

இந்த வாரமும் அர்த்தநாரீஸ்வரர்தான். ஏழாம் நூற்றாண்டில் ஆதித்த சோழனால் கட்டப்பட்ட கும்பகோணத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி கோவிலில் இவர் உள்ளார். பெரும்பாலான அர்த்தநாரீஸ்வரர் ரூபங்களில், உமையம்மை பாகத்தில் உள்ள இடதுகரத்தில் தாமரை மலர், கருங்குவளை எனும் நீலோற்பலம் மலரும், கிளியும் இருக்கும். ஆனால், இங்கு மாறுபட்டு முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்திருக்கிறார் சிற்பி.
தங்கள் அழகை அடிக்கடி கண்ணாடியில் பார்த்து ரசிக்கும் மனோபாவம் கொண்டவர்கள் தானே பெண்கள். உலகாளும் அம்மை என்றாலும் பெண்தானே. அவருக்கும் தனது எழில்கோலம் காணும் ஆசை இருக்காதா என்ன? சிற்பியின் கற்பனை அபாரம். அழகிய ஜடாமுடி, மாறுபட்ட அணிகலன்கள். உமையம்மைக்குக் கரங்களிலும் தோள்களிலும் ஆபரணங்களையும் அணிவித்து உள்ளார் சிற்பி. இடையில் செருகியுள்ள கொசுவமும் தனித்துவமாக அடையாளம் காட்டப்பட்டுள்ளது.
ரிஷப தேவரும் இங்கே வேறுபட்டுள்ளார். பொதுவாக ரிஷப தேவரின் கொம்பு சிறிதாக இருக்கும். இங்கு சற்று நீண்டு, வளைந்தும் காணப்படுகிறது. அவர் சிரசிலும் மணிமகுடம்போல் அணிவிக்கப்பட்டுள்ளது. கழுத்திலும், கால்களிலும், இடையிலும் ஆபரணங்கள் அணிந்துள்ளார். அவரது உடலின் மேல் வேலைப்பாடுகள் கொண்ட பட்டுத் துணியால் அலங்கரிக்கப்பட்டுள்ளதையும் மறக்காமல் காட்டியுள்ள சிற்பியின் திறமையை என்ன சொல்லிப் பாராட்டுவது!