

ஆழ்ந்த நம்பிக்கை நிகழ்த்தும் அதிசயங்கள் இயேசுவின் வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன. நம்பிக்கையைப் பொருத்தவரை மூன்று வகையினர் இருக்கிறார்கள். சிலர் பிடிவாதமாக நம்ப மறுப்பவர். இவர்களுக்குத் துளியும் நம்பிக்கை இல்லை. அறிவியல் ஆதாரங்கள் இல்லாத எதையும் நம்ப மறுப்பவர்கள் இவர்கள்.
இரண்டாம் வகையினர் சிறிது நம்புகிறார்கள். இவர்கள் மனத்தில் நம்பிக்கையோடு சிறிது அவநம்பிக்கையும் சேர்ந்தே இருக்கிறது. நம்பலாமா, வேண்டாமா என்று இவர்கள் அங்கலாய்ப்பார்கள். நம்மில் பெரும்பாலோர் இவ்வகையினரே.
மூன்றாம் வகையினர் முழுவதும் நம்புவோர். கேட்பது கிடைக்கும், நல்லதே வெல்லும் என்று இவர்கள் முழுதும் நம்புவதால், நம்பியது நடக்கும் வரை பொறுமையாகக் காத்திருக்க இவர்கள் தயாராக இருக்கிறார்கள். இவர்களின் ஆழ்ந்த நம்பிக்கை அதிசயங்களை உண்டுபண்ணுகிறது.
இயேசு வாழ்ந்த காலத்தில் இந்த மூன்று வகை மனிதர்களும் இருந்தனர். ஒருமுறை அவர் கற்பித்தவற்றைக் கேட்க வந்த கூட்டத்தினரை அனுப்பிவிட்டு, சீடர்களையும் ஏரியின் மறுகரைக்கு அனுப்பிவிட்டு, அவர் மலை மீது ஏறி தனிமையில் இறைவனோடு பிரார்த்தித்தலில் ஒன்றித்திருந்தார்.
வா என்றார்
பொழுது சாய்ந்தது. இரவு வந்தது. சீடர்கள் சென்ற படகு கரையிலிருந்து நெடுந்தொலைவு சென்றபிறகு, வேகமாக வீசிய காற்றில் படகு தத்தளித்தது. நள்ளிரவு கடந்து இன்னும் விலகாத இருளில், இயேசு கடல் மீது நடந்து அவர்களைத் தேடிச் சென்றார். ஏதோ ஒரு உருவம் கடல் மீது நடப்பதைக் கண்ட அவரது சீடர்கள் அஞ்சி, "ஐயோ, பேய்!" என்று அலறினர். உடனே இயேசு, “துணிவோடிருங்கள். நான்தான். அஞ்சாதீர்கள்!” என்றார் அவரின் தலைமைச் சீடரான பேதுரு, “நீர்தான் என்றால் கடல் மீது நான் நடந்து வர ஆணையிடும்” என்றார். இயேசு “வா!” என்றார்.
படகிலிருந்து பேதுரு இறங்கினார். இயேசுவின் மீது இருந்த நம்பிக்கை அவரை நடக்க வைத்தது. சிறிது நேரத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக்கும் அவரது அறிவுக்கும் போராட்டம் தொடங்கியது.
‘எப்படி நான் கடலில் நடக்க முடியும்?’ என்ற கேள்விக்குச் செவிமடுத்து நடக்க முடியுமா என்று ஐயமுற்றார். உடனடியாக, பேதுரு நீரில் மூழ்கத் தொடங்கினார். உடனே, “ஆண்டவரே என்னைக் காப்பாற்றும்!” என்று கத்தினார். இயேசு தன் கரத்தை நீட்டி, பேதுருவைத் தூக்கிவிட்டு “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்று கேட்டார்… பேதுருவின் கரம்பிடித்து அவரை நடக்க வைத்தார். படகில் இயேசுவும் பேதுரு வும் ஏறிய பின் காற்று அடங்கியது.
பேதுரு படகை விட்டு இறங்கிய பின்னரும் பயந்து படகில் இருந்த மற்ற சீடர்கள் முதல் வகையைச் சார்ந்த வர்கள். நம்பிக்கை இல்லாதவர்கள்.
நம்பியதால் படகை விட்டு இறங்கி, இயேசுவை நோக்கி நடக்கத் தொடங்கி பின்பு ஐயம் கொண்டதால் நீரில் மூழ்கத் தொடங்கிய பேதுரு இரண்டாம் வகையினர். நம்மில் பெரும்பாலோர் இவ்வகையினர்தான்.
ஆழ்ந்த நம்பிக்கை
சில வேளைகளில் நமது நம்பிக்கை அவநம்பிக்கையை, ஐயத்தை மேற்கொள்கிறது. நாம் நம்பி ஒன்றில் இறங்குகிறோம். பின்பு நடப்பவை காற்றைப் போல, அலைகளைப் போல நம்மைப் பாதித்து, ஐயங்களைத் தோற்றுவிக்க, நாம் நம்பிக்கை குறைந்து மூழ்கத் தொடங்குகிறோம்.
மூன்றாவது வகையினர் யாரையாவது இயேசு சந்தித்தாரா? சந்தித்தார். அந்த மிகச் சிலரின் ஆழ்ந்த நம்பிக்கையைக் கண்டு வியந்து, மனதாரப் பாராட்டினார். அவர்களில் ஒருவர் யூதர் அல்லாதவர் என்பதுதான் வியப்புக்குரியது.
இவர் ரோமப் பேரரசின் ராணுவ அதிகாரி. நூற்றுவர் தலைவர் என்று அழைக்கப்பட்ட அதிகாரிகளின் நிர்வாகத்தில் நூறு ராணுவ வீரர்கள் இருந்தார்கள். இந்த நூற்றுவர் தலைவர் கப்பர்நாகும் என்ற ஊரில் இருந்தவர். அவரது பணியாளர் ஒருவர் நோயுற்றுச் சாகும் தருவாயில் இருந்தார். அவர் மீது இவருக்கு மிகுந்த அன்பும் அக்கறையும் இருந்ததால் இயேசுவைப் பற்றியும் அவர் செய்த அருஞ்செயல்கள் பற்றியும் கேள்விப்பட்ட இந்த அதிகாரி யூத மதப் பெரியவர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பி, தம் பணியாளரைக் காக்க வருமாறு வேண்டினார்.
இந்தப் பெரியவர்கள் இயேசுவிடம் வந்து நூற்றுவர் தலைவர் யூத மக்களை, அவர்களின் நாட்டை அன்பு செய்பவர், அங்கு வாழ்ந்த யூதர்களுக்காக தொழுகைக் கூடம் ஒன்று கட்டித் தந்தவர் என்றெல்லாம் சொல்கிறார்கள். இயேசு அவர்களோடு சேர்ந்து அந்த அதிகாரியின் இல்லத்துக்குப் போகும் வழியில், அதிகாரியின் நண்பர்கள் சிலர் வந்து, இயேசுவிடம், "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மை நேரில் வந்து சந்திக்கும் தகுதியும் எனக்கிருப்பதாக நான் கருதவில்லை. எனவே நீர் அங்கிருந்தவாறே ‘குணம் பெறட்டும்’ என்று சொன்னால் போதும். என் பணியாளன் குணம் பெற்றுவிடுவார்" என்று அதிகாரி சொல்லியனுப்பியதாகச் சொன்னார்கள்.
ஏன் இயேசுவின் மீது அவர் இவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதற்கான காரணத்தையும் அவர் சொல்லி அனுப்பினார். "எனக்குக் கீழ் பணிபுரியும் வீரர்கள் எல்லாம் நான் சொன்னால் போதும். சொன்னதை உடனே செய்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் என் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள். அது போன்றே நோய்கள், நலம் யாவின் மீதும் உமக்கு அதிகாரம் உண்டு" என்று தங்கள் தலைவர் நம்புவதாக அவரின் இந்த நண்பர்கள் கூறினர்.
பணியாளர் குணமானார்
தன் சொந்த நாட்டினரான இஸ்ராயேலரில் கூட இத்தகைய ஆழ்ந்த நம்பிக்கையைத் தான் கண்டதில்லை என மகிழ்ந்து கூறிய இயேசு, தொலைவில் இருந்தவாறே அந்த நூற்றுவர் தலைவனின் பணியாளரைக் குணமாக்குகிறார்.
இயேசுவே மகிழ்ந்து பாராட்டும் அளவுக்கு ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த நூற்றுவர் தலைவர் மூன்றாவது வகையைச் சார்ந்தவர்.
இந்த நூற்றுவர் தலைவர் ஆழ்ந்த நம்பிக்கைக்கு மட்டுமல்ல, பிற நாட்டினர், பிற மதத்தினர், பிற இனத்தினரோடு நாம் கொண்டிருக்க வேண்டிய நல்லுறவுக்கும் ஒரு அருமையான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.
இயேசு வாழ்ந்த பாலஸ்தீனம் ரோமப் பேரரசின் ஆதிக்கத்தில் இருந்தது. அந்த நாட்டின் ராணுவ அதிகாரி தனக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, யூத மக்களை எவ்விதத்திலும் வெறுக்காமல், துன்புறுத்தாமல், மாறாக அவர்களை அன்புசெய்து, அவர்கள் வழிபடுவதற்கு ஒரு தொழுகைக் கூடத்தையும் கட்டித் தந்தார். இந்த நல்லுறவே ஓர் இக்கட்டான நேரத்தில் அவர் வேண்டியதைப் பெற்றுத் தந்தது.
நம்பியும் நம்பாமலும் வாழும் நாம் இவரைப் போல ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்களாய், அனைவரோடும் நல்லுறவு கொள்ளும் நல்லவர்களாய் இருந்தால், நாம் வேண்டுவது கிடைக்கும். நமக்கு நல்லவையே நடக்கும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com