Published : 29 Oct 2020 08:56 AM
Last Updated : 29 Oct 2020 08:56 AM

அகத்தைத் தேடி 37: காலனைக் கொன்று காலூன்றி வரும் கப்பல்!

இசுலாமிய மார்க்க வரலாற்றில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்பால் சூஃபிக் கவிஞர்களாக கீழக்கரை ஆசியாம்மாள், தென்காசி ரசூல் பீவி, இளையான்குடி கச்சிப்பிள்ளையம்மாள் என மூன்று பேர் வரலாற்றில் பதிவாகியுள்ளனர். இவர்களுள் தென்காசி ரசூல் பீவி இல்லறத் துறவி. சூஃபிக் கவிஞராக ஞானப்பாடல்கள் பலவும் புனைந்தவர்.

ரசூல் பீவி 1910-ம் ஆண்டுவாக்கில், திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் வாழ்ந்த தாகத் தகவல்கள் சொல்கின்றன. இதைத் தவிர அவரைப் பற்றிய வேறு எந்த வாழ்க்கைச் சுவடுகளையும் அவர் விட்டுச் செல்லவில்லை. இவரது கணவர் பரிமளத்தார் என்று அழைக்கப்பட்ட இசுலாமிய ஞானி. ‘ஞான அமிர்த போதனை' என்ற பெயரில் இவர் பாடிய தத்துவப் பாடல்கள், இவரது மனைவி ரசூல் பீவி இயற்றிய ‘ஞானாமிர்த சாகரம்' ஆகிய இரண்டு நூல்களும் தென்காசி ராமானுஜ அச்சுக் கூடத்தில் உருவான பழம்பதிப்பு ஒன்றில் காணக்கிடைக்கின்றன. ரசூல் பீவியும் அவர் கணவரும் இணைந்து ஆன்மிகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது பற்றிய சான்றுகள் கிடைத்துள்ளன.

கேள்வி - பதில் பாடல்கள்

கணவரை நோக்கி ஞானத் தெளிவு வேண்டி மனைவி வேண்டுவதாக அமைந்த கேள்வி - பதில்களால் அமைந்த பாடல்கள், மனிதர்கள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை நெறிமுறைகளுக்கு வழிகாட்டுகின்றன.

ரசூல் பீவியின் சூஃபி தத்துவப் பாடல்களில் அத்வைதச் சிந்தனை இழையோடுகிறது. சூஃபியிசம், சைவம் இரண்டுக்குமிடையே உள்ள ஒற்றுமை குறித்த ஆய்வுக்கு ரசூல் பீவியின் பாடல்கள் வித்திடுகின்றன.

“நாலாறிலொன்றதை நடத்தும் கருக்கூடலும்

நயன மதிலுகது கலிமா

நாசி நுனி நகமணியும் நமசிவாய

மஞ்சதால நாடுவது ஆதிகலிமா

- என்று பாடியுள்ளார். மற்றொரு பாடலில்

“முள்ளுமுனை உள்ளும் புறமாகவே குடிகொண்ட என் பிரானோங்கார நமச்சிவாயமே ஊழிக்கிரங்கி அருள் தாருமென் குருவான உச்சிரதனமான கடலே!” என்று பாடுகிறார்.

மதம் கடந்த சீடர்கள் கூட்டம்

இவருக்குக் கேரளத்தில் திருவனந்தபுரம், தமிழகத்தில் நெல்லை, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும் கடல்கடந்து இலங்கை வரையிலும் சீடர்கள் இருந்திருக்கிறார்கள். மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களும் இவருக்குச் சீடர்களாக இருந்துள்ளனர். ஞானியம்மா ரசூல் பீவியின் ரகுமான் கண்ணி, பீர்முறாது கண்ணி, குருபரக் கண்ணி, அம்மானை, கப்பல் சிந்து முதலான பாடல்களில் சித்தர்களின் சிந்தனைத் தடங்களை உணர முடியும்.

தமிழக ஞானியர் பலரும் தமது பாடல்களில் தம்மைத் தாழ்த்திக்கொண்டு பாடுவது மரபு. நாயினும் கடையேன், ஈயிலும் இழிந்தேன் என்று வள்ளலார் பாடுவார். ஞானியார் ரசூல் பீவியும் அறிவற்ற பாவி, உடலெடுத்த பாவி, அடிமைக் குடியாள் என்று தன்னையே சாடிப் பாடல்கள் புனைந்திருக்கிறார்.

இறையோனே உன்னை நானிரு கண்ணாலே காணுமுன்னே

கறையான் பிடித்திடுமோ கண்ணே ரகுமானே

- என்று ரகுமான் கண்ணியில் அவர் பாடியுள்ள வரிகளில் பெருகும் ஏக்கம் சம்பந்தப் பெருமானின் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும்’ ஏக்கத்தை ஒத்திருக்கிறது.

கப்பல் சிந்து

நாட்டுப்புறப் பாடல்களில் கப்பல் பாட்டு என்று ஒருவகை உண்டு. மீனவர்கள் மீன்பிடிப் படகுகளில் கடலில் செல்லும்போது ‘ஏலேலோ ஐலசா’ என்று பாடப்படும் இப்பாட்டுகளின் மெட்டிலேயே, தத்துவார்த்தமான பாடல்களை பதினெண் சித்தர்களும் பாடியிருக்கிறார்கள். இலங்கை யில் வெகு மக்களிடையே கப்பல் கும்மி, தமிழகத்தில் கப்பல் சிந்துப் பாடல்கள் பிரசித்தம். உடலைக் கப்பலாக உருவகித்துப் பட்டினத்தடிகள் பல பாடல்களைப் புனைந்திருக்கி றார். இதேபோல் ரசூல் பீவி பாடிய கப்பல் சிந்து, தன்னையே கப்பலாக உருவகித்துப் பாடிய பாடல்களாகும். இப்பாடல்களில் சைவ மரபின் ஒளிச்சேர்க்கைகள் பளிச்சிடுகின்றன.

‘காலனைக் கொன்று காலூன்றி வருங் கப்பல்

காமனை வென்று கடைத்தேறி வருங் கப்பல்

மூலக்கனல் வாரி மூட்டி வரும் கப்பல்

குண்டலினிப் பாம்பினைக் கொண்டுவரும் கப்பல்

கோலமெனும் குருவீட்டைக் கொண்டுவரும் கப்பல்’

பாம்பாட்டிச் சித்தரின் பாடல் இதை ஒத்திருக்கிறது.

‘தசநாடி தசவாயு சத்த தாது

சார்ந்தமரக் கப்பலது தத்திவிழுமே

இசைவான கப்பலினை யேக வெள்ளத்தில்

என்னாளுமோட்டத் துணிந்தாடாய் பாம்பே’

‘நீ இறப்பதற்கு முன் இறந்துவிடு’ என்பது நபிமொழி. ‘உயிருடன் இருக்கும்போதே ஆசாபாசங்களை ஒழித்து பிணத்தைப் போல் நசித்து விடவேண்டும்’ என்பது ராமகிருஷ்ண முனியின் மொழி. இவ்விரு வேறுபட்ட சமயஞானிகளின் ஒருமித்த சிந்தனையை அடியொற்றி கப்பல் சிந்துப் பாடல்களைப் பாடிச் செல்கிறார் ரசூல் பீவி.

மரணத்துக்குப் பின்னும் தொடர வேண்டும்

இல்லறத்தில் நிறைவாழ்வு வாழ்ந்த ஞானியம்மா ரசூல் பீவி, இல்லறத்தையே துறவறத்துக்கு ஏதுவாகக் கொண்டார். தன்னுடைய கணவர் பரிமளத்தாரோடு கருத்தொருமித்து வாழ்ந்த இல்லற வாழ்க்கை, மரணத்துக்குப் பின்னரும் தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறார்.

“மயில் குயில்போல

கூடினமே மாநிலத்தில்

மனமே மறைந்தாலும் இதுபோலே

மண்ணறையில் இருக்க

துயிலுடைந்து

எழுந்ததுபோல்

துணை மஹூலில் இருக்க

துலக்கும் ரஹ்மான் ஆணை

துய்யோன் பரிமளமே

துறவறத்தின் தேடலுக்கும் கணவரின் துணை வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய ரசூல் பீவியின் வாழ்க்கை இவ்விதம் நிறைவு பெற்றது.

(தேடல் தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x