

மதுரையைச் சேர்ந்த குறுநில மன்னர்களில் ஒருவரான ராணி மல்லி என்பவருக்கு வில்லி, கண்டன் என்ற இரண்டு புதல்வர்கள். கண்டன் வேட்டையாடச் சென்று திரும்பாத நிலையில், வில்லி அவனைத் தேடிச் சென்றான். களைப்பு மிகுதியால் ஒரு மரத்தடியில் அவன் உறங்க, கனவில் வந்த கடவுள் கண்டனை புலி மாய்த்த விவரத்தைச் சொல்கிறார். அத்துடன் அந்தக் காட்டைத் திருத்தி புதிய ஊரை நிர்மாணிக்கும்படி கட்டளை இட்டாராம். அதன்படி உருவாக்கப்பட்ட ஊர்தான் வில்லியின் பெயரால் திருவில்லிபுத்தூர் என்று அழைக்கப்பட்டது.
திருமகளே ஆண்டாளாக அவதரித்ததால் ‘ஸ்ரீ' என்ற அடைமொழியுடன் ‘ஸ்ரீவில்லி புத்தூர்' என்றானது. பெரியாழ்வார், பாண்டிய மன்னன் வல்லப தேவனின் அவையில் நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களில் வென்று அதனால் கிடைத்த பொன்னும் பொருளும் கொண்டு பதினொரு அடுக்குகள் கொண்ட, நூற்று தொன்னூற்று இரண்டு அடிகள் கொண்ட ராஜகோபுரத்தைக் கட்டினார் என்று செவிவழிச் செய்தி நிலவுகிறது.
முற்காலச் சோழர்களால் கட்டப்பட்டு, திருமலை நாயக்கர் காலத்தில் விரிவு படுத்தப்பட்ட கோயில் இது. ஆடிப்பூரம் அன்று உலாவரும் இக்கோயிலின் தேர் பிரம்மாண்டமானது. வேறு எங்கும் இல்லாதபடி கருவறையின் உள்ளேயே ஸ்ரீ ஆண்டாள் சமேத ரங்கமன்னாருடன், பெரிய திருவடி என்ற கருடாழ்வார் உடன் உறையும் ஆலயம் இதுவாகும்.
பெரியாழ்வார் பாடிய ‘திருப் பல்லாண்டு', ஆண்டாள் நாச்சியார் பாடிய ‘திருப்பாவை', ‘நாச்சியார் திருமொழி' போன்ற இலக்கியங்கள் பிறந்த ஒப்பற்ற திருத்தலம் எனப் பல பெருமைகளைக் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தில் உள்ள கொடி மரம் அருகேதான் இந்த வீணை வாசிக்கும் பெண் சிற்பம் உள்ளது. கையில் உள்ள வீணையை இசைத்தபடி, அந்த இசையில் லயித்து, தன்னை மறந்த நிலையில் முகம் மந்தகாசத்தடன் விளங்குகிறது. இசைக்கேற்ப நடனமாட காலைத் தூக்கி வைக்கும் ‘பாவ'மும், அதற்கேற்ப தலை ஒருபுறம் சாய்ந்த நிலையில் இருப்பதும், பரதக் கலைக்கு ஏற்ற உடலமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சிறுத்த இடையும், எல்லாவிதமான வளைவு களும், கொண்ட உடலமைப்பை உடைய அமரத்துவம் வாய்ந்த சிற்பமாகும்.
மார்பில் அணிந்துள்ள அணி கலன்களும், காதணிகளும், இடையில் உள்ள ஆடையும் வில்லிபுத்தூர் கோயிலில் உள்ள சிற்பங்களுக்கே உரிய தனிச் சிறப்பாக உள்ளன. தலையலங்காரங்கள், இடையில் உள்ள ஆடை ஆபரணங்கள் மட்டும் அல்லாது கைவிரல்கள், கால் விரல்களில் உள்ள நகங்கள்கூடச் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ஊர் சிற்பங்களைப் பார்த்துதான் நமது கிராமியக் கலையான தெருக்கூத்து கலைஞர்கள் தலைக் கிரீடத்தை சுற்றிப் பின்புறம் பிரபை போன்ற அமைப்பை அமைத்தார்கள் போலும்.
சிற்பக் கலைக்கு பெயர்பெற்ற பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சிற்பங்களில் நடன சிற்பங்கள், துவாரபாலகர் சிற்பங்கள் தவிர பெரும்பாலான சிற்பங்கள் ஒளிப்படங்களுக்கு நிற்பதுபோல் இருக்கும். ஆனால் நாயக்கர் காலத்தில்தான் சிலைகளில் தலை முதல் பாதம் வரை இயக்கம் என்று சொல்லக்கூடிய சிறுசிறு அசைவுகளையும் துல்லியமாக வடித்து சிற்பக் கலைக்கு பெருமை சேர்த்துள்ளனர் அமரச் சிற்பிகள்.