

சோழ நாட்டில் திருவெள்ளியங்குடிக்கு அருகே சங்கநல்லூரில் யாமுன தேசிகருக்கும், நாச்சியாரம்மாளுக்கும் குழந்தையாக பெரியவாச்சான் பிள்ளை அவதரித்தார். தாய், தந்தை அவருக்கு இட்ட சிறப்புப் பெயர் ‘கிருஷ்ண பாதர்’.
சிறுபருவத்திலிருந்தே கண்ணன் மீது தனிப்பிரேமை கொண்டிருந்தார். இவரது சுற்றம் அதை விரும்பாமல், அவருக்குத் திருமணம் செய்துவைக்க முடிவெடுத்தனர். கிருஷ்ண பாதர் வடநாட்டுத் திருத்தலங்களுக்குத் தனது யாத்திரையைத் தொடங்கினார்.
திருவரங்ப் பிரவேசம்
வட நாட்டு யாத்திரை முடிந்து இவர் திரும்பியபோது, திருவேங்கடத்தில் சிறிது காலம் தங்கி, பின் சொந்த ஊரை நோக்கிப் பயணித்தபோது, வழியில் வயதான வைணவர் ஒருவர் பரம்பரையாகப் பூசை செய்துவந்த சாளக்கிராமத்தை இவரிடம் தந்து, நாள்தோறும் செய்யும் பூசையில் இந்த சாளக்கிராமத்தையும் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டார். கொள்ளிடக் கரையில் வைத்துவிட்டு ஒருநாள் அவர் குளித்துவிட்டுத் திரும்பவந்து பார்த்தபோது சாளக்கிராம மூர்த்தியைக் காணாது தாளாத துயரத்தில் ஆழ்ந்தார். ஒருநாள் அந்த சாளக்கிராமம் வைத்த இடத்தில் கண்ண பெருமானின் மூர்த்தி உருவம் ஒன்று காணப்பட்டது. மிகவும் ஆனந்தத்துடன் அதைக்கொண்டு வந்து நாள்தோறும் பிரார்த்தனையைத் தொடங்கினார். தனது சுற்றங்கள் கொடுத்த பல இன்னல்களைத் தாங்க முடியாமல், திருவரங்கம் வந்தடைந்தார்.
திரு அரங்கனின் நேரடி தரிசனம் கிடைக்காமல், அவரது நினைவாகவே, ஆகாரம் உட்கொள்ளாமல் பட்டினியாகக் கிடந்தார். திருவரங்கன் ஒரு பெண் வடிவங்கொண்டு வந்து இவருக்குப் பாலும் பழமும் தந்து அருள்புரிந்தார். இந்த நிகழ்வைக் கண்ட அந்தணர்கள், இவருக்கு திரு அரங்கநாதன் சேவையைக் காண்பதற்கு ஏற்பாடுசெய்து, அவரை அழைத்துக் சென்றனர். திரு அரங்கனின் சேவையில் தன்னை இழந்த கிருஷ்ண பாதர் திருவரங்கத்திலியே தங்கிவிட்டார். இவர் வைணவ பரம்பரையினர் வழங்கும் ஆச்சான் என்னும் பெயருடன் இருந்தமையால், இவரின் தனித்துவம் தெரிய பெரியவாச்சான் பிள்ளை என அழைக்கலாயினர். இவருக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணசூரி என்பவர் சிறியவாச்சான்பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.
பிரபந்தங்களுக்கு உரை
பெரியவாச்சான் பிள்ளையவர்கள், நம்பிள்ளையிடம் மாணாக்கனாக சேர்க்கப்பட்டார். பெரியவாச்சான்பிள்ளையின் அறிவையும், கற்றுக்கொள்ளும் ஆர்வத்தையும், கேட்டு அறிந்து கொள்வதில் உள்ள ஈடுபாட்டையும் கவனித்த திரு நம்பிள்ளை இவரை அரவணைத்துக்கொண்டார். நஞ்சீயர் என்பவரிடமும் இவர் மாணாக்கனாகப் பயின்றார்.
பெரியவாச்சான்பிள்ளை சமய மறைகள், திவ்ய பிரபந்தங்கள், ராமாயணம் ஆகியவற்றில் வைணவக் கோட்பாடு விளக்கத்துக்குத் தேவையானதாக விளங்கும் நுண்பொருள்களையும், பெரியோர் அருளிச் செய்த பாடல்களின் ஆழ்பொருளையும் நன்கு கற்றறிந்து விளக்கிக் கூறியதைக் கண்டு, திருவாய்மொழிக்கு விளக்க உரை எழுதும்படி நம்பிள்ளை பணித்தார்.
பன்னிரு ஆழ்வார்களின் கனிச்சுவை நிறைந்த ஆங்காங்கே எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பெருமைகளை புகழ்ந்து பாடிய பாசுரத் தொகுப்புகளே நாலாயிர திவ்ய பிரபந்தமாகும். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் அமைந்துள்ள 24 பிரபந்தங்களுக்கும் இவர் ஒருவரே விரிவுரை வழங்கியுள்ளார். இவர் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழியிலிருந்து சுமார் 400 பாசுரங்களின் விளக்க உரைகள் காணாமல் போகவே, அவற்றுக்கு மட்டும் மணவாளமாமுனிகள் உரையெழுதியுள்ளார்.
பெரியவாச்சான்பிள்ளை வைணவ சமயத்தின் உயிர்நிலைக் கோட்பாடு, வழிவழியாகக் கடைபிடித்த மரபுகள், பெருமாளின் அவதார மாட்சிமைகள், விசிட்டாத்துவைதத்தின் தத்துவங்கள், வடமொழி வேதம், உபநிடதம், புராணம், இதிகாசம் ஆகியவற்றிலிருந்து எண்ணற்ற மேற்கோள்களைக் காட்டி பல கருத்துக்களையும், ஆழ்வார் பாடல்களில் உள்ள உள்ளுறை கருத்துக்களையும் தமது உரையில் நுண்ணறிவு பளிச்சிடும் வகையில் கையாண்டுள்ளார்.
மணவாள மாமுனிகள் தான் எழுதிய உபதேச ரத்தின மாலையில் பெரியவாச்சான்பிள்ளையை கௌரவப்படுத்தும் வகையில் இரண்டு பாசுரங்கள் எழுதியுள்ளார். பெரியவாச்சான்பிள்ளை எழுதிய உரையில் பிரபந்தங்களின் உரையை பெண்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டது எனலாம்.
கிருபைக்கா, லீலைக்கா
சம்வாதத்தில் சிறந்த பெரியவாச்சான் பிள்ளையிடம், “நாம் எல்லோரும் எம்பெருமானின் கிருபைக்கு உகந்தவர்களா அல்லது அவருடைய லீலைக்கு உகந்த வர்களா?” என்று கேட்கப்பட்டது.
“சம்சார சாகரத்தில் சிக்கி உழலுகிறோம் என்று நினைத்தால் நாம் எம்பெருமானின் அருளுக்கு ஆளாவோம். நாம் சம்சார சாகரத்தில் மிகவும் சந்தோசமாக இருப்பதாக எண்ணினால், நாம் எம்பெருமானின் லீலைக்கு உகந்தவர்கள் ஆவோம்” என்கிறார்.
பெரியவாச்சான்பிள்ளை திருமலையில் எழுந்தருளி, பெருமாளிடமிருந்தே திருவேங்கட முடையான் விக்கிரகத்தைப் பெற்று அதை சங்கநல்லூரில் பிரதிஷ்டை செய்துள்ளதாக சங்க நல்லூர் சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. இவர் 95 வயதுவரை வாழ்ந்தபின் பெருமாள் திருவடியை அடைந்ததாக அறிகிறோம்.
பெரியவாச்சான்பிள்ளையின் சொல்படி நாம் எல்லாரும் கடவுளின் கிருபைக்கு உள்ளாவோம்.