81 ரத்தினங்கள் 65: அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தார் போலே

81 ரத்தினங்கள் 65: அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தார் போலே
Updated on
1 min read

வைணவத்தைத் தனக்குப் பின்னர் காப்பாற்றுபவர் என்று ராமாநுஜரை நியமித்த துறவிதான் ஆளவந்தார். திருவரங்கத்தில் நடக்கும் அரையர் சேவை நாட்டிய நிகழ்ச்சியில் ஆழ்வார் பாசுரங்களுக்கு இசையமைத்து அபிநயம் பிடித்துக் காட்டும் கலைஞர்களின் நிகழ்ச்சியை முன்வரிசையில் அமர்ந்து பார்ப்பது ஆளவந்தாரின் ஈடுபாடுகளில் ஒன்றாகும்.

ஒரு வருடம் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து, இராப்பத்து உற்சவம் முடிந்து 21ம் நாள் உற்சவத்தின் போது அரையா்கள், திருவாய்மொழியில் வரும் ‘ஆனந்தபுரம் புகுதும் இன்றே' என்ற பகுதியை மூன்று முறை பாடி நடித்தனர். ஆளவந்தார் அந்தக் கலைஞர்கள் தன்னை நோக்கி உத்தரவிட்டதாகக் கருதினார்.

அனந்தபுரம் நோக்கிச் சென்று சேவியுங்கள் சேவியுங்கள் என்று தாளத்தை தட்டி தட்டி பாசுரம் பாடியது, அவரையே குறிப்பால் அனந்தபுரம் நோக்கிச் செல்லும் படி கூறுவது போல் இருந்தது. உடனடியாக ஆவல் மேலிட தனது சீடர்களுடன் திருவனந்தபுரம் சென்று அங்கே பள்ளிகொண்டிருக்கும் திருஅனந்த பத்மநாபனை திருவடி வாசல், திருநாபிவாசல் வழியாக தரிசித்தார். திருமுடி வாசல் பக்கம் சென்றால் அவன் அழகில் சொக்கிவிடுவேன். எனவே இந்த திவ்ய தரிசனமே என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது என உருகி நின்றார்.

ஆளவந்தாரைப் போலே திருவனந்தபுரம் சென்று திருஅனந்தபத்மநாபனைச் சேவிக்கும் ஆவல் எனக்கில்லையே என்று வருந்துகிறாள் நம் திருக்கோளுா் பெண்பிள்ளை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in