

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி பத்து கிலோமீட்டர் தொலைவில், மதுவாகினி ஆற்றங்கரையில் எடநீர் மடம் உள்ளது. அத்வைத வேதாந்தத்தின் ஸ்மார்த்த பாகவதப் பாரம்பரியத்தை போற்றும் விதமாக இந்து மதம், தர்ம சாஸ்திரம், கலாச்சாரம், கலை, இசை, சமூகசேவை ஆகியவற்றை தாரக மந்திரமாகக்கொண்டு இந்த மடம் செயல்பட்டுவருகிறது. இந்த மடத்துக்கு மடாதிபதியாக இருந்த சுவாமி கேசவானந்த பாரதி செப்டம்பர் மாதம் 6-ம் தேதி திருவடி அடைந்தார். அவரைத் தொடர்ந்து, ஸ்ரீஜயராம் மஞ்சத்தாயா மடாதிபதியாக ஆக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 26-ம் தேதி, காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள மகாபெரியவர் மணிமண்டபத்தில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சுவாமிகள் ஆஸ்ரம ஸ்வீகரணம் செய்துவைத்தார். எடநீர் மடத்தின் சம்பிரதாயப்படி புதிய மடாதிபதியின் திருநாமம் ‘சச்சிதானந்த பாரதி'.
ஆதிசங்கரரின் தலைமை சீடர்களில் ஒருவர் தோடகாச்சாரியார். அவரது சீடர்களால் எடநீர் மடம் நிர்வகிக்கப்படுகிறது. திருச்சூரில் தொடங்கப்பட்ட ஸ்ரீ சங்கராச்சார்யா தோடகாச்சாரிய மஹா சமஸ்தானம், திருச்சாம்பரம் பகுதியில் தனது கிளையை (பாடினார் மடம்) கொண்டிருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோடகாச்சாரியார், துளுநம்பி (ஷிவல்லி பிராமணர்) ஒருவருக்கு சந்நியாச ஆசிரம உபதேசம் செய்து வைத்தார்.
கேரளத்தில் இருந்து துளு நாட்டுக்கு இடம்பெயர்ந்த அவரே ஷிவல்லி தேசீய விப்ரசார விசாரகராக நியமிக்கப்பட்டார். வெகுகாலத்துக்கு சச்சிதானந்த பாரதி, பீடாதிபதியாக இருந்து மக்களுக்கு பல உபதேசங்களை செய்துவந்தார். பொதுவாக இந்த மடத்தில் முறையே கேசவானந்த பாரதி, சச்சிதானந்த பாரதி, பாலகிருஷ்ணானந்த பாரதி, ஈஸ்வரானந்த பாரதி என்ற பெயர்களே, சந்நியாசம் பெற்றுக்கொள்ளும்போது வழங்கப்படும்.