மகாபெரியவர் வணங்கிய ஈசான லிங்கம்

மகாபெரியவர் வணங்கிய ஈசான லிங்கம்
Updated on
1 min read

ஈசான லிங்கத்துக்குப் புகழ்பெற்ற திரிபுரசுந்தரி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோயில் ராணிப்பேட்டை மாவட்டம், ஆர்க்காட்டிலிருந்து செய்யாறு - வந்தவாசி சாலையில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் புதுப்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது.

ராஜகோபுரம் இன்றியே காணப் படும் இந்த ஆலயத்தில் இரண்டு தூண்கள் தாங்கிய ஒரு சிறிய விமான அமைப்பு கட்டப்பட்டுள்ளது. அந்தச் சிறிய விமானத்தில் வலதுபுறம் நின்ற கோலத்தில் விநாயகப் பெருமானும், நடுவில் காளை வாகனத்தில் சிவனும், பார்வதியும் அமர்ந்த கோலத்திலும், இடதுபுறம் நின்ற கோலத்தில் சுப்பிரமணியரும் சுதைச் சிற்பமாக வண்ணத்தில் வடிக்கப்பட்டுள்ளனர். அடுத்து ஆலயத்தில் உள்நுழைகையில், ஈசான மூலையில் எக்காலத்திலும் வற்றாத கிணறு ஒன்றுள்ளது.

கருவறை விமான அமைப்புடன் உள்ளது. சுவாமி சந்நிதிக்கும், அம்பாள் சந்நிதிக்கும் இடைப்பட்ட இடத்தில் உள்ள மேற்கூரையில் சந்திரன், பாம்பு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவறையின் உள்ளே கிழக்கு நோக்கிய வண்ணம் வைத்தியநாத சுவாமி ஆத்மசக்தியை வழங்கு கிறார்.

சுவாமி சந்நிதியின் வலப்புறத்தில், கருவறையில் தெற்கு நோக்கிய வண்ணம் திரிபுரசுந்தரி அம்பாள் நின்ற கோலத்தில், மேலே இரண்டு கரங்களில் மலர்கள் ஏந்தியும், கீழ் இரண்டு கரங்களில் அபய, வரத முத்திரைகளுடனும், முகத்தில் புன்சிரிப்புடனும் காட்சிதருகின்றார். அம்பாள் நல்ல வரசக்தியோடு திகழ்வது மட்டுமல்லாமல், வேண்டும் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைப்பதாகவும் நம்பிக்கை உள்ளது.

அம்பாள் சந்நிதியையடுத்து வேறெந்த ஆலயத்திலும் காண முடியாத அமைப்பாக நவக்கிரக சந்நிதியை நாம் தரிசிக்கலாம்.

கருவறையை விட்டு வெளியே வந்த பின், வெளிப் பிரகாரத்தின் இடதுபுற மூலையில் விமான அமைப்பில் தனிச் சந்நிதியில் விநாயகர் அமர்ந்த கோலத்தில் தும்பிக்கையை வாயில் வைத்துக்கொண்டு ஆகாரம் உண்பது போன்ற வடிவத்தில் காட்சிதருகிறார். இது ஒரு அரிய காட்சியாகவே தெரிகிறது.

வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதியில் தெய்வங்கள் நின்ற கோலத்தில் அருள்புரிகின்றனர். இங்கே சல்லாப நாகங்களும், ஐந்து தலை நாக உருவங்களும் உள்ளன. தம்பதி ஒற்றுமை, தாம்பத்ய அந்நியோன்னியம் ஏற்பட பக்தர்கள் சல்லாப நாகங்களை வணங்குகின்றனர்.

அடுத்து ஈசான லிங்க சந்நிதியைக் காணலாம். இதற்கு நேரேதிரே சிறிய பலி பீடம் உள்ளது. காஞ்சிப் பெரியவர் இந்த ஆலயத்துக்கு மூன்று முறை வந்து, இந்த இடத்தில் வெகுநேரம் அமர்ந்து தியானம் செய்திருக்கிறார்.

மகாசிவராத்திரி நாளில் பக்தர்கள் வெளியூரிலிருந்து திரளாக வந்து இங்குள்ள ஈசான லிங்கத்தை வழிபடுவது வழக்கமாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in