

இஸ்லாமிய மெய்ஞானத் திரட்டான “ஹதீஸ்” நீ இறப்பதற்கு முன் இறந்துவிடு என்று அறிவுறுத்துகிறது. உடலளவில் இறப்பதற்கு முன் காம, குரோத, ஆசைகளைத் துறந்து மனத்தளவில் இறந்துவிடு என்பது இதன் பொருள். இவ்வாறு இறப்பதற்கு முன்னரே இறந்து விட்ட இஸ்லாமிய மெய்ஞானியருள் சூஃபிஞானிகள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இத்தகைய சூஃபி மெய்யுணர்வில் ஈடுபட்ட இஸ்லாமிய பெண் ஞானியர்களில் கீழக்கரை ஆசியாம்மாள், தென்காசி ரசூல் பீவி, இளையாங்குடி கச்சிப் பிள்ளையம்மாள் ஆகியோர் முக்கியமான பெண்பால் சூஃபிக் கவிஞர்களாகப் போற்றப்படுகிறார்கள்.
இம்மூவருள் கீழக்கரை செய்யது ஆசியா உம்மா கொடைவள்ளல் என்று பெயர் பெற்றவர். சீதக்காதி மரைக்காயர் பரம்பரையைச் சேர்ந்தவர். தந்தையார் ஹபீபு மரைக்காயர், தாயார் உம்மா ஹபீபு உம்மா. கீழக்கரையில் பல பண்டக சாலைகளுக்கும், கப்பல்களுக்கும் சொந்தக்காரர்களாக வாழ்ந்த குடும்பத்தில் பிறந்தவர் ஆசியா உம்மா. ஆசியா உம்மாவின் அருட்பாடல்கள் பலவும் அரபுத் தமிழில் இயற்றப்பட்டுள்ளன.
மேல்வீட்டுப் பிள்ளை
செய்யிது ஆசியா உம்மா, சிறுவயதிலிருந்தே யாருடனும் அதிகம் பேசுவதில்லை; பெரிய வீட்டில் வசதிமிக்க தனி அறைகள் பல இருப்பினும், மாடியில் தனித்திருப்பதையே பெரிதும் விரும்பினார்.
இவ்வாறு பலகாலங்களை மாடியில் தனியறையில் செலவிட்டதால் இவரை மேல்வீட்டுப் பிள்ளை என்றே உற்றாரும் உறவினரும் செல்லமாக பெயரிட்டு அழைத்தனர். மேல்வீட்டில் ஏகாந்தமாக மௌனத்தில் வீற்றிருக்கும் ஆசியா உம்மாவின் மனம் இறைத் தியானத்தில் ஒன்றியது. சும்மா இருக்கும் சுகம் அரிது காண் என்றிருந்தார். தமது ஹஜ் கடமைகளை உரிய காலத்தில் ஆற்றத் தவறியதில்லை.
இவரது ஞானத்தேடல்களின் தெறிப்பு, இவரை கீழக்கரை குது புஸ்ஸமான் வகவ்துல் அவான் கல்வத்து நாயகத்தின் முதன்மைச் சீடர் ஆக்கியது. நினைத்த மாத்திரத்தில் இறைவன் மீது பாடல் இயற்றும் இவரது ஆற்றல் பலரையும் வியக்க வைத்தது.
வேனிற்காலத்தில் வீசிய தென்றல்
வேனிற்காலங்களில் இவர் தனக்குச் சொந்தமான கடற்கரை நடுப்பண்டக சாலைக்குரிய தென்னந்தோப்பில் தனித்திருந்து பாடல் புனைவது வழக்கம். வேனிற்காலத்தில் வீசிய தென்றலாக இவர் பாடிக்கொண்டே இருப்பார். இவர் வீற்றிருந்த மேல்மாடத்திலிருந்து பார்த்தால் தெரியும் கடல், இவர் பாடல்களைக் கேட்டு ஆர்ப்பரித்தது. காற்றை அனுப்பி இவரது பாடல்களை அலைக்கரங்களில் ஏந்தி தனது ஆழ்மனத்தில் வைத்துக்கொண்டது. காணாமலே போய்விட்ட மாலிகா ரத்தினம் என்ற அவரது அருட்பா திரட்டினை இனி அந்தக் கடலிடம் தான் கேட்க வேண்டும்.
சபா என்ற அராபியச் சொல்லே சூஃபி என்கிற சொல்லாக மாறியது என்று ஒரு ஆய்வு கூறுகிறது. சபா என்றால் தூய்மை என்று பொருள். ஆசியா உம்மாவின் தூயவாழ்வில் கனிந்த இறை நாட்டத்தில் எழுந்த பாடல்களுக்கு ஈடு இணை இல்லை. ஆசியா உம்மா இஸ்லாமிய ஞானமார்க்கத்தை எளிய முறையில் விளக்கும் வசன நூல் ஒன்றை அரபுத் தமிழில் எழுதியுள்ளார். இவர் எழுதிய பல தொகுப்புகளில் மெய்ஞானத் தீப ரத்தினம், மாலிகா ரத்தினம் ஆகிய இரண்டனுள் மாலிகா ரத்தினம் கிடைக்கப் பெறவில்லை.
இவர் 71 தலைப்புகளில் பாடல்கள் புனைந்துள்ளார். கண்ணி, விருத்தம், பைத்து, துதி, இன்னிசை, ஆனந்தக் களிப்பு, கும்மி, வெண்பா, பதிகம், மாலை முதலிய பா மரபுகளில் இவர் புனைந்துள்ள பாடல்கள் ஓதுவதற்கும், ஓதி உணர்வதற்கும் இனியவை. கண்ணி என்ற பா வகையில் பரமானந்தக் கண்ணி, சதானந்தக் கண்ணி, அறிவானந்தக் கண்ணி, ஏகாம்பரக் கண்ணி, ஈஸ்வரக் கண்ணி, குணங்குடியார் கண்ணி, நபிகள் நாயகம் கண்ணி, கஃபார் கண்ணி, என்று ஒவ்வொரு கண்ணியிலும் உள்ளத்தை உருக்கும் அருட்பாடல்களைப் புனைந்துள்ளார்.
ஞானரத்தினக் கும்மியை மட்டும் 120 கண்ணிகளில் ஆக்கியுள்ளார்.
குணங்குடியார் ஞாபகமே
மனோன்மணியாள் வந்தேன்
மதிக்கவொண்ணாச் சொற்கள் எல்லாம்
குணமுடனே தாருமய்யா.
என்ற வரிகளை இசையுடன் இன்றளவும் பாடி மகிழ்வோர் உள்ளனர்.
தனது 84வது அகவையில் 1948-ல் கீழக்கரையில் இறைவனடி சேர்ந்து இறப்பதற்கு முன்பே இறந்துவிட்ட பேறுபெற்றார் ஆசியா உம்மா.
(தேடல் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : thanjavurkavirayar@gmail.com