இயேசுவின் உருவகக் கதைகள் 15: நீதி கேட்டு நித்தமும்

இயேசுவின் உருவகக் கதைகள் 15: நீதி கேட்டு நித்தமும்
Updated on
2 min read

‘இப்படியும் ஒரு நீதிபதியா?’ என்று நம்மைத் திகைக்க வைக்கும் ஒரு நீதிபதியும், ‘இப்படிப் போராடும் ஒரு பெண்ணா?’ என்று நம்மை அதிசயிக்க வைக்கும் ஒரு விதவைப் பெண்ணும் வருகிற ஒரு கதை இயேசுவிடம் உள்ளது.

ஒரு நகரில் நீதிபதி ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை. மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவர் இருந்தார். அவர் அந்த நீதிபதியிடம் போய், “என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்” என்று கேட்டுக்கொண்டே இருந்தார். நீதிபதியோ அவளது வழக்கைக் கேட்கவேயில்லை.

கடவுளுக்கு அஞ்சாதவர் என்றால், இந்த நடுவர் கடவுள் நம்பிக்கையற்றவர் என்றுதான் பொருள். இறுதியில் தீயோருக்குத் தண்டனையும் நல்லவர்களுக்கு வெகுமதியும் தந்து நீதியை நிலைநாட்டுபவர் கடவுள் என்ற நம்பிக்கை. இந்த மனிதருக்கு இருக்க வாய்ப்பில்லை. தனக்கு நீதிபதியாகக் கடவுள் இருந்து, தான் வாழ்ந்த விதத்துக்கேற்ப அவர் நீதி வழங்குவார் என்ற நம்பிக்கை இருந்தால் அல்லவா கடவுள் பயம் இருக்கும்?

மக்களையும் மதிக்காதவர் அந்த நீதிபதி. சாதாரண, சாமானிய மக்களை மதிக்கவில்லை என்றால் அவர்கள் மீது பாசமோ, பரிவோ, இரக்கமோ, அடிப்படை மனிதநேயமோ இருக்கவும் வாய்ப்பில்லை. நேசமும் மதிப்பும் எப்போதும் கைகோத்துக்கொண்டே போகின்றன. மதிக்காத ஒருவரை எப்படி அன்பு செய்ய முடியும்? இவர் எப்படி ஒரு ஏழை விதவையை மதித்திருக்க முடியும்?

பெண்களின் நிலை

இயேசுவின் காலத்தில் அவர் வாழ்ந்த பாலஸ்தீனத்தில் விதவைகளின் நிலை மிகப் பரிதாபமான ஒன்றாக இருந்தது. அக்காலத்தில் யூதப் பெண்கள் பதினான்கு, பதினைந்து வயதுச் சிறுமிகளாக இருந்தபோதே திருமண வாழ்வுக்குள் தள்ளப்பட்டார்கள். குடும்பக் கட்டுப்பாடு என்ற எண்ணமே எவருக்கும் தோன்றாத காலமது. அப்படியானால், அப்பெண்கள் முப்பது வயது ஆவதற்குள் எத்தனை பிள்ளைகளைப் பெற்றிருப்பார்கள்?

கணவன் இறந்துவிட்டால் ‘இந்தத் திருமண வாழ்க்கை போதும்’ என்று சொல்லி, அதை மறுக்கும் உரிமை இப்பெண்களுக்கு இல்லை. கணவனின் சகோதரன் ஒருவனை அவர்கள் மணந்துகொள்ள வேண்டும். அறுபது வயதுக்குப் பின்னரே கணவனின்றி அவர்கள் தனித்திருக்க முடியும்.

வயதான விதவைப் பெண்கள், கணவனின் சொத்துக்களைப் பெறுவதற்கு அவனது குடும்பத்து ஆண்கள் சம்மதிக்க வேண்டும். பல வேளைகளில் ஆதரவில்லாத விதவைப் பெண்களின் சொத்துகளைக் கணவனின் உறவினர்கள் பறித்துக்கொண்டனர்.

நீதிமன்றம் ஒன்றே இந்த விதவைப் பெண்களின் புகலிடமாக இருந்தது. ஆனால் நீதிபதியும் பெண்களுக்கு எதிராக இருந்துவிட்டால் இவர்களின் கதி என்னவாகும்?ஆனால், கதையில் எதிர்பாராத திருப்பம் ஒன்று வருகிறது. அதைத்தான் இயேசு மீதிக் கதையில் சொன்னார்.

என்ன ஆனது?

நெடுங்காலமாக விதவைப் பெண்ணைக் கண்டுகொள்ளாத இந்த நடுவர், ‘இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டே இருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையென்றால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டே இருப்பார்’ என்று ஒருநாள் முடிவுசெய்தார். இத்துடன் கதை முடிகிறது.

இக்கதையின் மூலம் இயேசு என்ன சொல்ல விரும்பியிருக்கலாம்? நேர்மையற்ற நீதிபதியுடன் அவர் கடவுளை ஒப்பிடவில்லை. ‘இப்படித் தீயவரான ஒரு நீதிபதியே கடைசியில் ஒரு பெண்ணின் பொறுமைக்கும் விடாமுயற்சிக்கும் பணிந்து, அவளுக்கு நீதி வழங்கினார் என்றால், நீதி வேண்டி தன்னிடம் மன்றாடும் மக்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா?’ என்பதே இக்கதையின் மையச் செய்தி.

நீதிபதிகளுக்கு இக்கதை என்ன சொல்லலாம்? ‘நீங்கள் நினைத்ததையெல்லாம் செய்யலாம்; உங்களைக் கேட்க யாருமில்லை என்று எண்ணி ஏமாந்து போகாதீர்கள். ஒருநாள் உங்கள் வாழ்வும் கணிக்கப்பட்டு நீங்கள் வாழ்ந்த விதத்துக்கேற்ப நீதி வழங்கப்படும்.’

‘எத்தனை நாள் அலைந்திருக்கிறேன்? எத்தனை முறை முறையிட்டிருக்கிறேன்? என்ன பயன்? இன்னும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லையே! மனிதர்களை விடுங்கள். எனக்கு நீதி தர வேண்டும் என்று கடவுளிடம் எத்தனை முறை வேண்டியிருக்கிறேன்?' என்று அங்கலாய்க்கும் அப்பாவி மக்களுக்கு இயேசுவின் இந்தக் கதை என்ன சொல்லலாம்?

‘மனம் தளராமல் போராடுங்கள். தொடர்ந்து நீதி கேட்டுக் குரலெழுப்புங்கள். இன்றில்லை என்றால் நாளை, நாளை இல்லையென்றால் நாளை மறுநாள் அறம் காக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும். நியாயம் வெற்றி பெறும். இறுதியில் தர்மமே வெல்லும்.’

(தொடரும்)

கட்டுரையாளர், தொடர்புக்கு: majoe2703@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in