

மார்கழி மாதத்தின் சிறப்பை மனித குலத்தவர் மட்டும் போற்றி பாடவில்லை. ஆயர் குலத்தில் அவதரித்து உலகை ரட்சித்த கண்ணனே பகவத் கீதையில் தனது சிறப்பைப் பற்றி பார்த்தனிடம் சொல்லும்போது முப்பத்தைந்தாவது சுலோகத்தில் ‘மாதங்களில் தான் மார்கழி' (மாஸாநாம் மார்க சீர்ஷோஹம்) என்று குறிப்பிடுகிறார்.
மார்கழி என்றால் நம் நினைவுக்கு வருவது திருப்பாவையும் திருவெம்பாவையும். ‘உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்' என்று முடியும் அதன் இரண்டாவது பாசுரத்திலிருந்து, வாழும் வாழ்வில், உய்யும்வழியைப் பெற்றிட ஆண்டாளும் அவர்தம் தோழியரும் நோன்பு மேற்கொண்டதாக பாவித்து எழுதப்பட்டவை என்பது புரிகிறது.
நோன்பு நோற்பதென்பது எளிதன்று. அதற்குப் பல தியாகங்கள் செய்ய வேண்டும். விரதம் மேற்கொண்டோர் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்டாள் அருமையாக விவரித்துக் கூறியுள்ளார்.
“நெய்யுண்ணோம்: பாலுண்ணோம்: நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம்: மலரிட்டு நாம் முடியோம்: செய்யாதன செய்யோம்”
என்பதெல்லாம் நோன்பு நோற்போர் கடைப்பிடிக்க வேண்டிய முறை என்று சொல்கிறார்.
திருவெம்பாவையோ சைவக் குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகப் பெருமான் தன்னை ஒரு பெண்ணாக பாவித்துக்கொண்டு, மற்ற பெண்களுடன் மார்கழி மாதக் காலை வேளையில் சிவ வழிபாடு செய்வதுபோல் எண்ணி புனையப்பட்ட பாடல்கள்.
“போற்றியாம் உய்ய ஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்"
என்று தங்களை ஆட்கொண்டு, மார்கழி நீராட அருள்புரிந்த சிவனின் பொற் பாதங்களுக்கு வணக்கம் என்று சொல்லும் இந்த வரியிலிருந்து மார்கழியில் நீராடி இறைவனைத் தொழுவதன் மகத்துவம் புரிகிறது.
பாதையை மறைக்கும் அளவு மூடுபனி இருந்தாலும் பக்தி மணம் பரப்பும் மாதமிது. நடுக்கும் குளிரிருந்தாலும் நங்கையர்கள் கோலமிட்டு தங்கள் கைத்திறனையும் கலைநயத்தையும் காண்பிக்கும் மாதமிது. இலக்கணச் சுத்தமாய், இலக்கிய நயத்துடன் அருளிச்செய்த தமிழ் பாடல்களை சிறுவர்களை பாடப் பயிற்றுவித்து தமிழ் வளர்க்கும் மாதமிது.
இன்றும் பல ஊர்களில் இந்தப் பாரம்பரியம் தொய்வின்றித் தொடர்ந்துவருகிறது. பெருந்தொற்று காலத்திலும் மூடுபனி வந்துவிட்டது. வண்ணக் கோலங்கள் வீட்டு வாசல்களில் இடப்படட்டும். நாள்தோறும் ஒரு திருப்பாவையைப் பாடிப் பரவசமடைவோம். மகத்தான மார்கழியின் வரவை மனதார வரவேற்போம்.