81 ரத்தினங்கள் 68: அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே

81 ரத்தினங்கள் 68: அநுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே
Updated on
1 min read

இலங்கை வேந்தன் ராவணன், மகாலட்சுமியின் வடிவான சீதையைக் கவா்ந்து வந்து நெறிதவறி நடந்தான்; அந்த வேளையில் அவனுக்கு நல்ல புத்திமதிகளை எடுத்துக் கூறிய சகோதரன் விபீஷணனை அரண்மனையை விட்டு துரத்தினான். அவன் மனைவி மண்டோதரி நல்ல குணமான பதிவிரதை. அவளும் சீதையை ராமனிடமே ஒப்படைத்து விடுங்கள் என்று சொல்லி அழுது மன்றாடுகிறாள். அவள் அறிவுறுத்தியதையும் ராவணன் ஏற்கவில்லை. இப்படிப்பட்ட செயலைச் செய்யாதே என்று இடித்துரைத்த மாரீசனின் வார்த்தைகளும் ராவணனனின் தலையில் ஏறவில்லை. சீதா பிராட்டியே அவனிடம் குணத்துடன் எடுத்துச் சொன்னாள். ராவணனுடைய பாட்டனார் மால்யவான் இது தகாத செயல் என்று சொல்லியும் ராவணன் கேட்கவில்லை.

“ராவணா! உன்னைப் பலசாலி என்று நம்புகிறாய். ராமன் ஒன்றுமில்லாதவன், வனவாசி, குரங்குகளை உடன் வைத்திருக்கிறான், அவன் என்ன செய்துவிட முடியும் என்று நினைக்கிறாய், மேலும் நீ பெற்ற வரபலத்தினால் அறிவிழந்திருக்கிறாய். மனிதர்களையும் வானரர்களையும் ஒரு பொருட்டாக மதிக்காமல் இருக்கிறாய். உன் அகம்பாவம் ஒதுக்கி நல்ல புத்தியுடன் சிந்தித்துப் பார். அசுரர்களின் பரம வைரியான மகா விஷ்ணுதான் மனித ரூபத்தில் ராமனாகவும் தேவர்களே வானரங்களாகவும் ஒன்றுகூடி நம்மிடம் யுத்தத்துக்கு வந்திருக்கிறார்கள்.” என்று தான் குழந்தையாய் பார்த்து வளர்ந்த ராவணனிடம் மன்றாடினார் மால்யவான்.

“ஸ்ரீராமன் என்பவா் சராசரி மனிதன் அல்ல. நீ ஈசனிடம் வரம் கேட்கும் போது மனிதா்களால் எனக்கு மரணம் வரக்கூடாது எனக் கேட்கவில்லை. அதனால் மனிதவடிவு கொண்ட இறைவன் உன்னை வதைத்து விடுவார். பலம் தெரியாமல் எதிர்க்கத் துணியாதே. மகாலட்சுமியான சீதையை அவள் கணவனிடம் ஒப்படைத்துவிடு” என நல்ல அநுகூலமான வார்த்தைகளைக் கூறினார் மால்யவான். பெரியவரான அவா் வார்த்தையையும் கேட்காமல் அழிந்து போனான் ராவணன்.

மால்யவானைப் போலே இறைவனின் பெருமையை அறியாதவா்களுக்கு, அதை எடுத்து கூறும் அறிவு எனக்கில்லையே. இறையுணா்வு அற்றவளாய் வாழ்கிறேனே எனத் தனது இயலாமையை எடுத்துக் கூறுகிறாள் நம் திருக்கோளுா் பெண்பிள்ளை.

(ரகசியங்கள் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in