

எட்டு வகையான மனிதர்களை பேறுபெற்றோர் என்று இயேசு அழைத்தார். இந்த எட்டு வகை மனிதர்களின் பட்டியலில் இரண்டாவதாக வருவது துயருற்றோர். “துயருற்றோர் பேறுபெற்றோர். ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.”
சிலர் தங்கள் துயரத்தை எதிர்கொள்கிறார்கள். அதனைச் சந்திக்கத் துணிகிறார்கள். அதன் கோர முகத்தை உற்று நோக்க இவர்கள் தயங்குவதில்லை. ஆனால் இது மிக மிகக் கடினமான ஒன்று. வலியும் வேதனையும் மிகுந்த ஒன்று. அதனால் பலர் தங்கள் துயரத்தை எதிர்கொள்ளத் துணியாமல் அதனை மறுக்கிறார்கள். துயர நிகழ்வு தனக்கு நடக்காதது போலவும் அல்லது அது தன்னைப் பெரிதும் பாதிக்காதது போலவும் இவர்கள் நடந்துகொள்கின்றனர். துயரத்தை நேருக்கு நேர் பார்க்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு தமக்கான காரியங்களைப் பார்க்கிறார்கள்.
காலம் கரைகிறது
கடவுள் அனுப்பும் ஆறுதலை, ஆதரவை இவர்கள் உணர்வது இதனால் கடினமாகி விடுகிறது. இதனால் துயரத்தின் கோரப் பிடியிலிருந்து விடுவிக்கப்படாமலேயே இவர்களின் காலம் கரைகிறது.
எனவே, துயருற்றோர் என்று இயேசு சொன்னது தங்கள் துயரத்தை எதிர்கொள்பவர்களைத்தான். 'இந்தத் துயரத்தின் வலியை இறைவனும் புரிந்துகொள்வார். எனவே எனக்கு ஆறுதலும் ஆதரவும் தர அவரும் விரும்புவார்” என்பதை இவர்கள் உணர்ந்துகொள்கிறார்கள். அதனால் தங்கள் துயரத்தினின்று விடுதலை தருமாறு நம்பிக்கையோடு இறைவனை மன்றாடுகிறார்கள். அவர் அனுப்பும் ஆறுதலை உணர்கிறார்கள்.
குணம் பெற்றவள்
பன்னிரு ஆண்டுகளாய் ரத்தப் போக்கினால் வருந்திய பெண்ணொருவர் பைபிளில் வருகிறார். பல மருத்துவர்களைப் பார்த்தும் அவருக்குக் குணம் கிடைக்கவில்லை. இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைத் தேடி வருகிறார். ‘நான் இயேசுவின் ஆடையைத் தொட்டாலே போதும். விரைவில் நலமடைவேன்’ என்று நம்புகிறார். கூட்டத்துக்கிடையே புகுந்து, சிரமப்பட்டு முன்னேறி, இயேசுவின் மேலாடையைத் தொட்டதும், நம்பியவாறே அவர் குணம் பெறுகிறார்.
துயருற்றோருக்குக் கடவுள் தரும் ஆறுதல் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பெண்ணுக்குக் கிடைக்கிறது. இந்த நீண்ட பயணத்தின் முதல் அடி அவர் தன் துன்பத்தை நேர்கொண்டு உணர்ந்ததுதான். அதற்குப் பிறகுதான் அவரது விடுதலையின் தேடல் தொடங்குகிறது. தங்கள் துன்பத்தை மறுப்போருக்கு இப்பயணம் தொடங்குவதே இல்லை.
தங்கள் துயரத்தை எதிர்கொண்டு உணர்வோர் மனத்தடை ஏதுமின்றி அழுகிறார்கள். கிராமங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் தங்களுக்கு முக்கியமான ஒருவரை இழக்கும்போது தடை, தயக்கம் ஏதுமின்றி அழுது புலம்புவதை நாம் காண்கிறோம். அழுகையே இவர்களின் மனத்திலிருந்து துயரத்தை வெளிக்கொணர்ந்து, அதனை ஆற்றல் இழக்கச் செய்துவிடுகிறது.
ஆனால் அழுகைக்கு அனுமதி மறுக்கும் நபர்களின் மனதில் துயரம் நிரந்தரமாய் குடியிருக்கத் தொடங்குகிறது. ‘துயருற்றோர்; பேறுபெற்றோர்” என்ற சொற்றொடர் சில மொழிபெயர்ப்புகளில் ‘அழுவோர; பேறுபெற்றோர்” என்றிருக்கிறது.
துயரப்படுவோருக்கு ஆறுதல் அளிக்க இறைவனே நேரடியாகச் செயலாற்ற வேண்டும் என்கிற அவசியமில்லை. இறைவனது இரக்கத்தைப் பிரதிபலிக்கிற நல்லோர் பலரின் வழியாக இந்த ஆறுதல் நமக்கு வந்து சேரலாம்.
கடந்த ஓராண்டிற்கும் மேலாக கரோனா தொற்று விளைவித்த துயரத்தின் நடுவே, இறைவனது ஆறுதலைத் தந்தது தங்களின் பாதுகாப்பை எண்ணாமல், நோயுற்றோருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள்தாம்.
ஏழு ஆண்டுகள் மட்டுமே இல்லற வாழ்வு வாழ்ந்து பின்னர் கணவனை இழந்து, துயருற்ற அன்னா எனும் பெண்ணைப் பற்றி பைபிள் பேசுகிறது. ஆலயத்திலே வாழ்ந்து, அங்கு செய்த திருப்பணியின் மூலம் தனிமை எனும் துயரத்தைச் சமாளித்த இந்த விதவைப் பெண்ணுக்கு இறைவன் மாபெரும் ஆறுதலை வழங்குகிறார். குழந்தை இயேசுவைக் கண்ணாரக் கண்டு, கைகளில் ஏந்தி, கடவுளைப் புகழ்ந்து எல்லோரிடமும் அந்தத் தெய்வக் குழந்தையைப் பற்றிப் பேசும் பேரானந்தத்தை இறைவன் அந்தப் பெண்ணுக்குத் தந்தார்.
தங்களின் துயரத்துக்குக் காரணம் தாங்கள் செய்த குற்றங்களே, தங்களின் பாவச் செயல்களே என்று உணர்ந்து துயருற்றோரை மன்னித்து, மறுவாழ்வு தருவதன் மூலம் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார். முறையற்ற பாலுறவில் ஈடுபட்டாள் என்று குற்றம் சாட்டி, யூதர்கள் இழுத்து வந்த அபலைப் பெண்மீது கல்லை வீசி அவளைக் கொல்ல நினைத்தோரிடமிருந்து மீட்டார். “நான் உன்னைத் தீர்ப்பிட மாட்டேன். அமைதியாய்ச் சென்று வா” என்று அனுப்பி அவளுக்குப் புதியதொரு வாழ்வின் வாசலைக் காட்டினார்.
துயரங்களிலிருந்து யாருக்கும் விதிவிலக்கு இல்லை. துயரச் சுமைகளின் அளவில் மட்டுமே வேறுபாடு இருக்கிறது. எனவே மானிடர் அனைவருமே ஒரு விதத்தில் துயருற்றோர்தான். ஆறுதல் வரும் என்று நம்பிக்கையோடு, பொறுமையோடு காத்திருப்போர் சிலர். ஆறுதல் வருமென்ற நம்பிக்கை இல்லாததால், துயரம் கோபமாக மாறிவிட அனுமதித்து, தங்களையோ பிறரையோ பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கும் நபர்கள் சிலர்.
தம்மை விட அதிகம் துன்புறுவோருக்கு உதவுவதன் மூலமே தங்களுக்கான ஆறுதலைத் தேடிக்கொள்வோர் சிலர். நாம் எந்த வகையினர்?
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com