

மகிஷாசுரனை வதம்செய்ய ஒரு பெண் சக்தியால்தான் மட்டும் என்பது மகிஷனுக்கு, பிரம்மன் கொடுத்த வரம். அதனால் எல்லா தெய்வங்களின் கூட்டுசக்தியாக உருவாக்கப்பட்ட பெண் தெய்வம் மகிஷாசுரமர்த்தினி. அனைத்து கடவுளர்களின் ஆயுதங்களை தாங்கியவள். துர்க்கையின் பிரதிபிம்பமாகக் கொண்டாடப்படும் மர்த்தினிக்கு பத்து கரங்கள். திரிசூலம், சங்கு, கட்கம், சக்கரம், பாணம், வஜ்ரம், அபயம், டமரு, நாகபாசம், கேடயம், பரசு, அங்குசம், தனுஷ், மணி, கொடி, கதை, கண்ணாடி, கள்ளி போன்ற ஆயுதங்களை தரித்திருப்பாள்.
மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, மகிஷனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே… ஜெய ஜெய என உன்னைப் போற்றுகிறேன்… இது `அய்கிரி நந்தினி நந்தித மேதினி…’ எனத் தொடங்கும் மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரப் பாடலின் முதல் ஸ்லோகத்தின் விளக்கம்.
மெய்நிகரில் இசை சங்கமம்
மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தை பம்பாய் சகோதரிகள், சூலமங்கலம் சகோதரிகள் உள்பட பலர் பாடியிருக்கிறார்கள். இந்த ஸ்தோத்திரப் பாடலை பல்கேரிய இசைக்குழுவான சோஃபியா செஷன் இசைக் குழுவின் துணையுடன், சிம்பொனி இசையில் இசையமைத்து பாடியிருக்கிறார் எஸ்.ஜே.ஜனனி.
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மெய்நிகர் வழியாகவே சிம்பொனி இசைக் குறிப்புகளை அனுப்பி, பிரம்மாண்ட ஒலிக் கலவையுடன் தந்திருக்கிறார். ஏறக்குறைய 21 நிமிடங்கள் ஒலிக்கும் `அய்கிரி நந்தினி’ பாடலின் இரண்டு இடையிசைப் பகுதிகளில் இந்திய மரபு வாத்தியமான மாண்டலினையும் மத்திய கிழக்கு நாடுகளின் நரம்பு வாத்தியமான `ஊட்’டையும் (Oud) வாசிக்கும் சன்னி கர்மாகரை பயன்படுத்தியிருப்பது சிறப்பு. பிரம்மாண்டமான ஒலிகளுக்கிடையில் மயிலிறகின் வருடலைப் போல் இத மளிக்கின்றன இந்த வாத்தியங்களின் ஒலி!
சிலிர்க்கும் அனுபவம்
"எத்தனையோ இசைக் கோவைகளை வாசித்திருக்கிறோம். ஆனால் இந்த கோவைகளை வாசிப்பது புத்துணர்வு அளித்தது. புது விதமான சிலிர்க்கும் அனுபவமாக இருந்தது" என்கிறார் இசைக்குழு நடத்துநர் ஜார்ஜி எலன்கோ. அவர்கள் வாசித்த சிம்பொனி இசை பந்துவராளி ராகத்தில் அமைந்திருந்ததுதான் இதற்குக் காரணம்! `அய்கிரி நந்தினி’ பாடலை ரமேஷ் வைத்யா தமிழில் மொழியாக்கம் செய்யவுள்ளார். விரைவிலேயே தமிழிலும் மலைமகளை போற்றும் பாடலை சிம்பொனி இசையில் கேட்கலாம்!
அய்கிரி நந்தினி பாடலைக் காண: https://youtu.be/SYt9KxQntpA