ஓஷோ சொன்ன கதை: எது உன்னை இங்கே கொண்டுவந்தது?

ஓஷோ சொன்ன கதை: எது உன்னை இங்கே கொண்டுவந்தது?
Updated on
1 min read

முல்லா நஸ்ரூதின் ஒரு காட்டின் வழியாகப் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது தனது காலடியில் தென்பட்ட ஒரு கபாலத்தைப் பார்த்தார். ஆர்வக்கோளாறு காரணமாக, அந்தக் கபாலத்திடம் குனிந்து, ஐயா உங்களை எது இங்கே கொண்டுவந்தது என்று கேட்டார். அவர் ஆச்சரியப்படும்படியாக கபாலம் பதில் சொன்னது. பேச்சுதான் என்னை இங்கே கொண்டுவந்தது என்றது கபாலம். முல்லாவுக்கு ஆச்சரியம் தாளவில்லை. திரும்ப ஓடிப்போய் அரண்மனைக் காவலர்களிடம் அனுமதி பெற்று, அரசனைச் சந்தித்து, கபாலம் பேசும் அதிசயத்தைப் பகிர்ந்தார்.

அரசனால் முல்லா சொல்வதை நம்பவும் முடியவில்லை; ஆனால் ஆர்வத்தையும் அடக்கிக்கொள்ள முடியவில்லை. அரச சபையினர் உடன்வர, முல்லாவை அழைத்துக்கொண்டு காட்டுக்குப் பயணமானான். முல்லா நஸ்ரூதின், கபாலத்திடம் சென்று, “ஐயா, உங்களை எது இங்கே அழைத்து வந்தது?” என்று கேட்டார். அந்த நேரம் பார்த்து கபாலம் எந்தப் பதிலையும் அளிக்காமல் பேசாமல் இருந்தது. முல்லா, திரும்பத் திரும்பக் கேட்டும் கபாலத்திடமிருந்து பதில் இல்லை.

முல்லாவின் விஷமச்செயலால் தனது ஒரு நாள் அலுவலே பாதிக்கப்பட்டுவிட்டது என்று கோபமான அரசன், முல்லா நஸ்ரூதினின் தலையைக் கொய்வதற்கு உத்தரவிட்டான். எறும்புகள் அரித்து உலர்ந்து ஓடாகிவிட்ட முல்லா நஸ்ரூதினின் கபாலத்தைப் பார்த்து முதல் கபாலம் அதே கேள்வியைத் திரும்பக் கேட்டது.

“ஐயா, உங்களை எது இங்கே அழைத்து வந்தது?”

நஸ்ரூதினின் கபாலம் பரிதாபமாகப் பதில் சொன்னது. “பேச்சுதான் என்னை இங்கே அழைத்து வந்தது?”

ஆமாம். இன்றுள்ள சூழ்நிலைக்கு நம்மை அழைத்து வந்தது பேச்சுதான். ஓயாமல் அரற்றிக் கொண்டிருக்கும் மனம், எந்த சந்தோஷத்தையும் அனுமதிப்பதில்லை. அமைதியான மனம்தான் தனக்குள்ளே பார்க்க முடியும். அமைதியான மனம்தான் அமைதிக்கு செவிகொடுக்கவும் முடியும். அங்கே மகிழ்ச்சி கொப்பளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், மனத்தின் இரைச்சலால் கேட்க முடியாத அளவு சன்னமானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in