

திருவரங்கத்தை ஆண்டுகொண்டிருந்த கிருமி கண்ட சோழன், ராமாநுஜருக்குத் தண்டனை வழங்குவதற்காக அவர்களை அழைத்துவர, காவலர்களை அனுப்பி னான். ஆனால், பெரிய நம்பிகளும் கூரத்தாழ்வாரும் தமது வெள்ளை உடைகளை ராமாநுஜரை அணியச் செய்து, ராமாநுஜரின் காஷாயத்தை அவர்கள் அணிந்து சோழனின் அரண்மனைக் காவலர்களுடன் சென்றார்கள். சோழமன்னன், பெரிய நம்பியுடன் வந்தவா்களின் கண்களைப் பிடுங்கும்படி ஆணையிட்டான். பெரிய நம்பிகளின் கண்களைப் பிடுங்கியவுடன் கூரத்தாழ்வான் தானே அவரின் கண்களைப் பிடுங்கி எறிந்து விடுகிறார். கூரத்தாழ்வானின் வெள்ளையுடுப்பை அணிந்துகொண்ட ராமாநுஜர் கர்நாடக தேசத்தை நோக்கிப் பயணித்தார்.
இப்படி பெரிய நம்பிகளுக்கும் கூரத்தாழ்வானுக்கும் கொடுமையான தண்டனையை அளித்த சோழ மன்னன், தன் கழுத்தில் கிருமி சூழ இறந்துவிட்டான். அரசர் இறந்ததும் அவன் மகன் அரசாள வந்தான். அவனோ வைணவப்பிரியனாக ஆனான். அச்சமயம் அவனே ராமாநுஜரைத் தேடினான். திருவரங்கத்தில் நிகழ்வது என்னவென்று ராமாநுஜர் தனது சிஷ்யன் மாருதியாண்டானை அனுப்பினார்.
திரும்பிவந்த மாருதி யாண்டான், பெரிய நம்பிகளுக்கு நேர்ந்ததையும் கூரத்தாழ்வான் தமது கண்களைப் பறித்ததையும் சொல்லி சோழ மன்னனுக்கு ஏற்பட்ட மரணத்தையும் தெரியப்படுத்துகிறார். முதலில் அவன் போனான் என்று மாருதியாண்டான் சோழ மன்னனின் மரணம் பற்றி கூறியது ராமாநுஜருக்குத் துயரத்திலும் ஆறுதலைக் கொடுக்கும் செய்தியாக இருந்தது.
இப்படி ஆசாரியன் திருவுள்ளம் மகிழுமாறு மாருதியாண்டானைப் போலே நான் எந்தவொரு நல்ல வார்த்தையையும் ராமாநுஜரிடத்தில் கூறவில்லையே எனத் தனது வருத்தத்தைத் தெரிவித்தாள் திருக்கோளுா் பெண் பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு :
uyirullavaraiusha@gmail.com