

‘பேறு பெற்றோர்' என்று இயேசு அழைத்தவர்களில் மூன்றாவது வகையினர் கனிவுடையோர். ஏழையரின் உள்ளத்தோரும், துயருறுவோரும் பேறுபெற்றோர் என்று சொன்ன பிறகு, “கனிவுடையோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்" என்றார் இயேசு.
கனிவுடையோர் யார்? இயேசு எத்தகைய மனிதராக இருந்தார் என்பதை வைத்தே இக்கேள்விக்குப் பதில் தேடலாம்.
பல்வேறு வகையான மனிதர் களுடன் இயேசு மிகுந்த கனிவோடும் கருணையோடும் நடந்துகொண்டார். அவர் பேசிய பேச்சிலும் செய்த செயல்களிலும் கனிவும் இரக்கமும் ஒளிர்ந்தன. சிலர் அந்த இரண்டு சொற் களையும் இணைத்து ‘கனிவிரக்கம்' என்ற புதிய சொல்லை ஆக்கியுள்ளனர்.
மனச்சுமைகள் இல்லாத மனிதர் யார்? துயரம், வலி, அச்சம், கவலை யாவும் மனச்சுமைகளாக மாறி நம்மை அழுத்துகின்றன.
உள்ளத்துக்கு இளைப்பாறுதல்
இதனை நன்கு உணர்ந்த இயேசு, “பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப் போரே! எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களைத் தேற்றுவேன்” என்றார். அவரைத் தேடி வரும் மனிதர்களின் மனங்களுக்கு ஆறுதலும் தேறுதலும் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த தன்னைப் பற்றிய ஓர் உண்மையைச் சொன்னார். “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்” என்றார். அவரிடமிருந்து இக்குணங்களை நாம் கற்றுக் கொண்டால், நுகம் போல கடினமாகத் தோன்றும் அவரது படிப்பினைகளை ஏற்று நடந்தால், நம் உள்ளத்துக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்றார் இயேசு.
எசாயா என்ற இறைவாக்கினர் நெடுங்காலத்துக்கு முன்னர் வாக்குரைத்தது, இயேசுவில் நிறைவேறியதை அவரது சமகாலத்தவர் கண்டுகொண்டனர். அவர் சண்டை சச்சரவு செய்யாதவர் மட்டுமல்ல, தேவைக்கு அதிகமாகக் குரலை உயர்த்திக் கூடப் பேசாதவர். நீதியை வெற்றிபெறச் செய்யும் வரை நெரிந்த நாணலை ஒருபோதும் முறிக்காதவர். புகையும் திரியை அணைக்காதவர்.
அவரை அண்டி வந்த மனிதர்களிடம் இயேசு எப்படி நடந்துகொண்டார்? தொழுநோயாளர் ஒருவர் வந்து அவரைப் பணிந்து வணங்கி, “ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று சொல்ல, இயேசு அவரைத் தொட்டு, “நான் விரும்புகிறேன். உமது நோய் நீங்குக!” என்கிறார்.
ரோமப் பேரரசின் படைவீரர்கள் நூறு பேருக்குத் தலைவராக இருந்தவரை ‘நூற்றுவர் தலைவர்' என்று அழைத்தனர். யூதராக இல்லாவிட்டாலும், இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரது அன்பிலும் ஆற்றலிலும் பெரும் நம்பிக்கை கொண்ட நூற்றுவர் தலைவர் ஒருவர் வந்து, முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையோடு படுக்கையில் கிடக்கும் தன் மகனைப் பற்றிச் சொல்ல, “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்கிறார் இயேசு.
நோயாளர் ஒருவரிடம், ‘மகனே, துணிவோடிரு’ என்று சொல்லி, நம்பிக்கை ஊட்டிய பிறகு, அவரை நடக்க வைத்து அவரது உடலுக்கு குணம் அளித்தார். அவரது பாவங்கள் மன்னிக்கப்பட்டன என அறிவித்து, அவரது உள்ளத்துக்கும் நலம் தருகிறார்.
கனிவு என்பது
அவரது பேச்சைக் கேட்க பெருந்திரளாகக் கூடியிருந்த மக்கள் மீது பரிவுகொண்டு அவர்களின் தேவைகளை உணர்கிறார். அவர்கள் கூடியிருந்த இடத்தில் உணவு கிடைக்க வாய்ப்பில்லை. வெகு நேரமாகிவிட்டது. எனவே, அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி போய் உணவு வாங்கிக்கொள்ளும் விதத்தில் விரைவில் அவர்களை அனுப்பி விடுமாறு இயேசுவின் சீடர்கள் அவரிடம் சொல்லுகிறார்கள்.
பசியோடு இருப்பவர்கள் நடந்து தங்கள் ஊருக்கு போய்ச் சேர முடியுமா? முடியும் என்றாலும் அது பெரும் துயரம் அல்லவா? எனவே மக்களை அமர வைத்து, இருக்கின்ற உணவை ஆசீர்வதித்து பகிர்ந்துகொள்ளச் சொல்கிறார் இயேசு. அனைவரும் வயிறார உண்ட அற்புதம் அங்கே நடந்தது.
எனவே, கனிவு என்பது இதுதான். பிறரின் நிலையை அறிந்து, அவர்களின் தேவைகளை உணர்ந்து, இரக்கத்தோடு செயல்படுவது. அவர்களின் துன்பம் நீங்க முனைப்போடு செயலாற்றுவது. மலர் போன்ற மென்மையான மனித மனம், வாடிவிடாதபடி இதமாகப் பேசுவது. அப்படிப் பேசி அவர்களுக்குத் துணிவும் நம்பிக்கையும் ஊட்டுவது.
ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கோபம் கொள்பவர்கள், கடும் சொற்களைக் கூறுபவர்கள், கனிவுடையவராக இருக்க வாய்ப்பில்லை என்று நினைப்பது பெரும் தவறு.
ஆலயம் என்பது இறைவன் வாழும் இல்லம். வழிபாட்டுக்கான இடம். அதை வருவாய்க்காக வணிகக் கூடமாக மாற்றி விட்டவர்களை ‘கள்வர்கள்' எனக் குறிப்பிட்டு, சாட்டையால் அவர்களை அடித்து விரட்டினார் இயேசு.
அப்பாவி மக்களின் அன்றாடப் போராட்டங்களைப் பார்க்க மறுத்து, சட்ட நுணுக்கங்களை மட்டுமே கருத்தில் கொண்டு, சிலரைப் பாவிகள் என்றும் தங்களைத் தூயோர் என்றும் நினைத்துக் கொண்ட பரிசேயரை ‘வெள்ளையடித்த கல்லறைகளே, விரியன் பாம்புக் குட்டிகளே!' என்று விளாசியவர் இயேசு.
எனவே, அறச் சீற்றம் கனிவுக்கு எதிரானது அல்ல. தெரிந்து, தீர்மானித்து, தீமைகள் செய்யும் தீயோரைத் தவிர மற்ற யாவரையும் கனிவிரக்கத்தோடு அணுகுவோர் கனிவுடையோர்.
கனிவுடையவராக வாழ்வது எளிது அல்ல. சிந்தனையும் தியானமும் பிரார்த்தனையும் இவர்களுக்கு ஒரு புரிதலைத் தருகின்றன. ‘குறைகள் இல்லாத, குற்றங்கள் செய்யாத மனிதர் இல்லை. நானும் குறைகள் உள்ளவன் தான். குற்றங்கள் புரிந்தவன்தான். என்னை மன்னித்து கனிவிரக்கத்தோடு கடவுள் ஏற்றுக்கொள்கிறார் என்றால், நானும் அதே போன்று சக மனிதர்களைக் கனிவோடுதானே நடத்த வேண்டும்' என்ற புரிதல் அது.
சரி, கனிவுடையோர் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக்கொள்வர் என்றாரே இயேசு, எந்த நாட்டை? அந்த நாடு இந்தப் புவியில் இல்லாத நாடு. மக்களின் மனங்களிலும் அழியா விண்ணகத்திலும் கனிவுடையோர் இடம் பிடித்துக்கொள்கின்றனர். இதைவிட விலையுயர்ந்த சொத்து வேறேது இருக்க முடியும்?
(தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com