

மகாபாரதத்தில் கௌரவர்களின் சபையில் தன் சகோதரனின் மனைவி என்றும் நினையாமல் மானபங்கப்படுத்த துகில் உரிக்கப்பட்டபோது திரௌபதி கதறினாள். நற்சான்றோர்கள் நிறைந்த சபையோரே என்று முறையிடுகிறாள்.
தியாகமே உருவான பீஷ்மா், வில்வித்தையில் சிறந்த ஆசான் துரோணா், சிறந்த நீதிமான் விதுரா், மாமனார் இடத்திலிருக்கும் திருதராட்டினன், மதி நிறைந்த பெரியோர்களிடம் நீதி வழங்குங்கள் என கேட்டு அழும் நேரத்தில் பகடை விளையாட்டில் எல்லா செல்வமும், நாடு நகரமும் இழந்து, சொந்தங்களையும் இழந்து கைகட்டி நிற்கும் பஞ்ச பாண்டவா்களையும் நோக்கி நீதி கேட்கிறாள். தருமரிடம் தன்னை இழந்து என்னை இழந்தீரா, என்னை இழந்து தன்னை இழந்தீரா எனக் கேட்கிறாள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்னும் புனித வார்த்தைகளுக்கு எவா் உதவியும் இல்லாமல் போராடுகிறாள். புடவைத் தலைப்பை பிடித்து இழுக்கச்சொல்லி துரியோதனன் துச்சாதனனுக்கு ஆணையிடுகிறான். சகோதரனின் ஆணையைச் சிரமேற்கொண்டு அண்ணியார் என்றும் பாராமல் எந்த நியாயத்தையும் தன் சிந்தனைக்கு கொண்டுவராமல் திரௌபதியின் புடவைத் தலைப்பை பிடித்து இழுத்தான் துச்சாதனன். ஒரு பெண், தன் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ளப் புடவையை விட்டுவிடாமல் போராடுகிறாள். தன்னால் ஒரு ஆணின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாத நிலையில், உலகத்தையே காத்து ரட்சிக்கும், பரமாத்மாவின் நினைவுவந்தவளாய் கோவிந்தா! கோவிந்தா! என்னைக் காப்பாற்றுவாயாக என்று தனது இரண்டு கைகளையும் உயரே தூக்கிக் கைகூப்பி இறைவனை வணங்கி அவனிடம் சரணடைந்தாள்.
இன்றளவும் திரௌபதியின் துகிலுரியும் நிகழ்ச்சி சொற்பொழிவிலும், நாடகத்திலும் வரும்போது அதை பார்த்தும் கேட்டும் கொண்டிருக்கும் பெண்களில் பல பேருக்கு மருள் வருவது உண்மை. நம் வாழ்வு நம் வசம் இல்லை என்று எந்த நிபந்தனையும் இல்லாமல் இறைவனே அனைத்துமென்று உணர்ந்து சரணடையவே இரு கையையும் விட்டாள் திரௌபதி.
அப்படிப்பட்ட திரௌபதியைப் போல் இறைவனிடம் நான் நம்பிக்கை வைக்கவில்லையே சுவாமி என நம் திருக்கோளுா் பெண்பிள்ளை வருந்துகிறாள்.
(ரகசியங்கள் தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு: uyirullavaraiusha@gmail.com
ஆதாரம்: வைணவச் செல்வம், பேராசிரியர் ந. சுப்புரெட்டியார், தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியீடு