

“ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள்” என்று இயேசு இக்கதையைத் தொடங்குகிறார். பரவலாக அறியப்பட்ட ஊதாரி மகன் கதையும் இப்படித்தான் தொடங்குகிறது. ஆனால், இது வேறொரு வேளையில் அவர் சொன்ன கதை.
தந்தையின் திராட்சைத் தோட்டத்தில் வேலை இருந்தது. எனவே ஒருநாள் மூத்த மகனிடம் அவர், “மகனே, இன்று தோட்டத்துக்குச் சென்று வேலை செய்” என்றார். அவன் “நான் போக விரும்பவில்லை” என்றான். ஆனால் பிறகு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு தோட்டத்துக்குப் போய் வேலைசெய்தான்.
இன்னொரு நாள் இளைய மகனிடம், “இன்று தோட்டத்துக்குச் சென்று வேலை செய்” என்றார். “நான் போகிறேன்” என்று உடனே சொன்ன அவன், போகவில்லை.
கதையை இப்படி முடித்துவிட்டு இயேசு கூட்டத்தினரைப் பார்த்து, ”இந்த இரண்டு மகன்களில் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் யார்?” என்று கேட்டார். அவர்கள் “மூத்த மகனே” என்று சரியாக பதில் சொன்னார்கள்.
“எனக்குப் போக விருப்பமில்லை” என்ற மூத்த மகன், பின்பு தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, தந்தை சொன்னபடி தோட்டத்துக்குச் சென்று வேலை செய்ததற்கு என்ன காரணமாக இருக்கலாம்?
யோசிக்காமல் மனதில் தோன்றி யதை உடனே சொல்லி விடுவோர் பலர். ஆனால், இவர்களில் சிலர் அதன் பிறகு தாங்கள் சொன்னது சரிதானா என்று யோசிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இப்படி பேச்சுக்குப் பின் வரும் சிந்தனையின்போது தாங்கள் பேசியது தவறு என்று புரிந்தால், வருந்தி, மன்னிப்பு வேண்டி, எது சரியோ அதைச் செய்பவர்கள். தங்கள் செயல்களைப் பற்றிய நிதானமான சிந்தனையே இவர்களைப் பாதுகாக்கிறது.
தாகூரின் கோபம்
இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஒரே இந்தியக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர். அவர் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கென்றே ஒரு வேலைக்காரர் இருந்தார். இரவில் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்திவிட்டு, கதவுகளை அடைப்பது அவர்தான். கவிஞர் காலையில் குளிக்கவும், மற்ற தேவைகளுக்கும் தண்ணீர் இறைத்துவைப்பது அவர்தான். காலை உணவு சமைத்து பரிமாறுவதும் அவர்தான். மறுநாள் கவிஞர் அணிய வேண்டிய ஆடைகளைத் துவைத்து, எடுத்துவைப்பதும் அவர்தான்.
ஓரிரவு கவிஞரிடம் ஏதும் சொல்லாமல் அவர் எங்கோ போய்விட்டார். மறுநாள் காலை கவிஞர் குளிக்கத் தண்ணீர் இல்லை. காலை உணவு இல்லை. அணிந்து கொள்ள ஆடைகள் தயாராக இல்லை.
கடுங்கோபம் கொண்ட கவிஞர் காத்திருந்தார். அந்த வேலைக்காரர் மதியத்துக்குப் பிறகு வந்து, வழக்கம்போல் அவரைப் பணிந்து வணங்கி நின்றார். கோபத்தின் உச்சியில் இருந்த கவிஞர், அவரைக் கடுமையாகத் திட்டித் தீர்த்தார். “நேற்று இரவிலிருந்து எவ்வளவு சிரமப்பட வைத்துவிட்டாய். இனி என் முகத்தில் விழிக்காதே!” என்று கவிஞர் கத்தவும், நிமிர்ந்து பார்த்த அந்த வேலைக்காரர் கண்களில் நீர் மல்க, “இதுவரை இப்படி என்றைக்காவது நடந்திருக்கிறதா? நேற்றிரவு என் மகளுக்கு உடல் நலமில்லை என்ற செய்தி வந்தபோது, நீங்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தீர்கள். உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பாமல், காலையில் நீங்கள் எழும் முன் வந்துவிடலாம் என்றுதான் வீட்டுக்குச் சென்றேன். இன்று காலை என் மகள் இறந்துவிட்டாள்” என்றார்.
‘யோசிக்காமல் என்னவெல்லாம் பேசிவிட்டேன். ஒரு மிகச் சிறந்த பணியாளரை எப்படியெல்லாம் ஏசிவிட்டேன்’ என்றுணர்ந்த கவிஞர் தாகூர், மிகுந்த மன வேதனையுடன் மன்னிப்பு வேண்டினார்.
வெறும் வாய்ச்சொல் வீரம்
சிந்திக்காமல் ‘போக விருப்பம் இல்லை” என்று சொன்ன மூத்த மகன், பிறகு சிந்தித்திருக்க வேண்டும். ‘அவருடைய மகன் நான். இது நமது தோட்டம். நமது குடும்பத்துக்குச் சொந்தமான தோட்டம். அங்கே வேலை செய்ய ஆள் தேவைப்படுகிறது. இந்த வேலையை நான் செய்ய மறுப்பது சரியில்லை' என்று புரிந்ததும் அவன் தோட்டத்துக்குப் புறப்பட்டிருக்க வேண்டும்.
இளைய மகன் தந்தை பேசிய மறுகணம், “இதோ போகிறேன்” என்று சொல்லிவிட்டு, போகாததற்கு என்ன காரணமாக இருக்கலாம்?
ஒருபோதும் செய்ய நினைக்காததைச் ‘செய்வேன்’ என்று உறுதியளிக்கிற நபர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இப்படி ஏமாற்றுவது அவர்களுக்குப் பழகியிருக்கலாம். அல்லது ‘போகலாம்’ என்று முதலில் நினைத்துவிட்டு, பிறகு அதில் உள்ள சிரமங்களை நினைத்து ‘போக மாட்டேன்’ என்று முடிவு செய்திருக்கலாம்.
இரண்டாம் மகனைப் போன்ற வர்களின் சொல்லை நம்புவோரின் கதி என்ன?
‘‘வஞ்சனை சொல்வாரடி – கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி” என்று பாரதி சாடுவது இத்தகைய மனிதரைத் தானே?
நாம் எந்த மகனைப் போன்றவர்கள்? இந்த இருவரில் யாரைப் போன்று நாமிருக்க வேண்டும்?
இருவரைப் போன்றும் அல்ல. மூத்த மகன் ‘தோட்டத்தில் வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை' என்று சொன்னது நிச்சயமாய் தந்தைக்கு மனவருத்தம் தந்திருக்க வேண்டும். அவன் பிறகு போய் வேலை செய்தான் என்று தெரிந்துகொள்ளும்வரை, அந்த வருத்தம் அவருக்கு இருந்திருக்கும்.
ஏமாற்றுப் பேர்வழியான இரண்டாவது மகன் ‘நான் போய் வேலை செய்கிறேன்' என்று சொன்னபோது தந்தையின் மனம் மகிழ்ந்திருக்கும். ஆனால், அவன் சொன்னபடி செயல்படவில்லை என்று தெரிந்ததும் அவர் வருந்தியிருக்க வேண்டும். ‘சொந்த மகனே என்னை ஏமாற்றுகிறானே’ என்ற எண்ணம் இந்த வருத்தத்தை பெரும் வேதனையாக ஆக்கியிருக்க வேண்டும்.
'இறைத்தந்தையின் விருப்பப்படி வாழ்வோம்” என்று சொல்லி அதைச் செயல்படுத்தும் நபர்களாக நாமிருந்தால், அவர் மனதுக்கு மகிழ்ச்சியூட்டும் நல்ல மக்களாக நாம் இருப்போம்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com