சித்திரப் பேச்சு: ஆதிசேஷனின் அவதாரம் பதஞ்சலி முனிவர்

சித்திரப் பேச்சு: ஆதிசேஷனின் அவதாரம் பதஞ்சலி முனிவர்
Updated on
1 min read

பாற்கடலில் ஆதிசேஷன் திடீரென தனது உடலின் மீது இதுவரை இல்லாத ஏதோ ஒரு பாரம் அழுத்த, தான் உள்ளே மூழ்குவதைப் போன்று உணர்ந்து திடுக்கிட்டார். உடனே திருமாலிடம், "ஐயனே இது என்ன சோதனை, வழக்கமாக உம்மைத் தாங்குகிறவன் தானே, இப்போது மட்டும் தாங்கள் மிகவும் பாரமாக இருப்பதன் காரணம் என்ன புரியவில்லையே?" என வினவினார். அப்போது ஸ்ரீமன் நாராயணன் மகிழ்ச்சியுடன், "ஆதிசேஷனே, நான் எம்பெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு களித்த ஆனந்தத்தை மறுபடியும் எண்ணி ஆனந்தப்பட்டதன் விளைவால் ஏற்பட்ட மாயம் போலும்" என்றார்.

அந்த ஆனந்தத் தாண்டவத்தை கண்டுகளிக்க வேண்டுமென்று ஆதிசேஷன் விரும்பினார். திருமாலிடம் விடைபெற்ற ஆதிசேஷன், கயிலை மலையில் தவமிருந்தார். எம்பெருமான் தோன்றி, "ஆதிசேஷனே... பூலோகத்தில் தில்லை வனத்தில் யாம் காட்சி தருவோம். நீ ஐந்து முகங்களுடன், அத்திரி மகரிஷி சந்தியாவந்தனம் செய்யும்போது, அவர் 'அஞ்சலி' என்று சொல்லி ஆர்க்கியம் விடும் சமயத்தில், அவர் கைகளில் விழுந்து 'பதஞ்சலி' என்று பெயரைப் பெற்று, அவர் மகனாக வளர்ந்து வருவாயாக. மேலும் எனது ஆனந்தத் தாண்டவத்தை காண வியாக்ரபாதரும் தவமிருப்பதால் அவரோடு சேர்ந்து நீயும் தவம் இயற்றுவாயாக!" என்றார். வியாழக்கிழமையோடு கூடிய தைப்பூச நன்னாளில் தமது ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருளுவோம் என்றும் கூறினார்.

இப்படியாக நடராஜரின் திருவடி அருகே பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும், எப்போதும் இருக்கும் பேறுபெற்றவர்கள் ஆனார்கள். இந்த பதஞ்சலி முனிவர் ஒரே நேரத்தில் ஆயிரம் சீடர்களுக்கு, ஆயிரம் தலைகளுடன் திரை மறைவில் இருந்து வியாகரண மகா பாஷ்யத்தை கூறினார் என்று புராணங்கள் கூறுகின்றன.

இந்த பதஞ்சலி சிற்பத்தில் இடுப்புவரை மனித உடலும், எஞ்சிய பகுதி உருண்டு திரண்ட நாகத்தின் உடலாகவும் தலைக்கு மேல் ஐந்து நாகங்கள் குடைபோல் இருக்க அஞ்சலி வர ஹஸ்தராக, நல்ல தேகக்கட்டுடன், கம்பீரமாகக் காட்சிதருகிறார். தேவர்களைப் போன்று தலையில் அழகிய கிரீடமும், கழுத்திலும் மார்பிலும் தோளிலும், அணிகலன்களும் ஆபரணங்களும் சிறப்பாக உள்ளன. இவர் ஆதிசேஷன் அம்சம் என்பதால் வாய்ப்பகுதியில் இரண்டு பக்கமும் கோரைப் பற்களையும் மறக்காமல் காட்டுகிறார். பாம்புகள் ஓரிடத்தில் தனது உடலை சுருட்டிக்கொண்டு தலைப்பகுதி மட்டும் மேலே தெரியும்படி காணப்படுவது போல் இச்சிலையையும் அமைத்துள்ளார் சிற்பி. இவர் பத்தாம் நூற்றாண்டில் பராந்தக சோழன் கட்டிய தில்லை நடராஜர் கோயிலில் கீழ் கோபுரத்தின் வலது புறத்தில் காட்சிதருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in