

திருநெல்வேலி அருகே உள்ள மானூரைச் சேர்ந்தவர் சிவலோகநாதர். ஒருமுறை, திருநெல்வேலியில் நடைபெற்ற நெல்லையப்பர் ஆனித் தேரோட்டத்தைக் காண பண்டாரக் கோலத்தில் வந்திருந்தார். தேர் புறப்பட ஆயத்தமானபோது சிவலோகநாதரும் வடத்தைப் பிடிக்க முன்வந்தார். ஆனால், இளைஞர்கள் சிலர் அவரது தோற்றத்தைக் கேலிசெய்து அங்கிருந்து விரட்டிவிட்டனர்.
பின்னர், அனைவரும் வடம்பிடித்துத் தேரை இழுத்தனர். ஆனால், அணுவளவும் தேர் நகரவில்லை. முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கவில்லை; மேடுபள்ளங்களும் இல்லை; வேறு எந்தத் தடையும் இல்லை. ஆனாலும் தேர் நகராமலிருப்பதற்கான காரணம் புரியாமல் அனைவரும் குழம்பினர்.
பண்டாரக் கோலத்திலிருந்த ஒருவரை இளைஞர்கள் சிலர் விரட்டியடித்ததும், வந்திருந்தவர் சித்தர் என்றும், சித்தர் மனம் குளிர்ந்தால்தான் தேர் நகர்ந்து சென்று பின்னர் நிலைகொள்ளும் என்றும் கோயில் நிர்வாகத்துக்கு அருள்வாக்கு மூலம் உணர்த்தப்பட்டதாம். எனவே, சித்தர் தங்கியிருந்த கீழப்பாவூருக்கு வந்து, அவரிடம் ஆலய நிர்வாகம் மன்னிப்பு கோரியதாகக் கூறப்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டு சிவலோகநாதர், திருநெல்வேலிக்கு வந்து, நின்ற தேரின் வடத்தைப் பிடித்து இழுப்பது போலப் பாவனை செய்தார். உடனே, நெல்லையப்பர் தேர் நகரத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.
சிவலோகப் பண்டாரநாதர் என்று அழைக்கப்பட்ட அவர், உகதானம் பெற்று கஞ்சி காய்ச்சி, தானும் உண்டு, தன்னைத் தேடிவந்தவர்களுக்கும் வழங்கிவந்தார். நோய் தீர்க்கும் அருமருந்தான இந்தக் கஞ்சியை, பலர் விரும்பி அருந்தி வந்தனர். சித்ரா பௌர்ணமி நாளில் அவர் ஜீவசமாதியானார். சிவலோகப் பண்டாரநாதர் ஜீவசமாதி அடைந்த குருக்கள் மடத்தில் அவருக்கு கற்கோயில் அமைக்கப்பட்டுள்ளது.