

திருபுவன வீரபுரம். இன்றைய திருபுவனத்தின் பண்டைய பெயர் ஆகும். இங்குதான் ஸ்ரீ கம்பஹரேஷ்வரர் கோயில் அமைந்துள்ளது. ‘திருபுவன வீரன்’ என்ற விருது பெற்றவனும், கவிச்சக்கரவர்த்தி கம்பரின் ராம காவியத்தில் ‘தியாக விநோதன்’ என்று சிறப்புப் பெற்றவனுமான மூன்றாம் குலோத்துங்க சோழனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம் இது.
இந்த ஆலயத்தின் கோபுரத்தில் தெற்குப் பகுதியில் மேல் அடுக்கு தேவகோஷ்ட மாடத்தில் இந்தச் சிற்பம் காணப்படுகிறது. இதை ‘மன்னன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் இந்தச் சிற்பத்தை உற்றுநோக்கினால் மார்பின் வலது பக்கத்தில் ஸ்ரீ வத்ஸம் (ஸ்ரீ லக்ஷ்மி இருக்கும் இடம்) முக்கோண வடிவில் காட்டப்பட்டுள்ளது. நெற்றியில் ஸ்ரீ சூர்ணம் உள்ளது. இடுப்பை வளைத்து லாகவமாக வலதுகாலை ஊன்றி, இடதுகாலை சற்று முன்னால் வைத்து கம்பீரமாக நிற்கும் தோற்றம் அழகோ அழகு.
கிருஷ்ணர் அவதாரத்தில் ஆநிரை மேய்த்ததன் அடையாளமாகவும், பார்த்தனுக்கு தேர் ஓட்டியதற்குச் சாட்சியாகவும் வலதுகரத்தில் நீண்ட சவுக்கு காணப்படுகிறது. இடதுகரமோ சிவபெருமான், ரிஷபத்தின் மீது ஊன்றியபடி நிற்கும் காட்சியை நினைவுபடுத்துகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் சிவ அம்சங்கள் சிற்பத்தில் தெரிகின்றன. குறிப்பாகத் தலையில் கிரீடத்துக்குப் பதிலாக சிவ அம்சமான ஜடாமுடி அலங்கரிக்கிறது. மார்பிலும், தோளிலும், இடையிலும் அணிகலன்கள் சிறப்பாக உள்ளன. இடையில் உள்ள சிம்மம் சோழர்களின் கலைக்குச் சான்றாக விளங்குகிறது. இடதுகாலில் முட்டிக்கு கீழ் முழங்காலில் சிவனுக்கே உரிய ‘வீரக்கண்டை’ எனும் அணிகலன் காணப்படுகிறது. இந்த ஆபரணம் பெரும்பாலும் நடராஜர் சிற்பத்தில் வலதுகாலில் இருப்பதைக் காணலாம். இந்த வீரக்கண்டை அணிகலனை சிவ அம்சமான அனுமனும் காலில் அணிந்திருப்பதைக் காணலாம்.
சோழர்கள் பெரும்பாலும் சைவ மரபை ஒட்டியே கோயில்களை அமைந்திருந்தாலும், அவர்கள் வைணவ நெறியையும் சேர்த்தே வளர்த்து வந்துள்ளனர் என்பதற்கு இந்தச் சிற்பம் ஒரு சான்றாக உள்ளது. பெரும்பாலும் சங்கரநாராயணர் சிற்பத்தில் இடதுபுறத்தில் தான் பெருமாள் இருப்பார். ஆனால் இங்கு வலதுபுறத்தில் பெருமாளும், இடதுபுறத்தில் சிவனும் இருப்பதைச் சொல்லாமல் சொல்லும்படி அமைத்த சிற்பியின் திறமையை என்னவென்பது?