

கையில் நீண்ட வாளுடனும் கேடயத்துடனும் மேலிரு கரங்களில் மான், மழு ஏந்தி ஆறு அடி உயரத்தில் ஆஜானுபாகுவாக கம்பீரமாகக் காட்சியளிக்கும், ஈஸ்வரனின் போர்க் கோலத்தை ராஜராஜன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயிலில் காணலாம். வேறு எங்கும் காண முடியாத சிற்பம் இது. வடக்குப் பிரகாரத்தில் கோமுகத்தின் அருகில் போர்க் கோல ஈஸ்வரன் வீற்றுள்ளார். போர்க்கோலத்துக்கு ஏற்ப வித்தியாசமான ஜடா முடியும் அணிமணிகளும் உள்ளன. வலது காதில் மகரக் குண்டலம், இடது காதில் குண்டலம், மார்பில் அணிகலன்கள், முப்புரி நூல் உட்பட அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
இடுப்பில் உள்ள ஆபரணத்தில் சோழர்களின் சிம்மத்தை மறக்காமல் வடித்துள்ள சிற்பி, இடையில் அணிந்துள்ள ஆடை யைக் கூட போர்க் கோலத்துக்கு ஏற்ப மாறுபட்டு வடித்திருப்பதை என்னவென்று சொல்வது! ஈஸ்வரன், கால்களில் தண்டையும் சிலம்பும் அணிந்துள்ளார்.
இந்தச் சிற்பத்தை பார்த்த அன்றைய வீரர்களுக்கு போருக்கான உக்கிரம் மனதில் தோன்றியிருக்கும். கோவில்களில் இது போன்ற சிற்பங்களைப் படைத்ததன் மூலம் ஆன்மிகம் மட்டுமல்லாமல், நம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் நமது முன்னோர் வெளிப்படுத்தியுள்ளனர்.