ஆன்மிக நூலகம்: துக்க நிரோத மார்க்கம்

ஆன்மிக நூலகம்: துக்க நிரோத மார்க்கம்
Updated on
2 min read

பௌத்தத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் இரண்டாவது புத்தர் எனப் போற்றி மதிக்கப்படுபவர் ஆச்சார்யா நாகார்ஜூனர். அவர் தம்மை ஆதரித்த புரவலரான சாதவாஹ மன்னர் கௌதமீபுத்திரருக்கு எழுதிய அறிவுரைகள் அடங்கிய சுரில்லேகா எனப்படும் நூலிலிருந்து வெளியிடப்படும் சிறுபகுதி இது. பௌத்த சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் வாழ்வியல் நெறிகளையும் அறத்தையும் தெள்ளத் தெளிவாகவும் சாரம் குன்றாமல் சுருக்கமாகவும் கூறும் அரிய நூல் சுரில்லேகா.

நல்லறிவு/நற்காட்சி, நல்லெண்ணம்/நல்ல நோக்கம், நற்பேச்சு, நற்செயல், நற்தொழில், நன்முயற்சி, நன்மனவிழிப்புணர்வு, நற்சமாதி.

ஒருவர் வாழ்க்கையில் எந்த நிலையில் பிறந்திருந்தாலும் சம்சாரம் துக்கமயமானது என்பதை உணர்ந்து சம்சாரத்தின் தீய விளைவுகளைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். வாழ்க்கை துக்கமயமானது என்கிற உண்மையை ஒருவர் உண்மையிலேயே புரிந்துகொள்கிறபோது, இயற்கை யாகவே அவர் துக்கத்திலிருந்து விடுதலையை நாடுவார். இவ்வாறு துக்கத்திலிருந்து முற்றிலும் விடுதலையை நல்குகின்ற நிர்வாண நிலையையடைய விரும்புகின்ற ஒருவர் புத்தர் காட்டியுள்ள தர்மப்பாதையில் வழி நடந்து செல்வதில் ஆர்வத்தை வளர்ப்பார்.

முதலாவதாக அவர் தம்மை ஆக்கும் ஐந்து கந்தங்களும் நிலையற்றவை என்பதை உணரவேண்டும். இரண்டாவதாக சம்சாரத்திலே பொதுவாக எல்லாமே, குறிப்பாக எந்த வாழ்க்கைத் தளத்தில் பிறந்திருந்தாலும் எல்லாமே துக்கமயமானது என்பதை உணரவேண்டும். அதேசமயம், இந்தத் துக்கமயமான உலகைப் படைப்பது, துக்கத்தைப் படைப்பது எந்த இறைவனும் அல்ல என்பதையும் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து உணர வேண்டும்.

உண்மையில் இங்கு துக்கம் மாத்திரம் உள்ளது. துக்கத்தைப் படைத்தவரும் இல்லை. துக்கத்தை அனுபவிப்பவர் என்று யாரும் இல்லை. அடுத்து, துக்கம் எழுவது அறியாமையாலும் பேராசைகளாலும் பற்றுதல்களாலும் அவற்றால் தூண்டப்பட்டு ஆற்றும் தீயவினைகளாலும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். துக்கம் எழுவதன் காரணிகளைப் புரிந்து கொள்ளும் ஒருவர் அந்தக் காரணங்களை அகற்றித் துக்கத்திலிருந்து விடுதலை பெறுவதை விரும்புவார்.

அவர் தியானத்தில் ஆழ்ந்து துக்கத்தின் காரணங்களான பேராசை களும் பற்றுதல்களும் தீய வினைகளும் தம்மால் பூண்டோடு அழிக்கப்பட்டனவா என்று சிந்தித்துப் பார்க்கிறார். அதே மாதிரி துக்கத்தின் காரணங்களை நீக்கி, துக்கத்திலிருந்து பூரணமாகவும் நிரந்தரமாகவும் விடுதலை பெற்ற நிர்வாண நிலை அடையப்பட்டதா என்பதையும் தியானத்தில் சோதித்துப் பார்த்து உணர்கிறார். துக்கநீக்க மார்க்கமாகிய உன்னத எட்டு அங்கப் பாதையில் வழுவாது வழிநடந்து சீலம், சமாதி, பஞ்ஞா ஆகிய தம்மப் பயிற்சிகளில் உண்மையில் தேர்ச்சி அடையப்பட்டதா என்பதையும் தியானத்தில் உள்ளூர ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்து உணர்கிறார்.

பகவன் புத்தர் கூறியுள்ளது போல, சுருக்கமாக:

“ஒருவர் துக்கத்தின் பல பரிமாணங்களையும் புரிந்துகொள்ள வேண்டும், துக்கம் உண்டாவதற்கான காரணங்களை நீக்க வேண்டும். துக்கத்தை நீக்கும் பாதையாகிய உன்னத எட்டு அங்கப் பாதையில் வழுவாது வழிநடந்து செல்ல வேண்டும். துக்கம் முற்றிலும் நீங்கிய நிர்வாண நிலையை அடையவேண்டும்.”

இவ்வாறு ஒருவர் உன்னத எட்டு அங்கப் பாதையைப் பின்பற்றும்போது, அவர் நிர்வாண நிலையை அடைவார் என்பதில் ஐயமில்லை. பழங்காலத்தில் ஒரு காட்டுமிராண்டி அரசன் பகவான் புத்தரின் ஒரு சித்திரத்தைப் பார்த்தான். அவர் போதித்த வாழ்க்கைச் சக்கரத்தைப் பார்த்தான். வாழ்க்கையில் ஒன்றையொன்று சார்ந்து எழுகின்ற பன்னிரண்டு சார்புகளையும் புரிந்துகொண்டான். நான்கு உன்னத உண்மைகளையும் புரிந்துகொண்டான். இவற்றின் காரணமாக அந்த அரசன் சம்சார சாகரத்தைக் கடந்து அக்கரையை அடைந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பழங்கால அரசனைப் போலவே ஒருவர் இவற்றைப் புரிந்துகொண்டால் சம்சார சாகரத்தையும் கடந்து அக்கரையாகிய நிர்வாணத்தை அடைவது உறுதி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in