

காட்டுமன்னார்கோவில் எனப்படும் வீரநாராயணபுரத்தில் பிறந்தவர் நாதமுனி சுவாமிகள். வைணவ சித்தாந்தத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். சைவத்திருமுறைகளுக்கு நம்பியாண்டார் நம்பி எப்படியோ அப்படி. திருக்குடந்தை ஆராவமுதப் பெருமாளை சேவிக்க வந்தார் அச்சமயம் அங்கு சேவித்த அரையர்கள்,
“ஆராவமுதே ..! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை
ஏரார் கோலம் திகழக்கிடந்தாய் ! கண்டேன் எம்மானே”!
என பாசுரம் பாடுகிறார்கள். அதனைக் கேட்ட நாதமுனிகள் பரவசத்தோடு விசாரித்தார். இந்தப் பாசுரங்கள் ஆயிரத்தில் பத்து என கூறுகிறீர்களே எனக்கு ஆயிரம் பாசுரத்தையும் பாடியருளுங்கள் என வேண்டுகிறார். இதையடுத்து மொத்தப் பாசுரங்களையும் பெறுவதற்காக அலைந்து நம்மாழ்வாரிடம் போய் நான்காயிரம் பாடல்களையும் பெற்றவர். அவற்றைத் தொகுத்த நாதமுனிகள் பல ஊர்கள் சென்று நான்காயிரத்தையும் பரப்பினார்.
நாதமுனி சுவாமிகள் அடிக்கடி பகவான் வயப்பட்டு நிஷ்டையில் ஆழ்வார். நிஷ்டை கலைந்ததும் அவரின் எதிரே இருப்பவர்களை இறைவனின் அம்சமாகவே காணுவார்.
ஒருமுறை அப்படிப்பட்ட பகவத்யானத்தில் அவர் இருந்து நாதமுனி சுவாமிகள் எழுந்துவர, வீட்டில் இருந்தவர்கள் வீட்டுக்கு ஆண்பிள்ளை ஒருவரும் பெண்கள் பலருமான வந்துபோனதைச் சொன்னார்கள். கண்ணனும் கோபிகைகளும் வந்தார்களோ என்று தேடி ஓடிய நாதமுனி சுவாமிகள் கங்கை கொண்ட சோழபுரத்துக்கே போய்விட்டார். அவரைத் தொடர்ந்து வந்த மாணவர்கள், சோழ அரசனும் அவனுடைய பத்தினிகளும் வந்து போனார்கள் என்பதைத் தெரிவித்து திரும்ப அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும்படி கடவுளை அநவரதமும் தியானித்திருந்தவர் நாதமுனிகள்.
இன்னொருமுறை இரண்டு வில்லாளிகளும் ஒரு பெண்ணும், ஒரு குரங்கும் வந்து சென்றதாக அருகில் இருப்பவர்கள் கூறினர். அடடா! ராமா! லட்சுமணா! சீதா! அனுமனே! என்று சொல்லி நெடுந்தூரம் ஓடி ஓடித் தேடினார். ஆனால், அங்கே வந்தவர்களோ ராஜாவும் மந்திரி பிரதானிகளும் ராணியும் வேட்டையில் பிடித்த குரங்குமே.
வீடுதேடி வந்த ராமனையும் சீதையையும் லட்சும்மணனையும் அனுமனையும் பார்த்து தரிசிக்காமல் விட்டுவிட்டேனே என்று வருந்திப் பெருமூச்செறிந்தவர், அப்படியே விழுந்து பிராணனை விட்டார். விழுந்தவர் பிராணன் சர்வேஸ்வரனாகிய பகவானை அடைந்தது.
இப்படி நாதமுனியைப் போல், கடவுளின் உணர்விலேயே திளைத்து அவனடி அடையும் பேற்றை நான் பெறவில்லையே என்று தன்னைத் தானே நொந்துகொள்கிறாள் நம் திருக்கோளுர் பெண்பிள்ளை.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : uyirullavaraiusha@gmail.com