Published : 15 Oct 2020 09:15 am

Updated : 15 Oct 2020 09:15 am

 

Published : 15 Oct 2020 09:15 AM
Last Updated : 15 Oct 2020 09:15 AM

அகத்தைத் தேடி 36: லூசி கண்ட சிவதாண்டவம்

sivathandavam

சிவதாண்டவம் நூற்றி எட்டு என்று புராணங்கள் கூறுகின்றன. அண்டம், பேரண்டம் என்று விரிந்து செல்வதாய் விஞ்ஞானம் கூறும் பிரபஞ்ச இயக்கத்தை சிவதாண்டவத்துடன் ஒப்பிடுகிறது மெய்ஞ்ஞானம். சிவனின் ஊழித்தாண்டவம் எப்படி இருக்கும் என்பதை பாரதி தன் வசனகவிதையில் இப்படி வர்ணிக்கிறான்.

“ஊழி முடிவு இப்படியேதானிருக்கும்


உலகம் ஓடு நீராகிவிடும்

தீ நீர்

சக்தி காற்றாகிவிடுவாள்

சிவன் வெறியிலே இருப்பான்

இவ்வுலகம் ஒன்றென்று தோன்றும்

அஃது சக்தி என்பது தோன்றும்

அவள் பின்னே சிவன் நிற்பது தோன்றும்!”

இவற்றைப் பற்றி யாதொன்றும் அறிந்திராத லூசி என்ற ஜெர்மானியச் சிறுமி, சிவனின் ருத்ர தாண்ட வத்தைப் புத்தகம் ஒன்றில் படமாகக் கண்ட மாத்திரத்தில் பரவசமாகி கிட்டத்தட்ட சமாதி நிலையை எட்டிவிடுகிறாள்.

படத்திலிருப்பது இந்தியாவில் வழிபடப்படும் சிவபெருமான் என்ற தகவல் அவரது அன்னையின் மூலம் அவருக்கு தெரியவந்தது. லூசி, தன்னை மறந்த லயத்தில் மூழ்க, அந்தச் சிவதாண்டவக் காட்சி காரணமாயிற்று. திருவண்ணாமலையில் ஒரு காலும் ஜெர்மனியில் மற்றொரு காலுமாக நின்றான் சிவன்.

சிவபெருமானின் பயங்கரமான சம்ஹாரத் தோற்றம் கண்டு லூசி அஞ்சவே இல்லை. தம்மை ஆட்கொள்ள வந்த கருணைக் கடலாகவே சிவனைக் கண்டார் லூசி. சிவனை அழிக்கும் கடவுள் என்று ஏன் சொல்கிறார்கள் என்பதைப் படித்தறிந்தாள். அவன் அழிக்கப் புறப்பட்டது மனித மனத்தின் அகந்தையாகிய மாயை என்பதை அவள் புரிந்துகொண்டாள்.

லூசியின் அகத்தேடல் எழுத்தாக மலர்ந்தது. அவர் எழுத்தாளர் ஆனார். மனம் ஏகாந்தத்தை நாடியது. அவர் ஞானியாகக் கனிந்தார்.

கண்ணை மூடினால் கூத்தபிரானின் தாண்டவம். யார் இந்தச் சிவன்? ஏன் இப்படி எனக்குள் புகுந்து, என்னில் எழுந்து, தன்னிலை மறந்து தாண்டவமாட வேண்டும்? என்னதான் ஆயிற்று எனக்கு?

போரின் கோரத் தாண்டவம்

விடை தெரியாத இந்தக் கேள்வி லூசியை விரட்டிய அதேவேளை, வெளியுலகில் இரண்டாம் உலகப்போர் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தது.

நகரத்திலிருந்து லூசி விலகி நடந்தாள். அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்தாள். மனித சஞ்சாரமற்ற வனாந்தரத்தில் தனக்கென ஒரு குடிசை கட்டிக்கொண்டு தங்கிவிட்டாள். கண்ணை மூடினால் போதும். சிவ தாண்டவம் பேரோசையாகக் கேட்கத் தொடங்கிவிடும். காட்சியாக விரியத் தொடங்கிவிடும்.

புலித்தோலுடன், பொன்னார் மேனியனாக சூலாயுதம் ஏந்தி, மண்டை ஓடுகளின் மாலைகள் ஆட சிவதாண்டவ தரிசனம்.

அமெரிக்காவில் கானகத்தில் குடி யேறிய ஹென்றி டேவிட் தொரோ தன்னளவி்ல் ஒரு இயற்கையை நாடும் ஏகாங்கியாகவே இருந்தார். துறவியாகத் கனியவில்லை. ஆன்மிக அனுபவங்கள் அவருக்குக் கிட்டவில்லை. ஆனால் லூசிக்குத் திருவண்ணாமலை ஈசனின் அழைப்பே, பகவான் ரமணரின் ஆன்மானுபூதியில் கொண்டுபோய் சேர்த்தது.

கானகக் குடிசைக்குள் ரமணர்

ஒரு நாள் காட்டில் உலவச் சென்ற லூசி குடிசைக்குத் திரும்பும் வழி தெரியாது திகைத்துப் போனார். தவறவிட்ட வழியே சரியான வழிகாட்டவும் செய்கிறது. இருட்டுக்குள் பொட்டுப் போல் ஒரு வெளிச்சம் தெரிய, அதை நோக்கி நடக்கத் தொடங்கினார். அங்கே ஒரு குடிசை இருந்தது. உள்ளே யாருமில்லை. சுவரில் ஒரு புகைப்படம். அதன்மேல் பட்டுத் தெறிக்கும் தீப வெளிச்சம். படத்திலிருந்தபடி புன்னகைத்தார் பகவான் ரமணர். மீண்டும் சமாதி நிலையை அனுபவித்தார். அக்குடிசையில் குடியிருப்பவரும் ஒரு பெண்ணே. பகவான் ரமணர் பற்றிய பல விஷயங்களை அவரிடமிருந்து தெரிந்துகொண்டார் லூசி. அவர் செல்ல வேண்டிய பாதை புரிந்துபோயிற்று.

தமிழைத் தேடி

பகவான் ரமணரைப் புரிந்துகொள்ளத் தமிழ் படிக்கும் ஆவல் லூசியிடம் மேலிட்டது. பான் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பதில் பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டுத் தமிழிலிருந்து மொழிபெயர்க்கும் அளவுக்கு தன் ஆற்றலைப் பெருக்கிக்கொண்டார் லூசி. பகவான் ரமணரின் உபதேசங்களைத் தமிழிலிருந்து ஜெர்மன் மொழிக்கு ஆக்கித்தரும் பெரும் பணி அவருக்காகக் காத்திருந்தது. தமிழ் இலக்கிய, இலக்கண அறிவில் ஆழம்கண்ட லூசி, தனது மொழிபெயர்ப்புப் பிரதியுடன் திருவண்ணாமலை ரமணாசிரமத்துக்குப் பயணப்பட்டார்.

ரமணாசிரமத்துக்கு வந்து சேர்ந்த லூசிக்கு பகவானின் சீடர்கள் பலரும் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க உதவினார்கள். அவர்களில் டி.கே. சுந்தரேச அய்யரும் கணேசனும் முக்கியமானவர்கள். ஆசிரமவாசிகள் லூசியை அன்னையாகவே கருதி லூசிமா என்றே அழைத்தார்கள். பகவான் ரமணர், சமாதியடைந்து ஆறு ஆண்டுகள் கழித்தே லூசிமா ஆசிரமம் வந்து சேர்ந்தார். ஆனால் பகவானின் இருப்பை வெகுவாகத் தன்னுடன் உணர்ந்தார். அவர் பிரதிமையின் காலடியில் தன் மொழிபெயர்ப்புப் பிரதியை வைத்து வணங்கினார். சத்தியமயி என்ற புனைபெயரில் அவரது ஜெர்மன் மொழியாக்க நூல்கள் வெளியிடப்பட்டன.

பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றை ஜெர்மன் மொழியில் எழுதி வெளியிட்டார். ஆசிரமத்தில் பெண்கள் தங்கக் கூடாது என்ற விதியை ஏற்று நிருதிலிங்கம் அருகே குடில் ஒன்றில் வசித்தார். தனிமைத்தவம் மட்டுமன்றி ‘Hunting The I' என்ற நூலை வெளியிட்டதுடன் ஆசிரமத்தின் ‘Mountain Path' இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். லூசிமாவின் கால்களும் கைகளும் செயலிழந்தபோது ரமண பக்தர்கள் அவரை ஆசிரமத்திலேயே தங்கிவிடுமாறு வேண்டினர். அவ்வாறே தங்கி தமது 91 வயதில் ஆசிரமத்திலேயே அருணாசல ரமணரிடம் கலந்தார்.

வெளிநாட்டு அறிஞர்களான ஸிம்மர், மாக்ஸ் முல்லர், கார்ல் யுங் ஆகியோருக்கு எவ்வளவோ திட்ட மிட்டும் ரமணாசிரம அனுபவம் என்ற பேறு கிடைக்கவில்லை. ஆனால், சிவதாண்டவ தரிசனமும், ரமணரை மொழிபெயர்த்ததன் வழியாக ரமண அனுபவமும் லூசிமாவுக்கு இயல்பாகச் சித்தித்தன.

(தேடல் தொடரும்) கட்டுரையாளர், தொடர்புக்கு :thanjavurkavirayar@gmail.com


அகத்தைத் தேடிசிவதாண்டவம்Sivathandavamகோரத் தாண்டவம்புராணங்கள்சிவனின் ஊழித்தாண்டவம்சிவன்சிவபெருமான்தமிழைத் தேடி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x