

கதையில் நடப்பது போன்றே சில வேளைகளில் நிஜ வாழ்க்கையிலும் நடைபெறுகிறது அல்லவா? இயேசு சொன்ன ஒரு கதையில் நிகழ்வது போன்றே அவர் வாழ்க்கையிலும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் மட்டும் மாற்றம். கதையின் முடிவில் நடந்தது, உண்மை நிகழ்ச்சியில் நடக்கவில்லை. காய்க்காத அத்தி மரக் கதை என்று இதை அழைக்கிறார்கள்.
திராட்சைத் தோட்டத்துக்குச் சொந்தக்காரர் ஒருவர் தனது தோட்டத்தில் அத்தி மரம் ஒன்றை நட்டு வளர்த்தார். அது கனி தர வேண்டிய காலத்தில் அவர் தேடியபோது, கனிகள் எதுவும் இல்லை. எனவே, தோட்டத்தைப் பராமரித்த பணியாளரை அழைத்து, “மூன்றாண்டுகள் பார்த்துவிட்டேன். இந்த மரம் இதுவரை கனிகள் ஏதும் தரவில்லை. எனவே, ஏன் இந்த மரம் தொடர்ந்து நிற்க வேண்டும்? இடத்தை வீணாக அடைத்துக்கொண்டிருக்கும் இம்மரத்தை வெட்டி விடுங்கள்” என்றார் அவர்.
அந்தப் பணியாளர் ஒரு வேண்டு கோளை முன்வைத்தார். “இன்னும் ஓராண்டு பொறுத்துக்கொள்ளுங்கள். நான் மரத்தைச் சுற்றிக் கொத்திவிட்டு, எரு போட்டுப் பார்க்கிறேன். அடுத்த ஆண்டு பாருங்கள். கனி கொடுத்தால் மகிழ்ச்சி. இல்லையென்றால் இதை வெட்டி விடலாம்” என்று வேண்டினார்.
கனி தரத் தானே மரம்? கனி தராத மரம் தோட்டத்தில் தொடர்ந்து இருக்கும் உரிமையை இழந்துவிட்டது என்றுதான் தோட்ட முதலாளி அப்படிச் சொன்னார். அந்தப் பணியாளரோ, மரத்தின் சார்பாக இன்னொரு வாய்ப்பை அவகாசத்துடன் கேட்டார்.
சக மனிதருக்குப் பயன்
கனி தரும் மரத்தைப் போன்று நம்மைச் சார்ந்திருப்போருக்கும் சக மனிதருக்கும் பயன் தருகின்ற மனிதர்களாக நாம் இருக்க வேண்டும். நம்மால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லையென்றால், நாம் கனி தராத வெற்று மரம் போன்றவர்களே.
நல்ல உணவு, நல்ல கல்வி, நல்ல காற்று, நல்ல நீர், நல்ல பொருள்கள், நல்லாட்சி எதுவானாலும் எதைத் தரவேண்டுமோ, அதைத் தராதவர்கள் சபிக்கப்படுவது சரி தானே?
இதுதான் இயேசுவின் வாழ்க்கையிலும் நடைபெற்றது. ஒருமுறை நடந்தே நகரத்துக்குத் திரும்பிய வேளையில், பசியுடன் இருந்த இயேசு வழியோரத்தில் இருந்த ஒரு அத்தி மரத்தைப் பார்த்தார். அந்த மரத்தில் இலைகள் அடர்ந்திருந்ததால் கனிகளும் மிகுந்திருக்கும் என்று நினைத்தார். ஆனால், அந்த மரத்தில் இலைகள் மட்டுமே இருந்தன. கனிகள் இல்லை. கோபத்தில் இயேசு, “இனி நீ கனி கொடுக்கவே மாட்டாய்” என்று சபித்தார்.
மறுநாள் அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப் போய் இருந்ததைச் சீடர்கள் கண்டனர்.
பசி வரும்போது கோபம் எழுவது இயல்பு. “தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று கோபத்தில் பாரதி கொதித்ததை நாமறிவோம். கோபம் எழும்போது சாபமும் வருவது இயல்பு. சபிக்கப்பட்ட அத்திமரம் பட்டுப்போனதில் வியப்பேதுமில்லை.
ஆனால், ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இயேசு கனி தராத ஒரு மரத்தைத் தான் சபித்தார். மனிதர் எவரையும் ஒருபோதும் அவர் சபிக்கவில்லை. நிஜ வாழ்க்கையில் அவர் செய்தது, அவர் சொன்ன கதையில் வரும் அந்தப் பணியாளர் செய்ததுதான். வெட்டி விடலாம் என்று சொல்ப வர்களைச் சமாளித்து, மனிதர்களுக்கு இன்னொரு வாய்ப்பு, இன்னும் சிறிது கால அவகாசம் பெற்றுத் தந்தார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டாள் என்று சொல்லி ஒரு அபலைப் பெண்ணை இழுத்து வந்து இயேசுவின் முன் நிறுத்தி, “இவளைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்கிறது சட்டம். நீர் என்ன சொல்கிறீர்?” என்று கேட்ட கும்பலை நிமிர்ந்து நோக்கி, “உங்களில் பாவம் இல்லாதவர் யாரோ, அவர் இவள் மீது முதற்கல் எறியட்டும்” எனச் சொல்ல, அவர்கள் மாயமாக மறைந்து போனார்கள். அப்பெண்ணிடம், “அமைதியாகச் சென்று வா.” என்கிறார்.
சக்கேயு, சமாரியப் பெண் போன்ற சிலர் கனி தரும் மரங்களாக மாற எது தேவையோ அதை இயேசு செய்கிறார் - கொத்திவிட்டு, உரமிட்டு கனி தரச்செய்யும் பணியாளரைப் போல.
நம்மைத் தீண்டாது
நாம் வாழும் விதத்தால் நம்மை நம்பியிருக்கும் நபர்களும் சக மனிதர்களும் பயன் பெறவேண்டும். ஏதாவதொரு நலனைப் பெற வேண்டும். அப்படி வாழ்ந்தால் கடவுளோ பிற மனிதர்களோ, அவர்களின் கோபமும் சாபமும் நம்மைத் தீண்டாது.
பசித்திருக்கும் மனிதருக்கு உணவு தராத மனிதர்கள், இயேசுவுக்குப் பசித்தபோது கனி தராத அத்தி மரம் போன்றவர்கள் தானே? முடிவில், “சபிக்கப் பட்டவர்களே, என்னிட மிருந்து அகன்று போங்கள்” என்ற கடும்சொற்களை இவர்கள் கேட்க நேரிடலாம்.
கனி தரும் மரங்களைப் போன்று நாம் வாழ்ந்தால், நாம் தரும் கனிகளை உண்டு, பசியாறி, மகிழ்ந்திருக்கும் மனித இதயங்களிலிருந்து எழுந்துவரும் வாழ்த்துகளும் ஆசிகளும் உளமார்ந்த வேண்டுதல்களும், நம்மை இன்னும் இன்னும் தழைத்தோங்கச் செய்யும்.
(தொடரும்)
கட்டுரையாளர், தொடர்புக்கு : majoe2703@gmail.com