சித்திரப் பேச்சு: சிற்பியின் நுட்பம் தொனிக்கும் அர்த்தநாரீஸ்வரர்

சித்திரப் பேச்சு: சிற்பியின் நுட்பம் தொனிக்கும் அர்த்தநாரீஸ்வரர்
Updated on
1 min read

பிருங்கி மகரிஷி சிவபெருமானை மட்டுமே வணங்குபவர். சக்திதேவியை அவர் கண்டுகொள்ளவில்லை. இறைவனும், இறைவியும் ஒன்றாக அருகருகே அமர்ந்திருந்தாலும் வண்டு உருவம் எடுத்து இறைவனை மட்டுமே வலம் வந்து வணங்கினார்.

இதனால் கோபமுற்ற தேவி, சக்தியும் சிவமும் ஒன்றே என்பதை நிரூபிக்க, இறைவனை விட்டுப் பிரிந்து, கேதார கௌரி விரதம் இருந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து, இறைவனின் இடப்பாகத்தில் சங்கமித்து உருவெடுத்ததே அர்த்தநாரீஸ்வரர் உருவாக்கம் ஆகும். எல்லா சிவாலயங்களிலும் பெரும்பாலும் நின்ற கோலத்தில்தான் அர்த்த நாரீஸ்வரர் காட்சி தருவார்.

அருகே, ரிஷபமும் நின்ற கோலத்தில் காட்சி தரும். அமர்ந்த கோலத்தில் உள்ள ரிஷபத்தின் மீது கையை ஊன்றியபடி, அமர்ந்த நிலையில் காணப்படுகிறார் இந்த அர்த்தநாரீஸ்வரர். வலதுபுறத்தில் சிவ அம்சங்களும், இடதுபுறத்தில் சக்திக்குரிய அம்சங்களும் காணப்படுகின்றன. ஒருகரம் ரிஷபத்தின் மீது ஊன்றியபடி, மேல்கரத்தில் மழுவைத் தாங்கியபடி, வலதுகாலைத் தொங்கவிட்ட நிலையில் உள்ளார்.

இடப்புறத்தில் மென்மையான கரத்தில் நீலோற்பல மலரைத் தாங்கி, தூக்கிவைத்த காலின் மீது முழங்கையை ஊன்றியபடி காணப்படுகிறார். தலையில் ஜடாமுடி முதல் பாதம் வரை அனைத்தும் சிறப்பாகவும், நுட்பமான வேலைப்பாடுகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. இடுப்பில் உள்ள சிம்மம் சோழர்களின் காலத்தை நினைவுபடுத்துகின்றது. மூன்றடி உயரம்தான் என்றாலும் அனைத்தும் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சிற்பம், சிற்பியின் சிறந்த கற்பனைத் திறனையும், சிற்பிகளுக்கு ஊக்கமளித்து ஆதரித்த அரசர்களையும் நினைவுபடுத்துகிறது. ஏழாம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கண்டியூர், பிரம்ம சிரகண்டீஸ்வரர் ஆலயத்தில் இந்தச் சிற்பம் உள்ளது. கருவறைக்கு நேர் பின்பக்கத்தில் உள்ள பிரகார மண்டபத்தில் , மேற்கு நோக்கியவாறு அமர்ந்திருக்கிறார் இந்த அர்த்தநாரீஸ்வரர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in