனுடன் இணைந்து உச்சரித்துக்கொண்டிருந்தார். “புத்தம் சரணம் கச்சாமி, தம்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி". புத்தரிடம், அவரது தம்மத்தில் அவரது சங்கத்தில் அடைக்கலம் கொள்கிறேன் என்பதுதான் அதன் அர்த்தம். அப்போது அவரது சமையல்காரர் அங்கே வந்து சிறிது சோறையாவது சாப்பிட்டு ஓய்வெடுக்குமாறு நினைவுபடுத்தினார்.

அம்பேத்கர் வெகுகாலம் உழைத்து எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்' புத்தகத்துக்கான முன்னுரையை அவர் நிறைவு செய்திருந்தார். தனது உதவியாளர் ரத்துவிடம் முன்னுரையை அச்சுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டு நள்ளிரவில் உறங்கச் சென்றார் அம்பேத்கர். டிசம்பர் ஆறாம் தேதி காலை உறக்கத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்ட அம்பேத்கர், தன்னைத் துரத்திய நோய்களின் அவஸ்தைகளுடன் போராடி எழுதிய ‘புத்தரும் அவர் தம்மமும்' நூலை புத்தக வடிவில் பார்க்கவேயில்லை.

கல்கத்தாவைச் சேர்ந்த மகாபோதி கழகத்தினர் நடத்திவந்த இதழுக்காக கேட்கப்பட்ட கட்டுரையில் புத்தரின் சமயம் மட்டுமே அறிவியலால் விழிப்புணர்வு பெற்ற சமூகத்தால் ஒப்புக்கொள்ளக்கூடிய சமயமாக இருக்கும் என்று வாதிட்டார். பௌத்தம் இந்த உலகில் மெதுவாகவே வளர்வதற்குக் காரணமாக, பௌத்தம் சார்ந்த நூல்களின் எண்ணிக்கை அதிகமென்று குறிப்பிட்ட அவர், மற்ற சமயத்தினருக்கு உள்ளதுபோல, ஒரு பொதுநூல் பௌத்த மதத்தவர்களுக்கு இல்லை என்று காரணத்தையும் கூறுகிறார். இந்த அடிப்படையில் அவரது கட்டுரையைப் படித்த பலரும் அப்படியான ஒரு நூலை அவர் எழுத வேண்டுமென்று கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அம்பேத்கர் எழுதியதே ‘புத்தரும் அவர் தம்மமும்' ஆகும்.

‘புத்தரும் அவர் தம்மமும்' நூலை எழுதப் பல நூல்கள் பயன்பட்டதாகக் குறிப்பிடும் அம்பேத்கர், ஆதாரமான நூல் என்று அஸ்வ கோஷரின் புத்தசரிதம் நூலைக் குறிப்பிடுகிறார். சில இடங்களில் அஸ்வகோஷரின் மொழியை எடுத்தாண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.

புத்தரின் வாழ்வு, போதனைகளைக் கூறும் நூல் ‘புத்தரும் அவர் தம்மமும்' ஆகும். புத்தரின் பிறப்பு, வாழ்க்கை, கொள்கைகள் மீது தெய்வத்தன்மையை ஏற்றிவிட்ட தேரவாதம், மகாயானம், வஜ்ராயனம் எனப்படும் பௌத்த சமயப் பிரிவுகளிலிருந்து மாறுபட்டு ‘நவயான பௌத்தம்' என்ற ஒன்றை அம்பேத்கர் நிறுவினார். நவயானா என்பதற்கு புதிய வாகனம் என்று பொருள்.

புத்தர் துறவறத்தை ஏற்றதற்கான காரணமாக நமக்கு காலம் காலமாகக் கூறப்படும் கதையை அம்பேத்கர் மறுக்கிறார். ஏனெனில் 29 வயதில் புத்தர் துறவறத்தை ஏற்றார். 29 வயதான மனிதன் அதற்கு சற்று முன்பு வரை ஒரு இறந்த மனிதனையும் நோயாளியையும் முதுமையுற்றவரையும் பார்க்காமல் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வியைக் கேட்கிறார்.

‘புத்தரும் அவர் தம்மமும்' நூல் புத்தரின் வாழ்க்கை, போதனைகளைப் பற்றிய அரிய தகவல்களைத் தொகுத்து வழங்குகிறது. மதம் என்பது மக்களை இணைப்பதாகவும், துயருறுவோரின் வருத்தங்களைக் குறைப்பதாகவும், அவர்களை அவர்களது துயரங்களிலிருந்து விடுவிப்ப தாகவும் இருக்கவேண்டுமென்பது அம்பேத்கரின் கனவு.

2500 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த புத்தர், மானுடத்தின் ஒற்றுமையையும் அவர்களது சமத்துவத்தையும் பிரகடனப்படுத்தியவர். சாதி, இனம், நிறம் அடிப்படையில் நிலவும் ஏற்றத்தாழ்வைக் கடுமையாக எதிர்த்தவர். அனைத்து மனிதர்களும் ஒரே உயிரியல் வகையைச் சார்ந்தவர்கள் எனச் சுட்டிக்காட்டிய அந்தப் புத்தரின் கொள்கைகளைக் கொண்டு இன்றைய மனிதனுக்கான நீதியை வென்றெடுக்க அம்பேத்கர் எழுதிய நூலே 'புத்தரும் அவர் தம்மமும்'.

இந்த நூல் மறைந்த பேராசிரியர் பெரியார் தாசனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x