

‘கலியுகத்தில் இறைவனை அடைவதற்கு எளிய வழி, பக்தி யோகமும், கர்ம யோகமும் தான். கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே முக்திக்கு வழி'. இதுபோன்று பல்வேறு அமுத மொழிகளைத் தம்மை நாடிவந்த பக்தர்களிடையே உபதேசித்து அவர்களை நல்வழிப்படுத்திய மகான் ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களபுரி என்னும் ஊரில் வெங்கோபா சாஸ்திரிகள்-சக்குபாய் தம்பதிகளுக்கு மகவாகத் தோன்றினார் ஸ்ரீ சுவாமிகள் என்று நம்பப்படுகிறது. இவரது இயற்பெயர் சுப்ரமண்யம்.
பேரொளியின் தரிசனம்
சிறுவயது முதலே ஆன்மிக நாட்டமும் இறை நம்பிக்கை உடையவராகவும் விளங்கினார். ஒருநாள் தியானத்தின்போது பேரொளியின் தரிசனம் கிட்டியது. அவ்வொளியின் வழிகாட்டலின் பேரில் தலயாத்திரை மேற்கொண்டவர், பண்டரிபுரத்துக்குச் சென்று அங்கேயே வசிக்கலானார்.
ஒருமுறை பண்டரிபுரம் வந்திருந்த காஷ்மீர் ஜோதிர்லிங்க பீடாதிபதி சிவரத்தின கிரி சுவாமிகள், சுப்ரமண்யத்தை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவரைத் தனது சீடனாக ஏற்றுக்கொண்டு வேதாந்தக் கருத்துக்களைக் கற்றுத்தந்து தீட்சை அளித்து ‘ஞானானந்தர்’ என்ற நாமம் சூட்டி மடாதிபதியாக நியமித்தார். ஞானானந்தர் இமயமலைக்குச் சென்று பல முனிவர்களையும் ரிஷிகளையும் சந்தித்தார். அற்புத தவநிலை கைவரப்பெற்றார்.
மூப்பையும் பிணியையும் அகற்றி நீண்ட காலம் வாழவல்ல காயகல்ப மூலிகையை அம்முனிவர்களின் ஆசியோடு பெற்றுக்கொண்டார். இலங்கை உட்பட பல இடங்களுக்கும் சென்று இறுதியில் தமிழகம் வந்தடைந்தார்.
மன இருளை நீக்கினார்
தமிழகத்தில் சேலம், கொல்லிமலை, போளூரில் உள்ள சம்பத் கிரிமலை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தங்கித் தவம் மேற்கொண்டார். பின் திருக்கோவிலூர் – திருவண்ணாமலை சாலையில் திருக்கோவிலூருக்கு அருகே அமைந்திருந்த தபோவனத்தைத் தமது வாழ்விடமாகக் கொண்டார்.
எப்பொழுதும் சிரித்த முகம். எளிமையான காவி உடை. கருணை பொங்கும் கண்கள். அனைவரையும் அரவணைக்கும் தாய் உள்ளம் என சுவாமிகள் அன்பின் மறுஉருவாக இருந்தார்.
நாடி வருவோரின் மன இருளை நீக்கி, அவர்களின் உள்ளத்தில் ஆன்ம ஜோதியை ஏற்றிவைத்தார். வந்திருப்பவர்களின் பக்குவ நிலைக்கேற்ப அவர்களுக்கு நல்வழி காட்டினார்.
சுவாமிகளிடம் பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்தும் ஆற்றல் இருந்தது. ஆனால் அவற்றை அவர் அதிகம் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அவை ஆன்மிக முன்னேற்றத்தின் படிநிலைகளில் ஒன்று என்பதே அவரது கருத்தாகும். ஒரே வேளையில் பல இடங்களில் காட்சி அளித்திருக்கிறார் என்றும் அவரது வரலாறு தெரிவிக்கிறது.
முறம் சோறு, படிக்குழம்பு
ஞானானந்த சுவாமிகளின் தபோவனம், ஞான வெளிச்சம் பரப்பிய ஆன்மிகத் திருத்தலமாக விளங்கியது. அனைவருக்கும் முறம் சோறு, படிக் குழம்பு என விருந்து செய்த மகான் அவர்.
மகாராஷ்டிராவிலுள்ள பண்டரிபுரம் கோயிலைப் போன்றே வந்தவாசி அருகே தென்னாங்கூர் பாண்டுரங்கன் கோயில் உள்ளது. இங்கு ரகுமாயீ சமேத பாண்டுரங்கனைத் தரிசிக்கலாம்.
கோயிலின் பின்பக்கம் ஞானானந்த சுவாமிகளின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. தல விருட்சம் தமால மரம். மதுராவிலேயே அதிகம் காணக்கிடைக்கும் விசேஷமான மரம் இது.
பல்வேறு உண்மைகளைப் பக்தர்களுக்கு உபதேசித்து அவர்களை ஆன்மவழிக்குத் திருப்பிய மகான் ஞானானந்த கிரி சுவாமிகள் 1974-ம் ஆண்டு ஜனவரி 9 அன்று, மகா சமாதி அடைந்தார்.
சுவாமிகள் திருக்கோவிலூர் அருகே உள்ள தபோவனத்தில் அவரது சமாதி ஆலயம் அமைந்துள்ளது. இன்றளவும் ஆன்ம ஞானம் தேடி வருவோர்க்கு அமுதூட்டும் அருள் ஆலயமாக விளங்கிவருகிறது.
கட்டுரையாளர் தொடர்புக்கு: mahadevan101@gmail.com