சித்திரப் பேச்சு: இரணியவதம்

சித்திரப் பேச்சு: இரணியவதம்
Updated on
1 min read

ஆறடி உயரத்தில் மிகவும் அழகாக, கம்பீரமாக, இரணியனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு நரசிம்மர் வதம் செய்யும் காட்சி மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வலது காலைச் சற்று மடித்து தரையில் ஊன்றியபடி, இடது காலை மடித்து, இரணியனின் உடலைக் கிடத்தி, ஒருகையால் அவனது தலையையும், இன்னொரு கையால் காலையும் அழுத்திப் பிடித்தபடி இரண்டு கரங்களால் அவன் வயிற்றை கிழித்து, மேலிரண்டு கரங்களால் நீண்ட நரம்புகளை வெளியே எடுத்துத் தூக்கிப்பிடித்தபடி சங்கு சக்கரதாரியாகக் காட்சி தருகிறார்.

கண்களில் கோப வெறியுடன் கோரைப் பற்களுடன் குகைபோன்று வாயைத் திறந்தபடி, ஆவேசத்துடன் காட்சி தருவதைப் பார்க்கும்போது உள்ளே பயம் சுரக்கிறது. மேலிரண்டு கரங்களில் பிடித்தபடி இருக்கும் நீண்ட நரம்புகள் தனித்துவமாக உள்ளன. இரணியனின் இடது கரத்தில் கேடயத்தைப் பிடித்தபடி இறைவனின் தொடைக்கும், முழங்காலுக்கும் இடையில் அகப்பட்டுக் கொண்டிருந்தாலும், வலது கரம் வெளியே இருப்பதால், நீண்ட வாளைக் கொண்டு, போரிட வந்தவன் இறைவனானாலும், கடைசி வரைப் போராடும் இரணியனின் துணிச்சலையும் இந்தச் சிற்பம் பறைசாற்றுகிறது.

நரசிம்மர், இரணியன் இருவரின் அங்க அசைவுகளும், ஆடை ஆபரணங்களின் அசைவுகளும் துல்லியமாக உள்ளன. இந்த இரணியவதச் சிற்பம், பாண்டியர்களால் சிறிய அளவில் கட்டப்பட்ட திறுக்குறுங்குடி அழகிய நம்பி திருக்கோயிலில் உள்ளது. சோழர்களாலும், நாயக்க மன்னர்களாலும் விரிவுபடுத்தப்பட்டு திருப்பணி செய்யப்பட்ட ஆலயமான இது, 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நெல்லைச் சீமைக்கு அருகில் உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in