

பிரம்மம் சத்தியம் ஜகத் மித்யா - இரண்டல்ல ஒன்று என்ற கொள்கையைக் கொண்ட அத்வைதத்தை ஸ்தாபித்தவர் ஆதிசங்கரர். ‘அகம் பிரம்மாஸ்மி’, ‘தத்வமசி’ போன்ற உபநிடத வாக்கியங்களைக் கொண்டு தத்துவம் ஒன்றே என்றார் ஆதிசங்கரர். இப்படித்தான் அத்வைதம் வேர்கொண்டது.
அத்வைத சித்தாந்தத்தில் பெருமை கொண்ட யக்ஞமூா்த்தி ஊரெல்லாம் சென்று ஜெயித்து வந்தார். அவா் உலகப் பெருமைக்காக ராமாநுஜரிடம் வாதப்போர் புரிய வந்தார். மேலக் கோட்டை தொண்டணூரில் ஆயிரம் சமணர்களை ராமாநுஜர் ஜெயித்தார் என்பதை அறிந்து அவரிடம் வாதப்போர் செய்ய விரும்புவதாக அவரை அழைத்தார். அவர் கேட்ட அவகாசம் 18 நாட்கள்.
அந்த வாதத்தில் தான் தோற்று விட்டால், அத்வைத சித்தாந்தத்தை விட்டு ராமாநுஜதாசன் ஆகிறேன் எனவும் கூறினார்.
ராமாநுஜரோ, இந்த வாதப் போரில் தோற்றால் கிரந்தங்கள் எழுதுவதை விட்டுவிடுவதாக கூறினார். 16-ம் நாள் வரை வாதம் சரிசமமாகச் சென்றது. 17-ம் நாள் யக்ஞமூா்த்தி வெற்றி பெறுவது போலே முடிந்தது. அன்று இரவு ராமாநுஜருக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. ஆழ்வார்கள் முதல் நாதமுனிகள் வரை கட்டிக் காப்பாற்றிய விசிஷ்டாத்வைதம் தன்னால் குறைபடப் போகிறதே என வருந்தினார். அனுதினமும் பூஜிக்கும் காஞ்சி பேரருளாள மூர்த்தியிடம் முறையிட்டு விசிஷ்டாத்வைதம் தோற்கடிக்கப் படாது எனக் கூறி உண்ணாமல் படுத்து உறங்கிவிட்டார்.
வரதன் வரம் கொடுப்பவர் அல்லவா; அவரின் மூர்த்தம் இன்றளவும் ரங்க ராமாநுஜ சன்னிதியில் உள்ளது. மறுநாள் 18-ம் நாள் வாதத்தில் யக்ஞமூர்த்தி ராமாநுஜரைப் பார்த்து, நான் தோற்றேன் என்றார். ஏதும் புரியாத சபையினரைப் பார்த்து இவர் சாதாரண மனிதர் இல்லை! அரங்கராஜனே நடந்து வருவது போல் கண்டேன் என்றும், எம்பெருமானாரைத் தரிசித்தேன் எனவும் கூறி.
தோல்வியை யக்ஞமூர்த்தி ஒப்புக்கொண்டார். அதன்பிறகு ராமாநுஜர் யக்ஞமூர்த்திக்கு, “அருளான பெருமான் எம்பெருமான்” எனப் பெயர் சூட்டிவிடுகிறார். அத்வைதத்தை வென்று விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டினார். வரதன் அருளிய வரங்களைப் பெற்ற ராமானுஜரைப் போல் கச்சி வரதனின் நினைவு ஒரு துளியும் இல்லாமல் என் வாழ்க்கை செல்கிறதே என வருந்தினாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com