சித்திரப் பேச்சு: உலகளந்த பெருமாள்

சித்திரப் பேச்சு: உலகளந்த பெருமாள்
Updated on
1 min read

நின்ற நம்பி, இருந்த நம்பி, கிடந்த நம்பி, திருப்பாற்கடல் நம்பி, திருமலை நம்பி என்று ஐந்து திருநாமங்களில் பெருமாள் காட்சி தரும் இடம் திருக்குறுங்குடி அழகிய நம்பி திருக்கோயில். சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையதாகச்சொல்லப்படும் இந்த ஆலயத்துக்குள் நுழையும்போது, நுழைவாயிலின் இடதுபுறம் கோபுரத்தின் கோஷ்டத்தில் சிறிய அளவில், சுமார் ஒரு அடி உயரத்தில் புடைப்புச் சிற்பமாக இந்த உலகளந்த பெருமாள் சிற்பம் உள்ளது. அளவில் சிறியதாக இருந்தாலும் நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்பம் இது.

தலையை ஒருபுறம் சாய்த்து மேல்நோக்கிப் பார்த்தபடி, இடுப்பை வளைத்து வலது காலை நன்கு ஊன்றியபடி, இடது காலை மேல் நோக்கித் தூக்கிய வண்ணம் காட்சி தருகிறார். எட்டு கரங்களில் சங்கு சக்கரம், கத்தி கேடயம், வில் அம்பு, கதை போன்றவற்றைத் தாங்கியுள்ளார். அம்பறாத்தூணியில் இருந்து அம்பை வலது கரத்தின் இரு விரல்களால், எடுப்பதைப் பார்க்கும்போது சிற்பியின் நுணுக்கம் புலப்படுகிறது.

தலையிலே அழகிய வைரக்கிரீடம், இரு காதுகளில் தாமரை மலர் போன்ற காதணியும், அதில் இருந்து காதோரங்களில் தொங்கும் நீண்ட மணிகளும், காதுகளில் மகர குண்டலங்களும், மார்பிலும்,தோள்களிலும், கரங்களிலும் வித்தியாசமான அணிகலன்களும், இடையில் அழகிய பூக்களால் ஆன ஆபரணம் வலது இடையில் இருந்து, இடதுபுறத் தோளுக்குச் செல்வது போன்ற வித்தியாசமாக அணிகலன்களும், கால்களில் தண்டையும் சிலம்பும் அலங்கரிக்கின்றன.

நிற்கும் வலதுகாலில் இருந்து, தூக்கிய இடதுகால் வரை ஆடையின் மடிப்புகள் அனைத்தும் சிறப்பு. வலதுகரத்தில் நீண்ட வாளும், இடதுகரத்தில் கேடயமும் உள்ளன. கேடயத்தின் உட்பகுதி குழிவாக இருக்கும். அதைக்கூடச் சரியாகக் காட்டியுள்ளார் சிற்பி. தூக்கிய இடதுகாலின் கட்டைவிரலைப் பிடிக்க போகும் பாவனையில் ஒரு இடதுகரம் அமைந்துள்ளது. தூக்கிய காலுக்கும், கரத்துக்கும் இடையில் மற்ற கரங்களின் பகுதிகள் என அனைத்தையும் மிகவும் நுணுக்கமாகப் பார்த்துச் செதுக்கியுள்ள நமது சிற்பிகளின் கலைத்திறனை வியந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு, சோழர்களாலும், நாயக்க மன்னர்களாலும் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இது. சிற்பத்தில் காணப்படும் அணிகலன்கள் மற்றும் பூக்கள் போன்ற அணிமணிகளைப் பார்க்கும் போது இவை நாயக்கர்கள் காலத்தை நினைவுபடுத்துகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in